வியாழன், 11 நவம்பர், 2010

சென்னை-சில குறிப்புகள் 2: இப்படியும் ஒரு அரசு ஊழியர்

நம் தேசத்தில் அதிகமாகப் பொறாமைக்கு உள்ளான நபர்கள் சாஃப்ட்வேர் இளைஞர்கள் என்றால், நம் சமூகத்தினரால் அதிகமாக வெறுக்கப்படும் நபர்கள் அநேகமாக அரசு ஊழியர்களாகவே இருக்கக்கூடும். இதற்கான முக்கிய காரணங்களுள் ஒன்று, அரசு அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் சரியாக நடத்தப்படாமை ஆகும்.
நம் வாழ்க்கையின் ஆச்சர்யங்களுள் ஒன்று, மிகவும் அவநம்பிக்கையான சூழலிலும் நமது நம்பிக்கைகளை மீட்டெடுப்பதற்கென்றே எங்கேனும், யாரேனும் சிலர் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள். அப்படி ஒரு மனிதரை நான் சமீபத்தில் சந்தித்தேன். நான் ஏறத்தாழ கடந்த 25 வருடங்களாக, பல்வேறு ஊர்களிலும் உள்ள அரசு நூலகங்களுக்குத் தொடர்ந்து சென்று வருபவன். சில மாதங்களுக்கு முன்பு, என் வீட்டுக்கு அருகில் உள்ள கிளை நூலகம் இடிக்கப்பட்டபோது சற்றுத் தள்ளி சாந்தோம் பகுதியில், நீல்கிரீஸ்க்கு அருகில் ஜோனகன் தெருவில் உள்ள அரசு கிளை நூலகத்திற்குச் சென்றேன். அங்கு எனக்கு வரிசையாக இன்ப அதிர்ச்சிகள் காத்துக்கொண்டிருந்தன. ஒரு நாற்காலியில் உள்ள பதிவேட்டில் வழக்கம்போல் கிறுக்கலாக கையெழுத்தைத் தொடங்கியபோதுதான், நாற்காலியில் ஒட்டியிருந்த அறிவிப்பைப் படித்தேன். ‘கிறுக்காமல், முழுமையாகத் தெளிவாக கையெழுத்திடவும்.என்று அறிவிக்கப்பட்டிருந்தது. என்னடா இது வம்பாப் போச்சு என்று கையெழுத்தை ஒழுங்காக போட்டுவிட்டு நிமிர்ந்தால், அறிவிப்பு பலகையில், தினசரி வாழ்க்கைக்கு பயனளிக்கும் குறிப்புகளைக் கொண்ட (உதாரணம்: பன்றிக் காய்ச்சலிலிருந்து எவ்வாறு காத்துக்கொள்ளலாம்?)பல செய்தித்தாள் கட்டிங்குகள் ஒட்டப்பட்டிருந்தன. பரவாயில்லையே என்று நான் நினைத்து முடிப்பதற்குள், வாசலுக்கு அருகிலேயே உட்கார்ந்திருந்த நூலகர் மலர்ந்த முகத்துடன் சிரித்தபடி, "வாங்க சார்…" என்று தன் வீட்டுக்கு வந்தவர்களை வரவேற்பது போல் சந்தோஷத்துடன் வரவேற்றார்

 
ஒரு நிமிடத்திற்குள் பல இன்ப அதிர்ச்சிகளைத் தாங்குவதற்கு நான் தயாராக இல்லாத காரணத்தால், புன்னகையை மட்டும் பதிலாக அளித்துவிட்டு மாடி ஏறினேன். மாடியில் அடுத்தடுத்து அதிர்ச்சிகள் காத்திருந்தன. செய்தித்தாள்கள் படிப்பதற்கு ஒரு தனி மேஜையும், வார, மாத இதழ்கள் படிப்பதற்கு ஒரு தனி மேஜையும் ஒதுக்கப்பட்டிருந்தது. வார, மாத இதழ்கள் சுவற்றில் கயிறு கட்டி வரிசையாக குப்புறப் போட்டு வைக்கப்பட்டிருந்தது. அது எடுப்பதற்கு எளிதாக இருக்கும். மேலும் பல நூலகங்களிலும் அதனை ஒரு மரப்பெட்டியில் போட்டு வைத்து, அதனைப் பலரும் நோண்டி நோண்டி எடுத்து, இரண்டே நாளிற்குள் புத்தகங்கள் நாசமாகிவிடும். இங்கு கயிற்றில் போடப்பட்டிருந்ததால், அவைகள் மெருகு குலையாமல் இருந்தன. நான் படித்துக் கொண்டிருக்கும்போதே மேலே வந்த நூலகர், ஆளில்லாத பகுதியில் ஓடிக்கொண்டிருந்த ஃபேனை நிறுத்துகிறார். டேபிளில் கிடக்கும் புத்தகங்களை எடுத்து மீண்டும் கயிற்றில் மாட்டி வைக்கிறார். என்னைப் பார்த்துப் புன்னகைத்து விட்டுக் கீழே செல்கிறார். மறுநாள் சென்று படித்துக் கொண்டிருந்தபோது என் அருகில் வந்த நூலகர், "உங்களுக்கு புத்தகம் படிக்கிற ஹேபிட் இருந்தால், மெம்பர் ஆவலாமேஅம்பது ரூபாதான் மெம்பர்ஷிப் ஃபீஸ். வருஷத்துக்கு பத்து ரூபா ரெனிவல் சார்ஜ் அவ்வளவுதான்." என்று கேன்வாஸ் செய்தார். எனது 25 வருட அரசு நூலக அனுபவத்தில், தனது நூலகத்தில் மெம்பர் சேர்ப்பதற்காக கேன்வாஸ் செய்யும் ஒரு நூலகரை முதன்முதலாகக் காண்கிறேன். "இல்ல சார்நான் ஏற்கனவே வேற ஒரு லைஃப்ரரில மெம்பர் சார்அதுவுமில்லாம நான் படிக்க நினைக்கிற புத்தகங்களை பெரும்பாலும் விலை கொடுத்து வாங்கி விடுவதால், அந்த கார்டிலும் இப்போது புத்தகங்கள் எடுப்பதில்லை." என்றேன். அப்போதும் மனிதர் என்னை விடுவதாயில்லை. "உங்க ஏரியாவுல யாராச்சும் புத்தகம் படிக்க இன்ட்ரெஸ்ட்டா இருந்தா, அவங்கள மெம்பராவச் சொல்லுங்க சார்நீங்க கூட உங்க கார்ட ரெனிவல் பண்ணிக்கிட்டு, இங்க நீங்க படிக்காத பழைய புத்தகம் இருந்தா படிக்கலாமே…" என்றவரை உற்றுக் கவனித்தேன். ஏறத்தாழ 40 வயதிருக்கும். நெற்றியில் ஒரு சிறு கீற்றாக திருநீறு. கண்ணாடி அணிந்திருந்தார். நெற்றியின் மேல்பக்கம் இதோநான் வந்துவிட்டேன் பார்... என்று அறிவிப்பு செய்தபடி ஆரம்பித்திருக்கும் மிக லேசான வழுக்கை. முகத்தில் மாறாத அந்த விளம்பரச் சிரிப்பு. மறுவாரம், இவ்வளவு பிரியமாகப் புத்தகம் படிக்கச் சொல்கிறாரே என்று எனது அட்டைகளை எடுத்துக்கொண்டு சென்றேன்(சென்னையில் நீங்கள் அரசு நூலக உறுப்பினராக இருந்தால், கன்னிமாரா லைப்ரரி தவிர சென்னையில் உள்ள அனைத்து அரசு நூலகங்களிலும் புத்தகங்கள் எடுத்துப் படிக்கலாம்.). புத்தக அடுக்குகளுக்குள் நுழைந்தால் அடுத்த அதிர்ச்சி. பெரும்பாலும் சிறு கிளை நூலகங்களில் தற்போது பொருள் வாரியாகப் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதில்லை(காரணம் ஆட்கள் பற்றாக்குறை என்கிறார்கள்). இங்கு முறையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. மறைந்த மலையாள இயக்குனர் ஜான் ஆப்ரஹாம் பற்றி நான் ஏற்கனவே படித்திருந்த ஒரு புத்தகம் இருக்கிறதா என்று நான் அவரிடம் கேட்டவுடன் எழுந்து வந்து, சினிமாப் பகுதியில் அக்கறையாகத் தேடி எடுத்துக்கொடுத்தார். புத்தகங்களை அவர் என்ட்ரி போடும்போது, "லைப்ரரியை நன்றாக வைத்திருக்கிறீர்கள்." என்றேன் பாராட்டாக. அதை அவர் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், ~~இன்னும் நிறைய செய்யலாம் சார்ஆனா அதுக்கு சௌகரியப்படல." என்றார். நான், "ஏன் நல்லாதானே வச்சிருக்கீங்க…" என்றேன். "இல்ல சார். இங்க பெரிய பிரச்சினை, புத்தகம்ல்லாம் அடிக்கடி தூசியாயிடுது. குறைஞ்சது வாரத்துக்கு ஒரு தடவையாச்சும் துடைச்சு வச்சாதான், நல்லாருக்கும் நம்ம ஒண்டி ஆளால முடியல." என்றார். நான், "புத்தகமெல்லாம் சுத்தமாத்தானே இருக்கு…" என்றேன். அதற்கு அவர், "அதுஇங்க நான் பக்கத்து தெருவுல விளையாண்டுகிட்டிருக்கிற சின்னப் பசங்கள கூப்பிட்டு, அவங்களுக்கு ஏதாச்சும் வாங்கித் தந்து அப்பப்ப சுத்தம் பண்ணி வைப்பேன்." என்றார். "இதுக்கு கைக்காசுல்லாம் செலவாயிருக்குமே…" என்றேன். "ஆமாம் சார்இதுவரைக்கும் ரெண்டாயிரம் ரூபாய் செலவு பண்ணியிருக்கேன் சார். ஆனா அதெல்லாம் எனக்குக் கவலையில்ல. இப்பல்லாம் யாரும் லைப்ரரிக்கே வர்றதில்லநீங்களே பாத்தீங்கள்லமேல ரெண்டு பேர் உக்காந்து படிச்சுக்கிட்டிருக்கீங்கஇப்ப இங்க ஆக்டிவா இருக்கிற மெம்பர்ஸ்னா 70 பேர்தான்…" என்றார் கவலையுடன். நூலகத்திற்கு ஆட்கள் வருவதில்லை என்ற வருத்தத்துடன் தொடர்ந்து உறுப்பினர்களைச் சேர்க்க முயன்றுகொண்டிருக்கும் அந்த மனிதரைக் கட்டி அணைத்துப் பாராட்டவேண்டும் போல இருந்தது. இவர் நூலகத்தை நன்றாக வைத்திருப்பதுடன் விடாமல் இரண்டு, மூன்று நாட்கள் விடுமுறையில் சென்றால், ரெகுலராக லைப்ரரிக்கு வரும் வாசகர்கள் வந்து ஏமாந்து போகக்கூடாது என்று அவர்களின் மொபைல் நம்பர்களை வாங்கி வைத்துக்கொண்டு எஸ்.எம்.எஸ்.ஸில் முன்கூட்டியே தகவலும் தெரிவித்துவிடுகிறார். இவரைப் பற்றி எழுதலாம் என்று முடிவு செய்துவிட்டு அவரைப் பற்றிய தகவல்களைக் கேட்டேன். பெயர் முரளி. அங்கு தற்காலிக நூலகராக, கடந்த ஓராண்டாகப் பணிபுரிவதாகக் கூறினார். தினக்கூலியாக ரூ. 162 பெறுகிறார். அவர் பணிகளை நான் பாராட்டியபோது, "எனக்கு ஒண்ணும் இதெல்லாம் பெருசாத் தெரியல சார்நான் ஒரு வாசகரா லைப்ரரிக்குப் போனப்ப, இப்படியெல்லாம் செய்யலாமேன்னு நான் நினைச்ச விஷயங்களத்தான் இங்க செஞ்சுகிட்டிருக்கேன் சார்…" என்றார் அடக்கத்துடன். போன வாரம் சென்னை வந்திருந்த என் தந்தையும் அந்த நூலகத்திற்குச் சென்றுவிட்டு வந்து ~~டேய்அங்க ஒரு லைப்ரரியன் இருக்காருடா. இத்தனைக்கும் நான் கைலி கட்டிகிட்டுத்தான் போனேன்வாங்கன்னு கல்யாண வீட்டுல வரவேற்கிற மாதிரி பயங்கர உபச்சாரம்." என்றார். நான் பதிலுக்கு சுருக்கமாக, "அவர் அப்படித்தான்." என்றேன். இக்கட்டுரையை முடிக்கும் நேரத்தில், மலையாளக் கவிஞர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடின் இந்த வரிகள் நினைவிற்கு வருகிறது: ‘வாழ்க்கை மகா அற்புதமான ஒன்று. அது ஒருபோதும் எதிர்பாராத ஏதோ ஒன்றை உங்களுக்குப் பொத்தி வைத்து எப்போதும் காத்திருக்கிறது.

0 கருத்துகள்: