2010, ஜூன் 23 முதல் 27வரை நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை ஏற்று நடத்தாததற்கும் அதில் பங்கேற்காமல் விலகி நின்றதற்குமான காரணங்கள் குறித்து, பன்னாட்டுத் தமிழாய்வுக் கழகத்தின் தலைவரும் டோக்கியோ பல்கலைக் கழகத்தின் சிறப்புநிலை ஆய்வுப் பேராசிரியருமான நபோரு கராஷிமா ஜூலை 23, 2010 ஹிந்து நாளிதழில் IATR and the world classic tamil confreence என்னும் தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார்.
கராஷிமாவின் கட்டுரைக்கு ஜூலை 25, 2010 ஹிந்து நாளிதழில் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் ம. ராசேந்திரனும் ஆகஸ்ட் 7, 2010 ஹிந்து நாளிதழில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் துணைத் தலைவர்களாக இருந்த டாக்டர் வா. செ. குழந்தைசாமியும் டாக்டர் ஐராவதம் மகாதேவனும் எதிர்வினையாற்றியிருந்தனர். இவற்றைத் தொடர்ந்து நபோரு கராஷிமா பன்னாட்டுத் தமிழாய்வுக் கழகத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து விலகினார். இது தொடர்பான குறிப்பு ஆகஸ்ட் 12, 2010 ஹிந்து நாளிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
கட்டுரையையும் அதற்கான எதிர்வினைகளையும் கராஷிமாவின் விலகல் குறிப்பையும் தொகுத்து மொழிபெயர்த்தவர் டாக்டர் க. பூரணச்சந்திரன்.
நபோரு கராஷிமா (2010, ஜூலை 23)
சென்ற மாதம் கோயம்புத்தூரில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு பல இலட்சக்கணக்கான மக்களை ஈர்த்தது எனப் பத்திரிகைச் செய்திகள் கூறுகின்றன. பன்னாட்டு அறிஞர்களும் உறுப்பினர்களாக இருக்கின்ற, நான் தலைவனாக இருக்கின்ற, பன்னாட்டுத் தமிழாய்வுக் கழகம் இம்மாநாட்டில் பங்கேற்காமல் விலகிநின்றது. அக்கழகத்தின் சார்பாகவும் பொதுநிலையிலும் பங்கேற்காமைக்கான காரணங்களை இங்கு விளக்குவதோடு, தமிழாய்வின் எதிர்காலத்தைப் பற்றியும் சிந்திக்க நினைக்கிறேன்.
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நிகழ்த்துவதற்கு இட்டுச்சென்ற சூழ்நிலைகள்
2009 செப்டம்பரில், பன்னாட்டுத் தமிழாய்வுக் கழகத்தின் சார்பில் ஒன்பதாம் உலகத் தமிழ் மாநாட்டைக் கோயம்புத்தூரில் 2010 ஜனவரியில் வைத்துக்கொள்ளத் தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது. இதைப் பற்றி என்னிடம் எவரும் கலந்து ஆலோசிக்காமை எனக்கு வியப்பளித்தது. ஒன்பதாம் உலகத் தமிழ் மாநாட்டைக் கனிவுடன் நடத்த அரசு முன்வருவதனை ஏற்றுக்கொள்ளப் பின் வரும் மூன்று கருத்துகளை நான் முன்வைத்தேன்.
1) நான்கு மாதங்களுக்குள்ளாக எந்த ஒரு பெரிய அளவிலான சர்வதேச ஆராய்ச்சி மாநாட்டையும் ஒருங்கமைப்பது இயலாது என எனக்குத் தோன்றியது. எனவே இதை நடத்தக் குறைந்தது ஓராண்டேனும் வேண்டும்.
2) பன்னாட்டுத் தமிழாய்வுக் கழகம் நடத்தும் ஆய்வு சார்ந்த அரங்குகளுக்கும் மாநாட்டுடன் நிகழும் பிற அரசியல் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கும் தெளிவான வேறுபாட்டெல்லை இருக்க வேண்டும்.
3) 1995இல் அப்போதிருந்த அரசால் நிகழ்த்தப்பட்ட எட்டாம் உலகத் தமிழ் மாநாட்டு நிகழ்வுகள் கொண்ட ஐந்து நூல்களையும் வெளியிட வேண்டும். இவை 2005இல் வெளியிடத் தயாராகிவிட்டன. இவற்றை வெளியிடுமாறு திரும்பத் திரும்ப வேண்டுதல்களை இன்றைய அரசுக்கு அளித்தும் இவை வெளியிடப்படாமல் தமிழ்ப் பல்கலைக் கழகத்திலேயே வைக்கப்பட்டிருந்தன.
மேற்கூறியவற்றிற்கு விடையாக, அரசு, ஜனவரி 2010இல் நிகழ்த்துவதாகக் கூறிய மாநாட்டை ஜூன் 2010க்கு ஒத்திப்போட்டது. எனது இரண்டாவது, மூன்றாவது வேண்டுகோள்களையும் ஏற்றுக்கொண்டது. தொடர்ந்து மாநிலச் சட்டசபைத் தேர்தல்கள் வரவிருக்கும் நிலையில் இதற்குமேல் தள்ளிப்போட இயலாது என்று என்னை வற்புறுத்தவும் செய்தது. ஆனால் 2010 டிசம்பருக்கு முன் ஒன்பதாம் உலகத் தமிழ் மாநாட்டை நடத்த இயலாது என்பதில் நான் விடாப்பிடியாக இருந்தேன். ஜப்பானில் 2009 செப்டம்பரில் 14ஆம் உலக சமஸ்கிருத மாநாடு வெற்றிகரமாக நிகழ்ந்தது. இதற்கான முதல் சுற்றறிக்கை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே வெளியிடப்பட்டுவிட்டது என்பதையும் இங்கு நினைவிற்கொள்ள வேண்டும்.
இது பற்றிச் சர்வதேச அளவில் புகழ்பெற்ற அறிஞர்கள் பலரையும் கலந்தாலோசித்து அவர்களுடைய ஆதரவோடு அரசுக்கு என் இயலாமையை இறுதியாகத் தெரிவித்தேன். இருப்பினும் பன்னாட்டுத் தமிழாய்வுக் கழகத்தைத் தொடர்புபடுத்தாமல் அரசு தன்னளவில் எவ்விதமான தமிழ் மாநாட்டையும் நடத்திக்கொள்ளலாம் என்றும் தெரிவித்தேன். அதன்படி அரசு தன் சொந்த மாநாட்டை-உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிடைக் - கோயம்புத்தூரில் 2010 ஜூன் மாதத்தில் நிகழ்த்த முடிவுசெய்தது.
பன்னாட்டுத் தமிழாய்வுக் கழகமும் முன்னர் நடந்த உலகத் தமிழ் மாநாடுகளும்
1964இல் புதுதில்லியில் சர்வதேசக் கீழையியல் ஆய்வாளர்களின் மாநாடு நிகழ்ந்தபோது, தமிழாய்வு பற்றி ஆழ்ந்த அக்கறைகொண்ட புகழ்பெற்ற அறிஞர்கள் சிலரால் பன்னாட்டுத் தமிழாய்வுக் கழகம் நிறுவப்பட்டது. இதன்படி முதல் உலகத் தமிழ் மாநாடு கோலாலம்பூரில் 1966இல் நிகழ்ந்தது. இரண்டாம் மாநாடு சென்னையில் 1968இல் நிகழ்ந்தது. 1960கள் திராவிட இயக்கத்தின் உச்சநிலையையும் வெற்றியையும் கண்ட காலம். 1967இல், இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டிற்குச் சற்றுமுன், மக்கள் தீர்ப்பின்படி சி. என். அண்ணாதுரை தலைமையில் திமுக ஆட்சி அமைந்திருந்தது.
சென்னை உலகத் தமிழ் மாநாடு கல்விசார் ஆய்வுகளில் தன் வலிமையை நிரூபித்தாலும் திராவிட இயக்கத்தின் வெற்றியைக் கொண்டாடும் அரசியல் விழாவாகவும் அமைந்துவிட்டது இயல்பானதே. எனவே இந்த மாநாட்டில் வெளிப்பட்ட அரசியல் ஆவேசமும் புரிந்துகொள்ளக்கூடியதும் ஓரளவு அனுமதிக்கக்கூடியதும் ஆகும். என்றாலும் தமிழ்நாட்டில் பின்னர் நிகழ்ந்த மாநாடுகளின் மீது அரசியல்சாயை படிய இது காரணமாகிவிட்டது. 1981இல் மதுரையில் ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு அஇஅதிமுக அரசாங்க ஆதரவின் கீழ் நிகழ்ந்தது. அதுவும் பின்வந்த தேர்தல்களுக்கான மேடையாகிப்போனதால் ஓர் அரசியல் நிகழ்வாகவே முடிந்தது. இது போலவே 1987இல் கோலாலம்பூரில் நிகழ்ந்த ஆறாம் மாநாடும் தமிழ்நாட்டின் அரசியல்வாதிகள் பலர் பெருங்குழுவாகக் கலந்துகொண்டதால் மாநில அரசியலின் பாதிப்புக்குள்ளாகிவிட்டது.
1989இல் மொரீசியஸ் நாட்டின் மோகாவில் நடந்த ஏழாம் மாநாட்டிற்கு நான் செல்லவில்லை என்றாலும் அச்சமயத்தில்தான் நான் பன்னாட்டுத் தமிழாய்வுக் கழகத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். எனவே தமிழக அரசு ஆதரவு நல்கிய எட்டாம் உலகத் தமிழ் மாநாட்டிடைத் தஞ்சாவூரில் நான் ஒருங்கமைக்கும் பொறுப்பு வாய்த்தது. ஆய்வரங்குகளை அரசியல் நிகழ்வுகளிலிருந்து தனிப்படுத்த நான் பலபடியாக முயன்றேன். விளையாட்டரங்கில் நிகழ்ந்த அதன் நிறைவு விழாவில் இரண்டுலட்சம் பேர் கலந்துகொண்டதாலும், இலங்கையைச் சேர்ந்த அறிஞர்கள் சிலரை வெளியேற்றிவிட்டதாலும் மாநாடு சீர்குலைந்துபோயிற்று. இதற்கான விளக்கம் கேட்டு அப்போதிருந்த முதலமைச்சருக்கு நான் ஒரு கண்டனக் கடிதம் எழுதினாலும் எனக்குப் பதில் வரவில்லை.
பன்னாட்டுத் தமிழாய்வுக் கழகத்தின் வரலாற்றுப் பங்கு
பார்ப்பன எதிர்ப்பியக்கமாகத் தோன்றிய திராவிட இயக்கம் 1910களில் நீதிக் கட்சியின் தலைமையில் எழுச்சிபெற்றது. 1930களின் பிற்பகுதியில் மொழி இதன் மையமாயிற்று. வடக்கின் (ஆரிய) ஆதிக்கத்திற்கு எதிராகத் தெற்கின் (திராவிட) சக்திகள் பொருளாதார, அரசியல் போராட்டக் களத்தில் பெரும் அழுத்தத்தை அளித்தன. தென்னாட்டவர்/திராவிடர்மீது வடவர்கள்/ஆரியர்கள் செலுத்தும் ‘ஒடுக்குதலைப்’ புரட்டிப்போடக் கோரியது இந்த இயக்கம்.
ஆனால் 1970களிலிருந்து சாதிச் சமூக அமைப்பிலும் தெற்கின் படிப்படியான பொருளாதார வளர்ச்சியிலும் ஏற்பட்ட மாற்றங்களால் நிலைமை மாறியது. திராவிட இயக்கம் தனது வரலாற்றுப் பணியைப் போதிய அளவு நிறைவேற்றிவிட்டது எனலாம். 1980களிலிருந்து இந்த இயக்கத்தின் நோக்கங்களில் நாம் ஒரு மாற்றத்தைக் காண்கிறோம். இதன்பின் தமிழ் மக்களின் பிரதேச உணர்ச்சியைப் பயன்படுத்தி விடப்பட்ட முறையீடுகளும் திமுக, அதிமுக கட்சி அரசியல் ஆட்சேர்ப்பும் தங்களுடைய அரசியல் தளத்தை-வாக்குச் சேகரிப்புத் தளத்தை விரிவுபடுத்திக்கொள்வதற்காகவே செய்யப்பட்டன.
1995இல் தஞ்சாவூரில் நிகழ்ந்த ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டுக் கட்டுரைத் தொகுப்புகள் இதுவரை விநியோகிக்கப்படாமல் இன்னும் தமிழ்ப் பல்கலைக் கழகத்திலேயே இருக்கின்றன. இவற்றைப் பகிர்ந்தளிக்க உலகச் செம்மொழி மாநாடு சிறந்த வாய்ப்பை நல்கியது. இக்கட்டுரைத் தொகுப்புகளின் முன்னுரையில், அரசியலிலிருந்து உலகத் தமிழ் மாநாடுகள் விடுபட வேண்டும் என்றும் புதிய ஆய்வுப் போக்குகளுக்கு இடமளிக்க வேண்டும் என்றும் பன்னாட்டுத் தமிழாய்வுக் கழகத்தின் அமைப்பை மாற்ற வேண்டும் என்றும் நான் பரிந்துரைத்திருக்கிறேன்.
1995முதலாக ஒன்பதாம் உலகத் தமிழ் மாநாட்டை நடத்த பன்னாட்டுத் தமிழாய்வுக் கழகத்தால் இயலவில்லை என்பது உண்மை. ஆயினும், எட்டாம் உலகத் தமிழ் மாநாட்டை லண்டனில் நடத்த அது திட்டமிட்டது என்பதை மனத்திற்கொள்வது முக்கியம். அது நடக்காததால், ஒன்பதாம் மாநாட்டை இங்கிலாந்து, அமெரிக்க ஐக்கிய நாடு அல்லது தென்னாப்பிரிக்காவில் நிகழ்த்த வேண்டுமென 1995இல் தஞ்சாவூரில் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் இந்த நாடுகளிலுள்ள பன்னாட்டுத் தமிழாய்வுக் கழகக் கிளைகள் எவையும் உலகத் தமிழ் மாநாட்டை நிகழ்த்த முன்வரவில்லை. ஒருவேளை இம்மாநாடுகளில் நிகழும் தவிர்க்கவியலாத அரசியல்சார் குறுக்கீடுகளால் அவை அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருக்கலாம்.
ஆய்வில் காணப்படும் புதிய போக்குகள் என்று நோக்கும்போது, சிறிய அளவில் நிகழ்ந்தாலும், 2010 மே மாதம் டோரண்டோ பல்கலைக்கழகத்தால் ஒருங்கிணைக்கப்பட்ட ஐந்தாம் தமிழாய்வு மாநாட்டைக் குறிப்பிட வேண்டும். கடந்த பத்தாண்டுகளில் குறித்த சில ஆய்வுப் பகுதிகளில் ஆய்வுப் பணிமனைகளும் கருத்தரங்குகளும் பல்வேறிடங்களில் நிகழ்ந்துள்ளன. பெரிய மாநாடுகளின் பயனை நான் மறுக்கவில்லை. ஆனால் அவை அரசியலிலிருந்து விடுபட்டிருக்க வேண்டும். ஆனால் இன்று தமிழாய்வின் எல்லாக் கூறுகளையும் உட்படுத்தும் பெரிய மாநாடுகளை நடத்துவதற்குப் பதிலாகப் பிற துறைகளுடன் ஒப்பியல் நோக்கில் சிறிய அளவிலான பயிலரங்குகளையும் கருத்தரங்குகளையும் நடத்துவதற்கான காலம் வாய்த்திருக்கிறது.
தமிழாய்வில் மறுமலர்ச்சி?
பன்னாட்டுத் தமிழாய்வுக் கழகம் ஒரு புதிய அவதாரத்தை எடுப்பதற்கான காலம் நெருங்கியிருக்கிறது. திராவிட இயக்கம் தனது அசலான நோக்கங்களை நிறைவேற்றுவதில் வெற்றியடைந்ததுபோலவே, இந்த அமைப்பும் தமிழாய்வின் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்தும் வரலாற்றுப் பணியை நிறைவேற்றியிருக்கிறது. இனி உண்மையான கல்விசார் ஆய்வு அமைப்பாகச் செயல்பட ஒரு புதிய பன்னாட்டுத் தமிழாய்வுக் கழகம் உருவாக்கப்பட வேண்டும்.
பன்னாட்டுத் தமிழாய்வுக் கழகத்தின் தலைவன் என்னும் முறையிலும் தமிழ் மக்களையும் அவர்கள் பண்பாட்டையும் நேசித்துத் தனது வாழ்க்கையைத் தமிழாய்வுக்குச் செலவிட்டவன் என்னும் முறையிலும் எனது ஒரே மனநிறைவு என்னவென்றால், கோயம்புத்தூரில் சென்ற மாதம் நிகழ்ந்த, அரசு ஒருங்கிணைத்த, அரசியல் சார்பான மாநாட்டில் பங்கேற்காமல் இக்கழகம் தனது ஆய்வுச் சுதந்திரத்தைக் காப்பாற்றிக்கொண்டது என்பதுதான்.
ஆயினும் பன்னாட்டுத் தமிழாய்வுக் கழகம் புதிய வகையில் உருவமைக்கப்பட வேண்டும். தமிழாய்வுத் துறையைச் சேர்ந்த நேர்மையான இளம் அறிஞர்களின் தோள்வலிமையால் இந்த மறுமலர்ச்சி நிகழ வேண்டும்.
ம. இராசேந்திரன் (2010, ஜூலை 25): கராஷிமாவின் குறிப்புரைக்குத் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தரின் எதிர்வினை
1995இல் நிகழ்ந்த எட்டாம் உலகத் தமிழ் மாநாட்டு மலர் வெளியீடு மற்றும் அளிப்புத் தொடர்பான குறிப்புகளுக்கெனப் பின்வரும் தெளிவுரை அளிக்கலாகிறது. தமிழ்நாட்டின் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு, 06-08-2006 அன்று பேராசிரியர் கராஷிமா, எட்டாம் உலகத் தமிழ் மாநாட்டு மலர்கள் எப்படி, யாரால் விற்கப்பட வேண்டும், அதன் வருவாயை யாருக்குச் செலுத்த வேண்டும் என்பது பற்றி ஒரு குறிப்பீடு அனுப்பியிருந்தார். அக்கடிதத்தில் பிறவற்றோடு, பின்வருவனவற்றையும் குறிப்பிட்டிருந்தார்:
“அறிஞர்களுக்கும் பொதுமக்களுக்கும் இந்நூல்களைப் பகிர்ந்தளிப்பதற்குப் பன்னாட்டுத் தமிழாய்வுக் கழகத்திற்கென எவ்விதப் பருண்மையான உள்கட்டமைப்பும் இல்லாமையால், மாநாட்டை நடத்தவும் உலகத் தமிழ் மாநாட்டு நிகழ்வுகளை வெளியிடவும் முயற்சி எடுத்துக்கொண்ட தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கும் பன்னாட்டுத் தமிழாய்வுக் கழகத்தின் ஆய்வுப் பகுதியென உருவாக்கப்பட்ட சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திற்கும் பன்னாட்டுத் தமிழாய்வுக் கழகமும் இந்த இரு நிறுவனங்களும் பரஸ்பர ஒப்புதலினால் ஏற்றுக்கொண்ட கருத்துகளுக்கும் நிபந்தனைகளுக்கும் ஏற்ப அவை மாநாட்டு மலர்களைச் சேமித்துவைக்கவும் விற்கவும் அனுமதியளிக்குமாறு தமிழக அரசை நான் கேட்டுக்கொள்கிறேன்.
பன்னாட்டுத் தமிழாய்வுக் கழகத்திற்கு வந்த சார்பாளர்களின் கட்டணத்தால் இந்த வெளியீட்டிற்கான செலவுகள் செய்யப்பட்டன என்பதால், விற்பனைக்கெனச் செலவாகும் தொகை தவிர மீதிப் பணத்தைப் பன்னாட்டுத் தமிழாய்வுக் கழகத்திற்கே அதன் திட்டங்கள், செயற்பாடுகள் ஆகியவற்றிற்கெனத் திருப்பித்தருமாறு தமிழக அரசு அன்புகூர்ந்து ஓர் ஆணை பிறப்பிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். இத்திட்டங்களை இன்னும் நன்கு வெளிப்படையாக்கி, செவ்வியல் தன்மை உள்ளிட்ட தமிழின் எல்லாத் துறைகளிலும் மேலும் ஆராய்ச்சியைத் தீவிரமாக மேம்படுத்தப் பன்னாட்டுத் தமிழாய்வுக் கழகம் நினைத்துள்ளது.
(2006இல் வெளியானாலும் வெளியீட்டு ஆண்டு 2005 என்று தரப்பட்டுள்ள) இந்த மாநாட்டு மலர்களை, அறிஞர்கள் ஆய்வின் பயன் பொதுமக்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பதற்காக, அடக்க விலைக்கே மாநிலத்திலுள்ள பொதுநூலகங்களுக்கெனத் தமிழக அரசு வாங்கிக்கொள்ள வேண்டும் என்று வேண்டிக்கொள்ள இந்த வாய்ப்பை நான் பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறேன்.”
மேற்கண்ட நிறுவனங்களில் நிகழ்ந்த உள் ஆலோசனைகளுக்குப் பிறகு, 23-09-2009 அன்று தமிழக அரசு பேராசிரியர் கராஷிமா கூறிய முன்மொழிவுகள் அனைத்தையும் ஏற்று ஓர் அரசாணை வெளியிட்டது. மேற்கண்ட அரசாணை வெளியாவதற்கு முன்பே, 28-07-2008 அன்றே, தமிழ்ப் பல்கலைக்கழகம், மேற்கண்ட மாநாட்டு மலர்களை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பிவிட்டது.
மேற்கண்டவற்றை நிறைவேற்றும் ஆணைகளைப் பள்ளிக் கல்வித் துறையும் 22-02-2010 தன் அரசாணையின் மூலமாக வெளியிட்டது. இலவசமாக அளிக்கப்படவென ஒதுக்கிவைத்த 130 பிரதிகளைத் தவிர, 870 பிரதிகளைப் பொதுநூலக இயக்ககம் 12.18 லட்சத்திற்கு வாங்குவதெனவும் பணத்தை (பின்னர் பன்னாட்டுத் தமிழாய்வுக் கழகத்திற்குத் தருவதற்கென) உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திற்குச் செலுத்துவதெனவும் முடிவுசெய்யப்பட்டது. இச்செய்தி பேராசிரியர் கராஷிமாவுக்கும் தெரிவிக்கப்பட்டது. 22-02-2010 நாளிட்ட அரசாணையின்படி, 870 மலர்கள் பொதுநூலகத் துறைக்கு அளிக்கப்பட்டுப் பல்வேறு நூலகங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டன.
மேற்கண்டவற்றின் அடிப்படையில், ‘எட்டாம் மாநாட்டு மலர்கள் இன்னும் பகிர்ந்தளிக்கப்படாமல் தமிழ்ப் பல்கலைக்கழகத்திலேயே உள்ளன’ எனப் பேரா சிரியர் கராஷிமா கூற முனைந்திருப்பது சற்று உள்ளர்த்தம் கொண்டதாகவும் வருத்தத்திற்குரியதாகவும் தோன்றுகிறது.
வா. செ. குழந்தைசாமி-ஐராவதம் மகாதேவன் (2010, ஆகஸ்டு 7): மிகப் பெரிய வாய்ப்பு ஒன்றை நழுவவிட்டது பன்னாட்டுத் தமிழாய்வுக் கழகம் கோயம்புத்தூரில் அண்மையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு இதுவரை நடந்த மாநாடுகளிலேயே பிரமாண்டமானது மட்டுமன்றி, மிக உயர்ந்த ஆய்வு அறிஞர்கள் சிலர் கலந்துகொண்டதுமாகும். பன்னாட்டுத் தமிழாய்வுக் கழகம் தனது தலைவரின் வளைந்து கொடுக்காத் தன்மையால் இந்த மாநாட்டை நடத்தும் வாய்ப்பை இழந்துவிட்டது.
2010, ஜூலை 23இல் பன்னாட்டுத் தமிழாய்வுக் கழகத்தைப் பற்றிய இரங்கல் கீதத்தைப் பேராசிரியர் நபோரு கராஷிமா ஹிந்துவில் வெளியிட்டதை நாங்கள் கலக்கத்துடன் படித்தோம். 2010 ஜூன் மாதம் கோயம்புத்தூரில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்கு நாங்கள் இருவருமே துணைத் தலைவர்களாக இருந்தோம். எனவே தமிழக அரசு தானாகவே அம்மாநாட்டை நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதைப் பற்றி எங்களால் சொல்ல இயலும்.
பன்னாட்டுத் தமிழாய்வுக் கழகம் 1964இல் நிறுவப்பட்டுப் பாரீஸில் பதிவுசெய்யப்பட்ட ஓர் அமைப்பு. அதற்கு ஒரு பொதுக்குழு, நடுவண் மன்றம், நிர்வாக மன்றம் ஆகியவை உள்ளன. அதற்கெனத் தனியாக நிதியோ அலுவலகமோ கிடையாது. உலகத் தமிழ் மாநாடுகளுக்கு ஊடாக உயிர்வாழும் அந்நிறுவனம், எட்டு மாநாடுகளை இதுவரை நடத்திவிட்டது. கடைசி மாநாடு தஞ்சாவூரில் 1995இல் நிகழ்ந்தது. பாரீஸில் நடந்த மாநாட்டைத் தவிர, பிற மாநாடுகள் யாவும் அந்தந்த நாட்டு அரசாங்கத்தின் ஊக்கமுள்ள ஈடுபாட்டினாலும் நிதியுதவியினாலுமே நடத்தப்பட்டுவந்திருக்கின்றன.
பேராசிரியர் கராஷிமா தன் கட்டுரையில் கூறியிருப்பதுபோல, 1968இல் சென்னையில் இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு திமுக வெற்றிக் கொண்டாட்டத்திற்கென நடந்த ஒன்று என்று கூறுவது உண்மையாகாது. ஒரு ஜனநாயக நாட்டில் ஆளும் கட்சி அரசாங்கத்தை அமைக்கிறது. மாநாட்டுக்கு அது தரும் ஆதரவை அரசியல்மயமாக்கல் என்றும் வருணிக்க முடியாது.
இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டின்போதே பன்னாட்டுத் தமிழாய்வுக் கழக மாநாடுகளுக்கான பாணி நன்கு நிறுவப்பட்டுவிட்டது. மாநாட்டுச் சார்பாளர்கள் மட்டுமே திட்டவட்டமாகப் பங்கேற்கக்கூடிய ஆய்வுப் பகுதிகள் தனி. பொதுமக்களின் நன்மைக்காக, ஆய்வுப் பகுதியிலிருந்து வேறாகப், பொதுவாக நடத்தப்படும் நிகழ்ச்சிகள் தனி. தமிழ்நாட்டில் நிகழ்ந்த பன்னாட்டுத் தமிழாய்வுக் கழக மாநாடுகள் எல்லாவற்றிலும் இணையாக இந்த இரு பகுதிகளும் ஒன்று கலவாமல் நடைபெற்றே வந்தன. அறிஞர்கள், பொதுமக்கள் ஆகிய இருபிரிவினரும் ஒருசேர மகிழ்ச்சியடைந்த ஏற்பாடு இது.
தன் கட்டுரையில், பேராசிரியர் கராஷிமா தமிழ்நாட்டில் நடந்த உலகத் தமிழ் மாநாடுகள் அரசியல்மய மாக்கப்பட்டுவிட்டதாகப் புலம்பியிருந்தார். இச்சமயத்தில் லண்டன் பல்கலைக்கழகத் தெற்காசியக் கலாச்சாரத் துறையின் பேராசிரியர் ஸ்டூவர்ட் பிளாக் பர்ன் 1999, ஏப்ரல் 6 அன்று பேராசிரியர் கராஷிமாவுக்கு எழுதிய ஒரு கடிதத்தை மேற்கோள் காட்ட விரும்புகிறோம். அக்கடிதம் இவ்வாறு செல்கிறது: “தமிழ்நாட்டில் இன்னொரு மாநாட்டை நடத்துவதில் தங்கள் விருப்பமின்மையை நான் புரிந்துகொள்கிறேன். என்றாலும் தஞ்சாவூர் அனுபவம் மிக மோசம் என்று நான் நினைக்கவில்லை. ஆய்வரங்குகளிலிருந்து அரசியல் நிகழ்வுகள் பிரிக்கப்பட்டன. தமிழ்நாட்டிலேயே நடந்ததால், நமது தமிழ்நாட்டுத் தோழர்கள் பலரும் அதில் பங்கேற்க முடிந்தது என்பதை நாம் மறக்கக் கூடாது. அது ஒரு மிகப் பெரிய நன்மை.”
கோயம்புத்தூரில் நடந்த சமீபத்திய செம்மொழி மாநாட்டில் ஆய்வுச் செயல்பாடுகளையும் பொது நிகழ்ச்சிகளையும் ஒன்றுகலவாமல் பிரிப்பது இன்னும் கடுமையாகவும் திட்டவட்டமாகவும் இருந்தது.
1999, பிப்ரவரி 18 அன்றே டாக்டர் வா. செ. குழந்தைசாமி பேராசிரியர் கராஷிமாவுக்கு எழுதிய கடிதத்தில் தமிழக அரசு ஒன்பதாம் மாநாட்டை நடத்துவதற்கான அழைப்பை விடுத்திருந்தார். ஆனால் பேராசிரியர் கராஷிமா, 1999, மார்ச் 10 அன்று எழுதிய கடிதத்தில் தொடர்ச்சியாக இரண்டு மாநாடுகளைத் தமிழ்நாட்டிலேயே நடத்துவதில் தமக்கு விருப்பமில்லை என அந்த அழைப்பை மறுத்துவிட்டார். மேலும் தமிழ்நாட்டில் மாநாட்டை நடத்துவதால் அது அரசியல்மயமாகும் என்னும் அவர்தம் கருத்து உறுதியும் அதில் இருந்தது.
பேராசிரியர் கராஷிமா வேறெந்த அலுவலரையும் கேட்காமல் தாமாகவே எடுத்த கண்டிப்பான முடிவினால் 1999-2000இல் ஒரு மாநாட்டை நடத்தும் வாய்ப்பு இல்லாமற்போனது. தஞ்சாவூரில் மாநாடு நடந்து 15 ஆண்டுகளுக்குப் பின் பன்னாட்டுத் தமிழாய்வுக் கழகம் இயங்குகின்றதா என்பதே ஐயமாக இருந்தது. அதன் பணியலுவலர்கள் அதன் எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்பட்டனர். இச்சமயத்தில்தான் ஒன்பதாம் மாநாட்டை நடத்த வேண்டித் தமிழக அரசு அழைப்புவிடுத்தது. தமிழக அரசின் முதலமைச்சர் தாமே பேராசிரியர் கராஷிமாவுக்கு மாநாட்டை நடத்த அவரது ஆதரவை நாடிக் கடிதம் எழுதினார்.
பேராசிரியர் கராஷிமா எழுப்பிய நான்கு மறுப்புகளில் மூன்று சரிசெய்யப்பட்டுவிட்டன. மாநாட்டின் காலம் ஒன்றுதான் ஒத்துவரவில்லை. 2010 டிசம்பரிலோ 2011 ஜனவரியிலோ மாநாட்டை வைத்துக்கொள்ளலாம் என்றார் கராஷிமா. ஆனால் 2011 தொடக்கத்திலேயே மாநில சட்டசபைத் தேர்தல் நிகழ இருப்பதால் 2010 ஜூன் மாத இறுதியிலேயே மாநாட்டை வைத்துக்கொள்ள விரும்பியது தமிழக அரசு. எவ்வாறாயினும் தமிழக அரசு பன்னாட்டுத் தமிழாய்வுக் கழகத்திற்கு மாநாட்டை நடத்த அளித்த வாய்ப்பை மறுக்கக் காரணமாக ஆறு மாதக் கால வேறுபாடு அமைந்தது. இது மிகச் சிறிய பிரச்சினைதான்.
துணைத்தலைவர் என்னும் முறையிலும் நிர்வாக மன்றத்தின் தலைவர் என்னும் முறையிலும் டாக்டர் குழந்தைசாமி பன்னாட்டுத் தமிழாய்வுக் கழகத்திற்கெனச் சென்னையில் சொந்தக் கட்டடம் கட்டித்தருமாறும் அதற்கெனத் தனி அலுவலகத்தை நடத்தவும் அதன் ஆய்வுச் செயல்பாடுகளை நடத்தவும் தேவையான நிதி வழங்குமாறும் தமிழக அரசை இசைவிக்க முடியும் எனப் பேராசிரியர் கராஷிமாவுக்கு உறுதிகூறும் அளவுக்குச் சென்றார். ஆனால் டாக்டர் வா. செ. குழந்தைசாமி, டாக்டர் ஐராவதம் மகாதேவன் ஆகியோர் எழுதிய கடிதங்களுக்குப் பதிலாகத் தமிழக அரசு முன்வைத்த தேதியை ஏற்க விருப்பமின்மையைப் பேராசிரியர் கராஷிமா இறுதியாகத் தெரிவித்துவிட்டார்.
இந்நிலையில் சாதாரணமாக ஒருவர் கேட்கக்கூடிய கேள்வி இதுதான்: தமிழக அரசின் முன்மொழிவுக்குப் பேராசிரியர் கராஷிமா செய்த மாதிரியிலான ஒரு தடையுரையை வழங்க யார் அவருக்கு அதிகாரமளித்தது? நிர்வாக மன்றக் கூட்டத்தை அவர் கூட்டவில்லை. நடுவண் மன்ற உறுப்பினர்களின் அல்லது நிர்வாக மன்ற உறுப்பினர்களின் ஆலோசனையையும் அவர் கேட்கவில்லை. உண்மையில், நிர்வாக மன்ற உறுப்பினர்கள் நால்வரில் மூவரும் நடுவண் மன்ற உறுப்பினர்களில் இப்போதிருக்கும் ஒன்பது உறுப்பினர்களில் ஆறு பேரும் தமிழக அரசின் வேண்டுகோளின்படி மாநாட்டை நடத்த ஒப்புக்கொள்ளுமாறு அவரை எழுத்துமூலம் வேண்டிக்கொண்டார்கள். பெரும்பான்மை உறுப்பினர்கள் கருத்துக்கு அவர் கட்டுப்பட்டு நடந்திருக்க வேண்டும். ஆனால் தன்னிச்சையாக அவர் நடந்துகொண்டார்.
மேற்கண்ட சூழ்நிலையில் துணைத்தலைவர் என்னும் முறையிலும் நிர்வாக மன்றத்தின் தலைவர் என்னும் முறையிலும் டாக்டர் குழந்தைசாமி பன்னாட்டுத் தமிழாய்வுக் கழகத்தின் கூட்டம் ஒன்றைக் கூட்டினார். நேராகச் சிலரிடமும் எழுத்துமூலமாகச் சிலரிடமும் நடுவண் மன்றத்தின் ஒன்பது உறுப்பினர்களில் ஆறு பேரின் ஒப்புதலை வாங்கி, மாநாட்டை நடத்தப் பன்னாட்டுத் தமிழாய்வுக் கழகத்தின் இசைவு உண்டு என்று தமிழக முதலமைச்சருக்குத் தெரிவித்தார். ஆயினும் தமிழக முதல்வர் நன்கு சிந்தித்து, ஒருமனதான இசைவு கிடைக்காத நிலையில் தாம் நடத்தவிருக்கும் மாநாட்டுடன் பன்னாட்டுத் தமிழாய்வுக் கழகத்தைத் தொடர்புபடுத்துவதில் தமது விருப்பமின்மையை வெளியிட்டார்.
இதன்படி, தமிழக அரசு மேற்சென்று ‘உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு’ என்னும் தலைப்பில் இந்த மாநாட்டை நடத்தியது. இதுவரை நடந்த மாநாடுகளில் மிகச் சிறப்பானது என்பதோடு, ஜியார்ஜ் ஹார்ட், அஸ்கோ பர்போலா, யாரஸ்லாவ் வாசெக், அலெக்ஸாண்டர் எம். டூபியான்ஸ்கி போன்ற மிகச் சிறந்த ஆய்வறிஞர்கள் பலரும் கூடுவதாகவும் இது அமைந்தது. பன்னாட்டுத் தமிழாய்வுக் கழகம் தன் தலைவரின் வளைந்து கொடுக்காத தன்மையால் மாநாட்டை நடத்தும் வாய்ப்பை இழந்துவிட்டது.
தமக்கே உரிய முறையில், பன்னாட்டுத் தமிழாய்வுக் கழகம் தனது பணியை நிறைவேற்றிவிட்டதாகக் கூறுகிறார் பேராசிரியர் கராஷிமா. தான் தலைமையேற்று நடத்தும் ஒரு பன்னாட்டு நிறுவனத்திற்குப் பேச்சளவிலும்கூட இறுதிநாள் குறிக்க எந்த ஒரு தலைவருக்கும் உரிமையில்லை. 15 ஆண்டுகள் செயல்படாமலிருந்து விட்டு, எதிர்காலத்தில் இனியும் தான் தலைமையேற்று நடத்த இயலாமையை வெளிப்படுத்தும் ஒப்புதல் கூற்றுதான் அது.
இறுதியாக, பன்னாட்டுத் தமிழாய்வுக் கழகத்திற்கு அடித்தளம் நாட்டிய பேராசிரியர்கள் வ. ஐ. சுப்பிரமணியம், ழான் ஃபிலியோஸா, அருட்தந்தை தனிநாயகம் போன்ற அறிஞர்கள் அளித்த பெருங்கொடைகளை நாங்கள் நினைவுகூர்கிறோம். அவர்களும் தனித்த ஆய்வுத்திற நேர்மையும் நேரிய முடிவைச் சாதிப்பதில் தைரியமும் கொண்டவர்களே. அவர்கள் அரசியல்வாதிகளோடு கலந்துறவாடி வந்தவர்கள்தான். ஆனால் பன்னாட்டுத் தமிழாய்வுக் கழகத்தின் ஆய்வுச் சுதந்திரத்தைக் காப்பாற்றினார்கள். தமிழாய்வுக்கெனப் பணிபுரியும் மூலவளங்களை உருவாக்கினார்கள். ஒரு புதிய பன்னாட்டுத் தமிழாய்வுக் கழகம் இன்று நமக்குத் தேவையில்லை, அதற்கு ஒரு புதிய தலைவர்தான் தேவை. தமிழாய்வுக்கென முனைப்பும் தமிழ் உணர்ச்சிகளுக்கும் ஆவல்களுக்கும் செவிகொடுக்கும் கூருணர்வும் விவேகமுள்ள தலைமையும் கொண்ட ஒருவர் தேவை. அப்படிப்பட்ட தலைவர் கிடைப்பின், பன்னாட்டுத் தமிழாய்வுக் கழகம் தானாகவே மறுமலர்ச்சி பெற்று எழுந்து தமிழாய்வை வளரச் செய்கின்ற வரலாற்றுப் பணியை ஆற்றும்.
நபோரு கராஷிமா (2010, ஆகஸ்டு 12): பன்னாட்டுத் தமிழாய்வுக் கழகத்திற்கு இரங்கல் கீதமும் அதன் தலைவர் பதவியிலிருந்து என் விலகலும் 2010, ஜூலை 23 அன்று ஹிந்து நாளிதழில் வெளியான “பன்னாட்டுத் தமிழாய்வுக் கழகமும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடும்” என்னும் என்னுடைய கட்டுரையைப் பேராசிரியர் வா. செ. குழந்தைசாமியும் டாக்டர் ஐராவதம் மகாதேவனும் மிகச் சரியாகவே “பன்னாட்டுத் தமிழாய்வுக் கழகத்திற்கான இரங்கல் கீதம்” என்று 2010, ஆகஸ்ட் 7 நாளிட்ட ஹிந்துவில் வருணித்திருந்தார்கள். இவ்வாண்டு ஜூன் மாதம் கோயம்புத்தூரில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை ஒருங்கமைப்பதில் இவ்வறிஞர்கள் இருவரும் மிக ஊக்கத்தோடு செயல்பட்டவர்கள்.
பன்னாட்டுத் தமிழாய்வுக் கழகம் தனது வரலாற்றுப் பணியைச் செய்துமுடித்துவிட்டது என்று வாதிட்டிருந்தேன் நான். ஏனெனில், அதன் தொடக்க ஆண்டுகளில், திராவிட இயக்கத்தின் முற்போக்கான இலட்சியங்களோடு அது சம்பந்தப்பட்டிருப்பதில் சற்றே நியாயம் இருந்தது. இப்போது மாநில அரசியல் நிகழ்வுகளிலிருந்து தன்னை அது விலக்கிக்கொள்வதற்கான நேரம் வந்துவிட்டது.
இக்காரணங்களால், நான் நடுவண் மன்றத்திடம் என் பதவிவிலகல் கடிதத்தைக் கொடுத்துவிட்டேன். என் வழிகாட்டலில், பன்னாட்டுத் தமிழாய்வுக் கழகம், அரசியல் சார்பற்ற, இலாபமீட்டும் நோக்கமற்ற அமைப்பாகப் பணியாற்றியதிலும் (ஆய்வுக் கழக விதி எண்: 4) என் தலைமையின்கீழ் அது இருந்தபோது நடந்த எட்டாம் உலகத் தமிழ் மாநாட்டில் தமிழாய்வில் குறிப்பிடத்தக்க கொடையை நல்கியது என்பதிலும் கோயம்புத்தூரில் அண்மையில் நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுடன் தொடர்பின்றி விலகியிருந்த தன் வாயிலாக ஆய்வுச் சுதந்திரம் என்ற கொள்கையைக் காப்பாற்றிக்கொண்டதிலும் நான் மனநிறைவடைகிறேன்.
என் கட்டுரையில் நான் குறிப்பிட்டதுபோல, பன்னாட்டுத் தமிழாய்வுக் கழகத்தின் மறுமலர்ச்சி, ஒருவேளை வேறொரு வடிவத்தில் இருக்கலாம்-அப்பணி எதிர்காலத்தை நோக்கும் இளம் தமிழாய்வு அறிஞர்களின் தோள்களில் உள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக