வியாழன், 11 நவம்பர், 2010

வேண்டும்!

'வேண்டும்' என்ற வார்த்தை மனிதனின் வாணாள் தோழன்! உலகிருக்கும் வரை இந்த வார்த்தையும் வாழ்ந்திருக்கும். முற்றும் துறந்த முனிவருக்கும் அவர் இந்த உலகில் இருக்கும் வரை எதுவும் வேண்டாத நிலை ஏற்பட வாய்ப்பில்லை! சாதாரண மனிதனுக்குச் சொல்லவும் வேண்டுமோ?

எது வேண்டும், எப்பொழுது வேண்டும், எவ்வளவு வேண்டும், எப்படி வேண்டும், ஏன் வேண்டும், யாருக்கு வேண்டும் - அப்பப்பா! இவ்வளவு கேள்விகளா 'வேண்டும்' என்ற வார்த்தைதனைத் தொடர்பு படுத்தி? இந்தச் சொல்லின் நிலை காலத்துக்குக் காலம், கவிஞருக்குக் கவிஞர் எப்படியெல்லாம் வேறுபட்டுள்ளது என்பதை நோக்கும் பொழுது வியப்படைகிறோம்!

திருவள்ளுவர் நாள் தொட்டு இன்றுவரை சிந்தனையாளர்களும், கவிஞர்களும் என்ன என்ன வேண்டும் என்று யார் யாரிடம், எப்படி எப்படிக் கோரியிருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளுவதே இக்கட்டுரையின் நோக்கம்.

ஒவ்வொருவருக்கும் தனது விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்றவாறு, எது வேண்டும் எது வேண்டாம் என்பதும் மாறுகிறது என்பதை நாம் அறிவோம். எனவேதான் வேண்டுவது எல்லாம் கிடைக்கவில்லையெனில் வேதனைப் படுகிறோம்; வெகுண்டு எழுகிறோம்; வெறுப்படைகிறோம். கிடைத்து விட்டால் எகிறிக் குதிக்கிறோம். இதை உணர்ந்தே, வள்ளுவப்பெருந்தகை, விருப்பையும் வெறுப்பையும் கடந்த இறைவன் அடி பற்றுபவர்க்கு எவ்வித இடர்ப்பாடுகளும் இல்லையென்றார்.

திருவள்ளுவர் போன்ற சிந்தனையாளர்கள் எது வேண்டும்.. எது வேண்டாம் என்று வரையறுத்துக் கூறுவர்.

"வேண்டற்க வெஃகி ஆம் ஆக்கம்" (குறள் 177 வெஃகாமை)

- பிறர் பொருளைக் கவர்வதால் வரும் செல்வத்தினை விரும்பாதிருக்க வேண்டும்.

"வேண்டற்க வென்றிடுனும் சூதினை" (குறள்931-சூது)

- வெற்றியே கிடைத்தாலும் ஒரு பொழுதும் சூதாட்டத்தினை விரும்பக்கூடாது.

"வேண்டாமை அன்ன விழுச்செல்வம்"(குறள்-363 அவா அறுத்தல்)

- ஆசை இல்லாமல் இருப்பதைவிடச் சிறந்த செல்வம் இந்த உலகில் வேறெதுவும் இல்லை.

"வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப்படும்" (குறள் 265 - தவம் )

- தவத்தினால் விரும்பிய பயன்களை விரும்பியபடியே அடையலாம்.

"வேண்டின் உண்டாகத் துறக்க" (குறள்-342 துறவு)

- துன்பம் இல்லாத நிலை வேண்டுமானால், பொருள்களின் மீதான ஆசையை, அவை மிகுதியாகக் கிடைக்கும் போதே நீக்கிவிட வேண்டும்.

"வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை" (குறள்-362- அவா அறுத்தல்)

ஒருவன் ஒன்றினை விரும்புவதானால், மறுபடியும்
பிறவாமல் இருப்பதைத்தான் விரும்பவேண்டும்.

- 'எது வேண்டும்' என்பது நிரந்தரமானது அல்ல. இந்த நிலை மாறிக்கொண்டே இருப்பது. அரசியல்வாதிக்கு ஒரு தேவை; ஆன்மீகவாதிக்கு ஒரு விதத் தேவை!


பதினோராம் நூற்றாண்டில் வாழ்ந்த கருவூர் தேவர் வேண்டுவதைப் பார்ப்போம்:

அறிந்த குறி யடையாளங் காண வேண்டும்
அக்குறியிற் சொக்கி மனந் தேற வேண்டும்
அறிந்தவன் போலடங்கி மன மிறக்க வேண்டும்
அலகையது வழிபாதை அறிய வேண்டும்
மறைந்தவரை நிறைந்தவரை நீ தான் காண
மயக்கத்தைக் கண்டுனையும் மதிக்க வேண்டும்
நிறைந்தமதி குறைந்தவகை அறியவேண்டும்
நிச்சயத்தை அறிவார்க்கு முத்திதானே
...................................................................
..............................................................

தொண்டரடிப் பொடியாழ்வார் வேண்டாம் என்பதைப் பார்ப்போம்:

பச்சை மா மலைபோல் மேனி, பவள வாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே - ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான் போய் - இந்திரலோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் - அரங்கமா நகருளானே!

வடலூர் வள்ளலார் இராமலிங்க அடிகளார் வேண்டுவதைச் சற்றே பார்ப்போம்.
ஆளுமை வளர்ச்சிக்கு என்ன என்ன தேவையோ அதை எல்லாம் எவ்வளவு அழகாகக் கேட்கிறார் பாருங்கள்:

ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர் தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும்
மருவு பெண்ணாசை மறக்க வேண்டும்
நினை மறவாதிருக்க வேண்டும், மதி வேண்டும்
நின் கருணைநிதி வேண்டும்
நோயற்ற வாழ்வினில் நான் வாழ வேண்டும்
.......................................................
...........................................................

பாட்டுக்கொரு புலவன் - பார் புகழ் பாரதி- தேசியக்கவி பாரதி - மஹாகவி பாரதி நிறையக் கேட்கிறார்; எல்லோருக்காகவும் கேட்கிறார் - அழகாகக் கேட்கிறார் - அவையெல்லாம் கிடைத்து விட்டால் இம்மானிலம் சுவர்க்கமாக மாறிவிடும்.

ஒன்று பட்டால் உண்டு வாழ்வே - நம்மில்
ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வே
நன்றிது தெரிந்திடல் வேண்டும் -இந்த
ஞானம் வந்தாற் பின் நமக்கெது வேண்டும்?

தமிழரும், தமிழ் நாடும் முன்னேற வேண்டுமெனில்,

பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்
இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும்
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்வதிலோர் மகிமை இல்லை
திறமான புலமையெனில் வெளிநாட்டோர்
அதை வணக்கஞ்செய்தல் வேண்டும்!

தமிழ் மொழியின் பெருமை பொங்க,

"தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும் வகை செய்தல் வேண்டும்"

பாரதி விநாயகர் நான்மணிமாலையில் வேண்டுவார்:

எனக்கு வேண்டும் வரங்களை
இசைப்பேன் கேளாய் கணபதி!
மனத்திற்சலனம் இல்லாமல்
மதியில் இருளே தோன்றாமல்
நினைக்கும் பொழுது நின்மவுன
நிலை வந்திட நீ செயல் வேண்டும்
கனக்கும் செல்வம் நூறு வயது
இவையும் தர நீ கடவாயே!

வேண்டுவதையும், வேண்டாததையும் இப்படிக் கேட்பார்:

நோவு வேண்டேன்; நூறாண்டு வேண்டினேன்
அச்சம் வேண்டேன்; அமைதி வேண்டினேன்
உடைமை வேண்டேன்; உன் துணை வேண்டினேன்
வேண்டாதனைத்தும் நீக்கி
வேண்டியதனைத்தும் அருள்வதுன் கடனே!

இயற்கையை முழுமையாக அனுபவிக்க

காணி நிலம் வேண்டும் - பராசக்தி
காணி நிலம் வேண்டும் அங்கு
தூணில் அழகியதாய் - நல்மாடங்கள்
துய்ய நிறத்தினவாய் -அந்தக்
காணி நிலத்திடையே -ஓர் மாளிகை
கட்டித் தரவேண்டும் -அங்குக்
கேணியருகினிலே -தென்னைமரம்
கீற்று மிள நீரும்

பத்துப் பன்னிரண்டு - தென்னையும்
பக்கத்திலே வேணும் -நல்ல
முத்துச் சுடர்போல - நிலாவொளி
முன்பு வரவேணும்; அங்கு
கத்துங் குயிலோசை -சற்றே வந்து
காதிற் படவேணும்; - என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே - நன்றாயிளந்
தென்றல் வரவேணும்

பாட்டுக் கலந்திடவே - அங்கேயொரு
பத்தினிப் பெண் வேணும் - எங்கள்
கூட்டுக் களியினிலே - கவிதைகள்
கொண்டுதர வேணும் -அந்தக்
காட்டு வெளியினிலே - அம்மா நின்றன்
காவலுறவு வேணும்; - என்றன்
பாட்டுத் திறத்தாலே - இவ்வையத்தைப்
பாலித்திட வேணும்.


இந்த மானிலம் பயனுற வாழ்வதற்கு வல்லமையும், உள்ளம் வேன்டிய படிசெலும் உடலும், நசையறு மனமும், நித்தம் நவமெனச் சுடர் தரும் உயிரும், தசையினைத் தீ சுடினும் சிவசக்தியைப் பாடும் நல் அகமும், அசைவறு மதியும் வேண்டுமாம்.

வாழ்வில் வெற்றி பெற என்ன வேண்டும்?
வாழ்வில் வெற்றி பெற வேண்டியவற்றை பாரதி இவ்வாறு கோருகிறார்:

எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ண வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல் அறிவு வேண்டும்!
பண்ணிய பாவமெல்லாம்
பரிதி முன் பனியே போலே
நண்ணிய நின் முன் இங்கு
நசித்திடல் வேண்டும் அம்மா!

அன்னை பராசக்திமேல் பாரதி வைத்த அளப்பற்கரிய நம்பிக்கையினால் எது வேண்டும் எனக் கட்டளையிடுகிறார்:

செல்வங்கள் கேட்டால் நீ கொடுக்க வேண்டும்
சிறுமைகள் என்னிடமிருந்தால் விடுக்க வேண்டும்
கல்வியிலே மதியினை நீ கொடுக்கவேண்டும்
கருணையினால் ஐயங்கள் கெடுக்க வேண்டும்
தொல்லை தரும் அகப்பேயைத் தொலைக்க வேண்டும்
துணையென்று நின்னருளைத் தொடரச்செய்தே
நல்லவழி சேர்ப்பித்துக் காக்க வேண்டும்!

பாரதிப் பெருந்தகை யோகசக்தியிடம் கேட்கும் வரங்களை சற்று பார்ப்போமா?

எண்ணுங் காரியங்க ளெல்லாம் - வெற்றி
யேறப் புரிந்தருளல் வேண்டும்-பல
பண்ணப் பெரு நிதியம் வேண்டும் -அதிற்
பல்லோர் துணை புரிதல் வேண்டும் -சுவை
நண்ணும் பாட்டினொடு தாளம் -மிக
நன்றாவுளத் தழுந்தல் வேண்டும் -பல
பண்ணிற் கோடிவகை இன்பம் - நான்
பாடத்திறனடைதல் வேண்டும்!

மதி மூடும் பொய்மையிருளெல்லாம் -எனை
முற்றும் விட்டகல வேண்டும்.

ஐயம் தீர்ந்துவிடல் வேண்டும் -புலை
அச்சம் போயொழிதல் வேண்டும் -பல
பையச் சொல்லுவதிங்கென்னே -முன்னைப்
பார்த்தன் கண்ணனிவர் நேரா - எனை
உய்யக் கொண்டருள வேண்டும்.

நல்லதொரு ஆளுமைத் திறன், வாழ்வில் வெற்றி பெறுவதற்கு மிகவும் இன்றியமையாதது அல்லவா? அதற்கு என்ன என்ன தேவைகளோ அவற்றையெல்லாம் எப்படிக் கேட்கிறார் பாரதி என்பதை இக் கவிதை வழிக் காண்போமே! அனைவருக்கும் மிகவும் பழக்கமான கவிதையே. இருப்பினும் ஒரு பார்வையில் அதை நோக்கும் பொழுது அதற்கு ஒரு புதிய பொருள் புலப்படும்.

மனதி லுறுதி வேண்டும்,
வாக்கினி லேயினிமை வேண்டும்;
நினைவு நல்லது வேண்டும்,
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்;
கனவு மெய்ப்பட வேண்டும்
கைவசமாவது விரைவில் வேண்டும்
தனமும் இன்பமும் வேண்டும்;
தரணியிலே பெருமை வேண்டும்.
கண் திறந்திட வேண்டும்,
காரியத்தி லுறுதி வேண்டும்;
பெண் விடுதலை வேண்டும்;
பெரிய கடவுள் காக்க வேண்டும்;
மண் பயனுற வேண்டும்,
வானகமிங்கு தென்படவேண்டும்;
உண்மை நின்றிட வேண்டும்.

சமூக நீதி, சமத்துவம், எல்லோருக்கும் கல்வி, சம வாய்ப்புக்கள் - இவற்றைப் பற்றி, வாதங்களும், விவாதங்களும் வளர்ந்து, நீதி மன்றங்களில் வழக்குகள் நடந்து கொண்டிருக்கும் இந்நேரத்தில் மஹா கவியினுடைய கருத்துக் களை கவிதை உருவில், அவர் வேண்டுவதைக் காண்போம்:

அறிவை வளர்த்திட வேண்டும் - மக்கள்
அத்தனை பேருக்கும் ஒன்றாய்
சிறியரை மேம்படச் செய்தால் - பின்பு
தெய்வம் எல்லோரையும் வாழ்த்தும்!

வயிற்றுக்குச் சோற்றிட வேண்டும் -இங்கு
வாழும் மனிதருக் கெல்லாம்
பயிற்றிப் பல கல்வி தந்து - இந்தப்
பாரை உயர்த்திட வேண்டும்!

சாதிக் கொடுமைகள் வேண்டாம் -அன்பு
தன்னில் செழித்திடும் வையம்.

தெய்வம் துணை செய்ய வேண்டும்.

பாருக்குள்ளே தெய்வம் ஒன்று -இதில்
பற்பல சண்டைகள் வேண்டாம்.

பயிற்றி உழுதுண்டு வாழ்வீர் - பிறர்
பங்கைத் திருடுதல் வேண்டாம்.

எத்தனை பொருள் பொதிந்த அறிவுரை. இத் தமிழ் சமுதாயம் அந்த மகானுடைய அறிவுரை தனை ஏற்று நடந்தால், வையகம் சொர்க்கமாக மாறிவிடாதா?

காலத்திற்குக் காலம் மனித இனத்தின் தேவைகள் மாறி வருவதைக் காண்கிறோம். காலத்தின் தேவைகளையே அதற்கொப்ப ஒரு கவிஞன் பாடல்களும் அமைகின்றன. பாரதிக்குத் தாசனாய்த் தன்னைக் கருதிய பாரதி தாசனின் சீர்திருத்தச் சிந்தனைகளும், அவற்றை நினைவாக்க அவர் வேண்டுவதையும் சற்று பார்ப்போமே!

தமிழுக்கும் அமுதென்று பேர்! - அந்தத்
தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!

என்று களிநடனம் புரிந்தவனல்லவா புரட்சிக்கவிஞன். அவர் தமிழ் வளர்ச்சி எவ்வாறு அமைய வேண்டும் என்று கற்பனை செய்தவற்றை கவிதையிலே இவ்வாறு வடிக்கிறான்:

எளிய நடையில் தமிழ்நூல் எழுதிடவும் வேண்டும்
இலக்கண நூல் புதிதாக இயற்றுதலும் வேண்டும்
வெளியுலகில், சிந்தனையில் புதிது புதிதாக
விளைந்துள்ளஎவற்றினுக்கும் பெயர்களெல்லாங்கண்டு
தெளிவுறுத்தும் படங்களொடு சுவடியெலாம் செய்து
செந்தமிழைச்செழுந்தமிழாய்ச் செய்வதுவும் வேண்டும்
எளிமையினால் ஒரு தமிழன் படிப்பில்லையென்றால்
இங்குள்ள எல்லோரும் நாணிடவும் வேண்டும்.

உலகியலின் அடங்கலுக்கும் துறைதோறும் நூற்கள்
ஒருத்தர் தயை இல்லாமல் ஊரறியும் தமிழில்
சல சலென எவ்விடத்தும் பாய்ச்சிவிட வேண்டும்!
தமிழொளியை மதங்களிலே சாய்க்காமை வேண்டும்
இலவச நூற் கழகங்கள் எவ்விடத்தும் வேண்டும்.

புத்தகங்கள்தான் ஒரு மனிதனை சரிவர வழி நடத்தும் சீறிய நண்பன் என்பதை முழுமையாக உணர்ந்த பாரதிதாசன், புத்தக சாலைகளின் இன்றியமையாமையை எப்படி வெளிப்படுத்துகிறார் என்பதைப் பார்ப்போம்:

புனிதமுற்று மக்கள் புது வாழ்வு வேண்டில்
புத்தக சாலை வேண்டும் நாட்டில் யாண்டும்.

தமிழர்க்குத் தமிழ் மொழியிற் சுவடிச் சாலை
சர்வ கலாசாலையைப் போல் எங்கும் வேண்டும்.
தமிழிலிலாப் பிற மொழிநூல் அனைத்தும் நல்ல
தமிழாக்கி வாசிக்கத் தருதல் வேண்டும்.
அமுதம் போல் செந்தமிழிற் கவிதை நூற்கள்,
சுமை சுமையாய்ச் சேகரித்துப் பல் கலை சேர்
துறை துறையாய்ப் பிரித்தடுக்கி வைத்தல் வேண்டும்.

நாலைந்து வீதிகளுக் கொன்றுவீதம்
நல்லது வாய் வசதியதாய் இல்லம் வேண்டும்;
நூலெல்லாம் முறையாக ஆங்கமைத்து
நொடிக்கு நொடி ஆசிரியர் உதவுகின்ற
கோலமுறும் செய்தித்தாள் அனைத்தும் ஆங்கே
குவிந்திருக்க வகை செய்து தருதல் வேண்டும்
மூலையிலோர் சிறு நூலும் புது நூலாயின்
முடி தனிலே சுமந்து வந்து தருதல் வேண்டும்.

அப்பெருந்தகை விரும்பும் தமிழகம் எப்படி அமைய வேண்டுமாம்?

வீழ்ச்சியுறு தமிழகத்தில் எழுச்சி வேண்டும்
விசை ஒடிந்த தேகத்தில் வன்மை வேண்டும்!
சூழ்ச்சி தனை வஞ்சகத்தைப் பொறாமை தன்னைத்
தொகையாக எதிர் நிறுத்தித் தூள் தூளாக்கும்
காழ்ச்சிந்தை, மறச்செயல்கள் மிகவும் வேண்டும்!
கடல் போலச் செந்தமிழைப் பெருக்க வேண்டும்!
கீழ்ச்செயல்கள் விட வேண்டும் ...............

தமிழும் தமிழகமும் உய்ய

பிறந்துளார் தமிழறிஞர் ஆதல் வேண்டும்
வருந்தமிழர் வையத்தை ஆள வேண்டும்.

தமிழர்களின் எழுதுகோல் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

கருத்தூற்று மலையூற்றாய்ப் பெருக் கெடுக்க வேண்டும்!

பிறகு,

உரத்தினிலே குண்டு புகும் வேளையிலும் மக்கள்
உயிர் காக்கும் மனப்பான்மை உண்டாக்க வேண்டும்!

காதல் கிள்ளை அவருக்கு வேண்டுமாம். அப்பொழுது அவருக்கு வேறென்ன வேண்டும்?
பாரதிதாசன் தொடர்கிறார்...

வானுக்கு நிலவு வேண்டும்
வாழ்வுக்கு புகழ் வேண்டும்
தேனுக்குப் பலாச்சுளை வேண்டும் - என்
செங்கரும்பே நீ எனக்கு வேண்டும்.

மீனுக்குப் பொய்கை வேண்டும்
வெற்றிக்கு வீரம் வேண்டும்
கானுக்கு வேங்கைப் புலி வேண்டும் - என்
கண்ணாட்டியே நீ எனக்கு வேண்டும்!

வாளுக்குக் கூர்மை வேண்டும்
வண்டுக்குத் தேன் வேண்டும்
தோலுக்குப் பூமாலை வேண்டும் - அடி தோகையே நீ எனக்கு வேண்டும்!

நாளுக்குப் புதுமை வேண்டும்
நாட்டுக்கே உரிமை வேண்டும்
கேளுக்கே ஆதரவு வேண்டும் -அடி
கிள்ளையே நீ எனக்கு வேண்டும்.

அவருக்குத் தமிழ் மகளே வேண்டுமாம்!

காதலனொருவன் கேட்கிறான்:

சாதிகள் வீழ்ந்திட வேண்டும் - பெண்ணே
தமிழினமோ வாழ்ந்திட வேண்டும்
மாதொருத்தி வேண்டும் எனக்கும் -தமிழ்
மகளாயிருந்தால் தான் இனிக்கும்.

தமிழ், உடல் உயிர் இவையாண்டும் -ஒரு
தமிழ் மகளாய்ப் பிறந்திட வேண்டும்
.....................

தமிழனுக்குச் சிறப்பு எப்படி வரவேண்டுமாம்?

சிறப்பதென்றால் தமிழாற் சிறக்க வேண்டும்
தீர்வதென்றால் தமிழ் மறந்து தீர்தல் வேண்டும்

என்பார்!

"உலகின் அமைதியைக் கெடுக்காதே!" என்ற கவிதையில் கூறுவார் சீனக்காரனுக்கு:

நன்றாக நீ திருந்த வேண்டும்
ஞாலம் உன்னை மதிக்க வேண்டும்
ஒன்றாய்ச்சேர்ந்து வாழ வேண்டும்
ஒழுக்கம் கெட்டால் என்ன வேண்டும்?

இந்த அறிவுரை அனைவருக்கும் பொதுவன்றோ!


இன்னும் சற்று பின்னர் வந்து இக்காலக் கவிஞர்கள் என்ன வேண்டுகின்றனர் என்று நோக்குவோமே!

புலவர் நீல. பகவன் குழந்தைகளுக்கு கருணை நெஞ்சில் வேண்டும் என வலியுறுத்தி

"எல்ல உயிரும் உறவாக
எண்ண வேண்டும் எல்லொரும்
பொல்லா எண்ணங் கொண்டேதான்
புவியில் வாழ வேண்டாவே
கல்வி கற்ற நாமெல்லாம்
கருணை நெஞ்சில் கொள்வதுதான்
நல்லோர் கூறிய நெறியெனவே
நாளும் போற்றி வாழ்வோமே!"

எனக் கூறுகிறார்.


கவிஞர் முத்து. இராமமூர்த்தி அவர்கள் அவருக்கே உரிய பாணியில் ஒரு குடைக்கீழ் உலகம் வரவேண்டும் என்று விரும்புகிறார். அதற்கு ஒரு படியாய் அவர் வேண்டுவது

"உள்ளங்கள் ஒன்ற வேண்டின்
உறவெனும் பாலம் வேண்டும்"

என்பார்.

வேலையில்லாப் பிணி நாட்டை வாட்டிக் கொண்டிருப்பதைக் கண்டு வேதனையுற்று வேண்டுவார்:

கருவில் பெற்ற திறனோடு
கல்வி ஆற்றல் அனுபவங்கள்
மருவில் நாட்டம் இவையறிந்து
பணிகள் செய்யும் நிலை வேண்டும்!

இந்தியா சொர்க்கமாக வேண்டுமென்றால்,

'திசைகளின் எல்லைக் கோட்டைத்
தேடிநாம் அழித்தல் வேண்டும்'

என்று கூறுவார்.


'கிராமப் புற வறுமை' விலகும் என்ற தலைப்பில் கவிதை படைத்தார். அதில்

"பெற்றிட்ட விடுதலையின்
பெருமையினை நாம் உணர்ந்து
உற்றிங்கே கவனித்து
உயர் வாழ்வு தர வேண்டும்"

எனக் கூறுவார்.


கவிஞர்களை வேண்டுவர் இளந்தலைமுறைக் கவிஞர் மீ. உமாமகேச்வரி அவர்கள்

சிந்தனையில் பிறந்த
நம் சீரிய கவிதைகள்
ஒருவரையாவது
சீர்திருத்த வேண்டாமா?

என்று கேட்பார்.

தமிழே! உன்னை வாழ்த்தவும் வேண்டுமோ எனக்கேட்டு அவர் ஆதங்கத்தை இப்படி வெளிப்படுத்துவார்:

காலம் காலமாய்
கவிஞர்கள்
சொல்லி வருகின்ற
பொய்யுரைகளை
நானும் உனக்கு
சொல்ல வேண்டுமோ?

என்று!

மற்றொரு இன்றைய கவிஞர் நந்தா சொல்லுவார்:

"சொல்ல வேண்டும்
கவிதை - சொன்னதும்
மனசு அங்கே
துள்ளவேண்டும்"

என்று!


கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் வேண்டுவதைப் பார்த்த பின்னர், இகட்டுரையை முடிப்பது சாலப் பொருந்தும்!

'வேறென்ன வேண்டும்' என்ற தலைப்பில் அவர் வேண்டுவன:

எண்ணங்கள் வான் நோக்கி உயர வேண்டும்
எழுத்தெல்லாம் சுடராகி எரிய வேண்டும்
பெண்ணென்றால் தாயென்று பார்க்க வேண்டும்
பெரியோரை அறிகின்ற பெற்றி வேண்டும்
வண்ணங்கள் தெரியாத பார்வை வேன்டும்
வயதுக்குச் சரியானவாழ்க்கை வேண்டும்
கண்ணீரில் சுகங்காணும் ஞானம் வேண்டும்
காமத்தைக் கடந்தேறும்யோகம் வேண்டும்!

சொன்னபடி கேட்கின்ற உள்ளம் வேண்டும்
சொன்னால்தான் சாகின்ற தேகம் வேண்டும்
கண்ணோடு வாய்மைத் தீ கனல வேண்டும்
கருதுவதை உரைக்கின்ற வன்மை வேண்டும்
பண்கொண்ட இசைப்பாடல் பயில வேண்டும்
பறவைகளுக் கிருக்கின்ற சிறகு வேண்டும்
நன்மைகளைச் சுரண்டாத நட்பு வேண்டும்
நாளைக்குக் கலங்காத செல்வம் வேண்டும்!

ஆகாயம் இடிந்தாலும் ரசிக்க வேண்டும்
அழுதாலும் புல்லின் வேர் நனையவேண்டும்
ஏகாந்தம் நம்மோடு வசிக்கவேண்டும்
எப்போதும் சிரிக்கின்ற உதடு வேண்டும்
வேகாத உணவுண்ணப் பழக வேண்டும்
வெறுந்தரையில் படுத்தாலும் உறக்கம் வேண்டும்
போகாத ஊர் கூடப் போக வேண்டும்
பொறி ஐந்தும் அறிவாலே நிரம்ப வேண்டும்!

மலரோடு(ம்) ஆராய்ச்சி நடத்த வேண்டும்
மழை பாடும் சங்கீதம் ருசிக்க வேண்டும்
சிலரோடு கவிதைகளைத் துய்க்கவேண்டும்
சிந்தனையைக் காற்றாகப் பரப்ப வேண்டும்
நிலவோடு நதி நீரில் குளிக்க வேண்டும்
நித்திரையைக் கலைக்காத கனவு வேண்டும்
பலரோடும் ஒன்றாகப் பழக வேண்டும்
பனித்துளிக்குள் உலகத்தைப் பார்க்க வேண்டும்!

தெய்வத்தைத் தேடாத ஞானம் வேண்டும்
தெய்வங்கள் நாமென்று தெளிய வேண்டும்
பொய் சொன்னால் சுடுகின்ற நாவும் வேண்டும்
போராடி வெல்கின்ற புலமை வேண்டும்
கையிரண்டும் உழைக்கத்தான் கவனம் வேண்டும்
காலத்தின் மாற்றத்தை மதிக்க வேண்டும்
மெய்யிந்த வாழ்வென்று நம்ப வேண்டும்
மேகம் போல் பொழிந்து விட்டுக் கலைய வேண்டும்!

எவ்வளவு சிறப்பாக நமக்கு வேண்டியவைகளை கவிப் பேரரசு தனது கவிதையில் எடுத்துரைக்கின்றார்! அவரது கவித்திறத்திற்கு ஒப்பாரும் மிக்காரும் உள்ளனரோ இன்று!

நல்ல கவிதைகள் எழுதி வாழ வேண்டுமாம்; அப்படி வாழ்ந்து விட்டுச் சாக வேண்டுமாம்!

"முத்துரதம் போலதினம் மோகவெறி தூண்டும்
தத்தையர்கள் என்னருகில் தாவி வர வேண்டும்
பத்து விரல் தொட்டு மனம் பாட்டெழுத மீண்டும்
அத்தைமகள் போல பல கொத்துமலர் வேண்டும்!"

வள்ளுவர் காலந்தொட்டு இன்றுவரை தமிழ் கவிஞர்கள் எப்படியெல்லாம், என்ன என்னெல்லாம் வேண்டியுள்ளனர் என்று மனங்குளிரப் பார்த்தோம்!

இவை அத்தனையும் பெறுவதற்கு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொண்டு, வள்ளுவன் வழியில் வாழக் கற்றுக்கொண்டு வையத்து வாழ்வாங்கு வாழ்ந்தால் தவறாது நாம் ஒவ்வொருவருமே வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படுவோம் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை!

0 கருத்துகள்: