சனி, 14 மே, 2011

உயர்கல்வி பயில வசதியின்றி

விழுப்புரம், வளவனூர் அருகே உள்ள கல்லப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பலராமன். புதுச்சேரி தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவரது மகள் ருத்ரா(17), வளவனூர் அரசு மகளிர் பள்ளியில் படித்தார். இவர், பத்தாம் வகுப்புத் தேர்வில் 500 மதிப்பெண்ணிற்கு 471 மதிப்பெண்கள் பெற்றார். தற்போது பிளஸ் 2 பொதுத்தேர்வில், தமிழ் பாடத்தில் 186 மதிப்பெண்களும், ஆங்கிலம்151, இயற்பியல் 189, வேதியியல் 190, உயிரியல் 178, கணிதத்தில் 186 என, 1,200க்கு 1,080 மதிப்பெண்கள் எடுத்து, பள்ளி அளவில் முதலிடம் பிடித்து சாதித்துள்ளார்.

தனியார் நிறுவன காவலாளியாக வேலை செய்து வரும் ஏழை குடும்பத்தைச் சேர்ந்த பலராமன், தனது முதல் மகள் தரணியாவை மிகவும் சிரமப்பட்டு பொறியியல் படிக்க வைத்து வருகிறார்.தொடர்ந்து இரண்டாவது மகளான ருத்ராவும், 1,080 மதிப்பெண்கள் எடுத்து சாதித்துள்ளதால், உயர் கல்விக்கு முயற்சித்து வருகிறார். ஏழை குடும்பத்தில் பிறந்ததால், உயர் கல்வி படிக்க போதிய வசதியின்மையால் தவித்து வருகிறார் ருத்ரா. தனது உயர் கல்வி கனவினை நனவாக்க கருணை உள்ளம் கொண்டவர்கள் உதவிட வேண்டுமென, அவர் கோரிக்கை வைத்துள்ளார். அவரது மொபைல் எண்: 97872 63435.

இன்ஜினியரிங் படிக்க ஆசைப்படும் ஏழை மாணவிக்கு உதவி கிடைக்குமா?அரசு பள்ளியில் படித்து அதிக மதிப்பெண் பெற்றும், போதிய நிதி வசதியில்லாதாதல், இன்ஜினியரிங் படிப்பை தொடர முடியாத நிலை ஏழை மாணவிக்கு ஏற்பட்டுள்ளது. இவரது கனவை நனவாக்க யாராவது ஆதரவுக்கரம் நீட்டுவார்களா என காத்திருக்கிறார் உடுமலை மாணவி கனக துர்கா.

உடுமலை அருகே போடிபட்டியை சேர்ந்த ஆறுச்சாமி டீக்கடைக்கும் அவரது மனைவி கமலவேணி கூலி வேலைக்கு சென்று வருகின்றனர்; இவர்களுக்கு கனகதுர்கா, சத்யா என இரண்டு மகள்கள் உள்ளனர். வறுமை வாட்டினாலும் மகள்களை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்ற ஆசையில் அருகிலுள்ள அரசுப்பள்ளியில் படிக்க வைத்து வருகிறார். மூத்த மகள் கனகதுர்கா உடுமலை பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பெற்றார்.
இவர் தமிழில் 189, ஆங்கிலம் 181, வேதியியல் 199, கணிதம் 195, இயற்பியல் 186, கணிப்பொறியியல் 189 என மொத்தம் 1,139 மதிப்பெண்கள் பெற்றார். பி.இ., எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் (இசிஇ) படிக்க வேண்டும் என்பது மாணவி கனகதுர்காவின் கனவாக உள்ளது.

மாணவி கனகதுர்கா கூறியதாவது:உடுமலை பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலும் படித்தேன். பி.இ., எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் படிக்க வேண்டும் என்ற விருப்பத்தை நிறைவேற்ற நல்ல மதிப்பெண் எடுக்க கடுமையாக உழைத்தேன். தற்போது, பள்ளி அளவில் முதலிடம் பெற்று அதிக மதிப்பெண்ணும் எடுத்துள்ளேன். எனது வெற்றிக்கு பெற்றோர் மற்றும் ஆசிரியர்களும் உறுதுணையாக இருந்து ஊக்கமளித்தனர்.

குடும்பத்தில் வறுமை வாட்டினாலும், நன்றாக படிப்பதற்கு தேவையான உதவிகளை பெற்றோர் செய்து கொடுத்தனர். தினசரி வேலைக்கு சென்றால் தான் அடுத்த வேளை உணவு என்ற நிலையில், எனது கனவு நினைவாக்க முடியாத சூழ்நிலை உள்ளது. எனது கனவை நினைவாக்க யாராவது உதவிக்கரம் நீட்டினால், கண்டிப்பாக நன்றாக படித்து நல்ல நிலைக்கு வருவேன்,' என்றார்.





ஆர்வத்தோடு காத்திருக்கும் இந்த ஏழை மாணவிக்கு தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் உதவி செய்யலாம். இவரை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: 94868 -82233.


 ப்ளஸ் 2 தேர்வில் சாதித்தும் உதவியை எதிர் பார்க்கும் பார்வையற்ற மாணவி



தேன்கனிக்கோட்டை அன்னியாளம் சீர்தம்மனட்டி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி ராமகிருஷ்ணப்பா. இவருக்கு பவித்ரா, ஆஷா, நேத்ரா, அனுராதா ஆகிய நான்கு பெண் குழந்தைகள் உள்ளனர். ஆஷா (18), தளி அரசு மேல்நிலைப்பள்ளியில் ப்ளஸ் 2 படித்து வந்தார். பிறவியிலே கண் பார்வை இழந்த அவர், வகுப்பறையில் ஆசிரியர்கள் பாடம் நடத்துவதை கேள்வித்திறனாலே படித்து வந்தார். ப்ளஸ் 2 தேர்வை, ஆசிரியர் உதவியுடன் எழுதினார்.ப்ளஸ் 2 தேர்வு முடிவு வெளியான போது, 1,028 மதிப்பெண் பெற்று, ஆஷா, பள்ளியில் இரண்டாம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.அவர் பாடவாரியாக பெற்ற மற்ற மதிப்பெண் வருமாறு:தெலுங்கு 169, ஆங்கிலம் 153, வணிகவியல் 171, கருத்தியியல் 138, கணக்கியல் 198, தணிக்கையியல் 199.மாணவி ஆஷா, சட்டம் படித்து வக்கீல் ஆக வேண்டும் என்பதை லட்சியமாக கொண்டுள்ளார். குடும்பம் வறுமையில் வாடுவதால், அவருடைய உயர்கல்வி கேள்விக்குறியாகியுள்ளது.

இதுகுறித்து மாணவி ஆஜா கூறியதாவது:எனக்கு பிறவியிலே கண் தெரியாது என்பதால், சிறுவயதில் பள்ளியில் சேர்க்க மறுத்தனர். ஆனாலும், என்னுடைய ஆர்வத்தால் ஆசிரியர்கள் என்னை பள்ளியில் சேர்த்தனர். கக்கதாசம் உயர்நிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.ஸி., படித்தேன். அப்போது, 393 மதிப்பெண் எடுத்து பள்ளியில் இரண்டாம் இடம் பெற்றேன். அதன்பின், எனக்கு கண் தெரியாது என்பதால், ப்ளஸ்1 வகுப்புக்கு பள்ளியில் சேர்க்க மறுத்தனர். மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் சேருமாறு கூறி அனுப்பினர். கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்து, தளி மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்தேன்.பல்வேறு போராட்டத்திற்கிடையே, ப்ளஸ் 2 படித்தேன். குடும்ப வறுமையிலும், அன்னியாளம் கிராமத்தில் இருந்து, 3 கி.மீ., தூரம் தினமும் நடந்து வந்து தளியில் படித்தேன். ப்ளஸ் 2 தேர்வில், 1,028 மதிப்பெண் பெற்றது, வாழ்க்கையில் எனக்கு மேலும் தன்னம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. சட்டம் படித்து வக்கீலாக ஆசைப்படுகிறேன். என்னுடைய குடும்ப சூழ்நிலையால் படிக்கவசதியில்லை. அதனால், தொண்டுள்ளம் படைத்தவர்கள் என்னுடைய படிப்புக்கு உதவி செய்தால், வக்கீல் கனவை நிறைவேற்றுவேன்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.