30.1.2008 அன்று சர்வோதய தினம் (காந்திஜி மறைந்து 60 ஆண்டுகள் ஆகின்றன.) அன்று மாலை சென்னை தக்கர் பாபா வித்யாலய அரங்கில் பாரதி பதிப்பகம் நூல் அறிமுக விழா ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தது. "காந்திஜியின் கடைசி 200 நாட்கள்" என்ற ஆங்கில நூலின் தமிழ் மொழி பெயர்ப்புதான் இந்த நூல். இந்து நாளிதழில் தினசரித் தொடராக வந்த இந்தக் கட்டுரைகளைக் கத்தரித்துத் தொகுத்து வைத்திருந்தவர்கள் பலர். இந்து நிர்வாகம் இதைப் புத்தகமாக வெளியிட்டபோது பெருத்த வரவேற்பைப் பெற்றது.
புகழ் பெற்ற கிரிக்கெட் வருணனையாளர், முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி வி.ராமமூர்த்திதான் நூலாசிரியர். மிகச் சரளமான தமிழில் மிக அற்புதமாக மொழிபெயர்த்திருக்கிறார் இலக்குவன். தரமான ஆங்கில நூல்களுக்கு இணையான கட்டமைப்போடு வெளி வந்திருக்கிறது இந்த நூல். அச்சிட்ட 3000 பிரதிகளும் அனேகமாக விற்றுத் தீர்ந்து அடுத்த பதிப்பு வெளியிடப் போகிறார்கள் என்பது காந்தி அன்பர்களுக்குச் சந்தோஷம் தரும் விஷயம். இந்த நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் அ.மார்க்ஸ் மற்றும் சுவாமிநாதன் நூலுக்கு மதிப்புரை வழங்கினார்கள். வி.ராமமூர்த்தியும் உரையாற்றினார். பாரதப் பிரிவினையின் போது, கராச்சியில் சிறுவனாக இருந்து, மதுரைக்குப் புலம் பெயர்ந்த குடும்பத்துப் பிள்ளை அவர். மதக் கலவரங்களை நேருக்கு நேர் சந்தித்திருக்கிறார். காந்திஜியிடம் ஈடுபாடு ஏற்பட்டது குறித்து ஆச்சரியப்பட வேண்டியதில்லை. இலக்கிய ரீதியாக கிரிக்கெட் வர்ணனைகளை (உதாரணமாக, "எடுத்தது கண்டார், இற்றது கேட்டார்", "அளவு குறைவான பந்து") அவரது கம்பீரக் குரலில் அந்த நாளில் ஆவலுடன் கேட்டவர்களுக்கு, வயோதிகம் காரணமாக தற்போது குரல் நடுக்கம் கண்டிருப்பது ஆதங்கமாக இருக்கிறது.
காந்திஜி சொன்னதாக ஒரு மேற்கோள் சுவையாக இருந்தது. "You are not dressed for the day until you wear a smile". அப்படிப் பார்த்தால் அந்த அரை நிர்வாணப் பக்கிரிதான், எப்போதுமே முழு உடை உடுத்திக் கொண்டிருந்தவர்.
நிகழ்ச்சியில் கிடைத்த மற்றொரு தகவல்: காந்திஜி டெல்லியில் தோட்டிகளின் காலனியில் ஒரு குடிசையில்தான் தங்கியிருந்தார். குடிசைக்குக் கதவுகள் கிடையாது. யார் வேண்டுமானாலும் அவரை வந்து சந்திக்கலாம். ஆனால், யாராக இருந்தாலும் பத்து நிமிட அவகாசம்தான். ஆனால் அந்தப் பத்து நிமிட முழு நேரமும் அவர்களுக்காகவே ஒதுக்கி விடுவார்.
அன்று அப்படி அவரை வந்து சந்தித்தவர் ஒரு ஏழைக் கிழவி. தமது குடும்பப் பிரச்சினைகளை அவரிடம் சொல்லிப் புலம்பினார். அவருக்கு ஆலோசனைகள் வழங்கிச் சந்திப்பை முடித்துக் கொண்டார் காந்திஜி. அடுத்து வந்தவர் - மூச்சை நிறுத்திக் கொள்ளுங்கள்! சர்.பெதிக் லாரன்ஸ். பிரிட்டிஷ் அரசுப் பிரதிநிதி. இந்தியாவுக்கு ஆட்சி மாற்றம் குறித்துப் பேசுவதற்கு வருகிறார். நம்ப முடிகிறதா? அதுதான் காந்திஜி.
காந்திஜி பற்றிய சர்ச்சைகளுக்குப் பஞ்சமில்லை. காந்திஜி இறப்பதற்கு முன் ராமநாமத்தைச் சொன்னாரா இல்லையா என்பது ஒரு சர்ச்சை. காந்திஜி இறந்தவுடனே வந்த பத்திரிகைக் குறிப்புகளில் அவர் ராமநாமத்தைச் சொல்லி இறந்ததாக இல்லை என்று சாதிக்கிறார்கள் சிலர். பின்னர் வரலாற்று ஆசிரியர்கள் சேர்த்துக் கொண்ட விஷயம் இது என்றும் குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால், காந்திஜி இறந்த உடனேயே, போலீசாரால் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் (நந்தலால் மேத்தா என்பவர் கொடுத்த விபரம்) காந்திஜி 'ராம ராம' என்று சொன்னபடிப் பின்புறமாகச் சாய்ந்தார் என்று கண்டிருக்கிறது. ஆதாரம்: கிரண் பேடியின் www.saferindia.com என்ற இணைய தளம்.
வியாழன், 11 நவம்பர், 2010
"காந்திஜியின் கடைசி 200 நாட்கள்"
4:14 PM
No comments
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக