புதன், 11 மே, 2011

"இனி ஒரு துப்பாக்கி தோட்டா,

வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, தமிழக மீனவர்கள் மீது, இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்தி, ஒரு மீனவர் கொல்லப்பட்டார். உடனே, அன்றைய இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயை, வாஜ்பாய் தொலைபேசியில் அழைத்தார்.







"இனி ஒரு துப்பாக்கி தோட்டா, இந்திய மீனவர்கள் மீது பாயுமானால், இலங்கைக்கான அனைத்து பொருளாதார உதவிகளையும் உடனடியாக நிறுத்துவோம்' என எச்சரித்தார். விளைவு, வாஜ்பாய் பிரதமராக இருந்த வரை, தமிழக மீனவர்களை தொட்டு பார்க்கும் தைரியம், இலங்கை கடற்படைக்கு இல்லாமல் இருந்தது.சோனியா பதவியேற்றது முதல், தமிழர்களை ஒழிக்கும் ராஜபக்ஷேவிற்கு, வலதுகரமாக விளங்கி வருகிறார். தமிழர்களையும், தமிழகத்தையும் அவமதிக்கும் வண்ணமாக, இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு, ராஜபக்ஷேவை, சிறப்பு விருந்தினராக அழைத்தார். இதையே மீண்டும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியிலும் தொடர்ந்தார்.இலங்கை அதிபரின் சகோதரர், கோத்தபய ராஜபக்ஷே தலைமையிலான குழு, இந்திய ராணுவ உதவியையும், ஆலோசனையையும் பெற, ஐந்து முறை இந்தியா வந்து சென்றிருக்கின்றனர். 2006ல், ஐந்து எம்-17 ஹெலிகாப்டர்கள் இலங்கை விமானப் படைக்கு ரகசியமாக இந்தியா அனுப்பியது. அதில், இலங்கை விமானப்படை சின்னம் பொறித்து உபயோகிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவின் இந்த செயல்பாட்டின் காரணமாக, தமிழர்கள் என்றால், கிள்ளுக் கீரைகள் என, ராஜபக்ஷேவிற்கு உற்சாகம் பிறந்தது. காங்கிரஸ், ராஜபக்ஷேவிற்கு கொடுத்த ஊக்கம், ஊட்டம், தமிழர்களை நிராதரவாக்கியது. இப்படிப்பட்ட காங்கிரஸ், எந்த முகத்தோடு ராஜபக்ஷேவை எதிர்த்து தங்கபாலு தலைமையில், இப்போது போராட்டம் நடத்தியது என்பது தான் புரியாத புதிர்.இலங்கை தமிழருக்கு ஆதரவாக, களம் இறங்கியதாக காட்டி கொண்டவர்களில் கம்யூனிஸ்ட்களும் அடங்குவர். தமிழகத்தில் அவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்களும், வீதியில் வந்து போராடியதும், "தமிழர்கள் மீது' அவர்களுக்கு இருந்த மாசில்லா பற்றின் அடையாளம் என்பதாக தான் நாம் நினைக்கலாம்.ஆனால், ஊடுருவி பார்த்தால், உண்மை வேறுவிதமாக உள்ளது. இலங்கை தமிழர்களை கொன்று குவிக்க, முதன்முதலாக அதிகமாக ஆயுதங்களை சப்ளை செய்தது கம்யூனிஸ்ட் சீனா தான். ஏப்ரல், 2007ல், 25 மில்லியன் டாலர் மதிப்புள்ள ராணுவ தளவாடங்களை, ஆயுதங்களை சீனா, இலங்கைக்கு விற்பனை செய்தது. இரண்டெடுத்தால், ஒன்று இலவசம் போல, இதை வாங்கியதற்காக, ஆறு எப்-17 ரக, சண்டை ஜெட் விமானங்களை இலவசமாக கொடுத்தது.

இந்த ஆயுதங்களால் கொல்லப்பட்ட, எல்.டி.டி.இ.,யினரை விட, அப்பாவி தமிழ் மக்களின் எண்ணிக்கை அதிகம். நேபாளத்தில் பிரசாந்தா தலைமையிலான கம்யூனிஸ்ட்கள் ஆட்சி ஏற்க, ஆலோசனை கூற, இங்கிருந்து கம்யூனிஸ்ட்கள் சென்றனர். ஒவ்வொரு முறை நடக்கும் இந்திய கம்யூனிஸ்ட் மாநாட்டிற்கு, ரஷ்யாவிலிருந்தும், சீனாவிலிருந்தும் பிரதிநிதிகள் வருகின்றனர். அங்கு நடைபெறும் மாநாடுகளுக்கும் இந்திய கம்யூனிஸ்ட்கள் போகின்றனர்.இப்படி உலக கம்யூனிஸ்ட்களோடு கொஞ்சி குலாவும் இந்திய கம்யூனிஸ்ட்கள், சீனா, ஆயுதங்களை இலங்கைக்கு விற்கும் போது ஏன் கண்டிக்கவில்லை, அதிர்ச்சி அடையவில்லை, ஏன் ஒரு அறிக்கை கூட கொடுக்கவில்லை. இதுதான் கம்யூனிஸ்ட்களின் தமிழர் பாசமா?


நன்றி -தினசரி பத்திரிக்கை
 

0 கருத்துகள்: