வியாழன், 11 நவம்பர், 2010

பெய்யாத மழையும் அடிமை ஆமையும்

ஒரு நாள் மழைக்கும் யானைக்கும் சண்டை வந்தது. யானை மழையிடம், "நான்தான் இந்த உலகிலேயே பெரிய சக்தி. என்னோடு ஒப்பிடும்போது நீ ஒன்றுமே இல்லை" என்றது

மழையோ, "நானில்லாவிட்டால் நீ தாகத்தில் செத்து மடிந்து போவாய்" என்றது

"போ போ... அப்படியெல்லாம் எதுவும் நடக்கவே நடக்காது" என்று சவால் விட்டது யானை

மழை கோபித்துக் கொண்டு போயே விட்டது. வெகு நாட்களாகியும் மழை இல்லாததால் நீர் நிலைகள் எல்லாம் வறண்டன. யானை கழுகிடம் சென்று, "மழையை சூதாட்டத்துக்கு அழை. அது தோற்று கீழே விழட்டும்" என்று கேட்டது. ஆனால் கழுகு மழையைப் பகைத்துக் கொள்ள விரும்பாமல் யானையின் விண்ணப்பத்தை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டது

பின் யானை காகத்திடம் சென்று மழையை சூதாட்டத்துக்கு அழைக்கச் சொன்னது. ஒப்புக் கொண்ட காகம் மழையிடம் சூதாடி வென்றது. எனவே மழை பூமியில் விழுந்தது.

ஆனால் நீர் நிலைகளில் மழை நீர் தேங்காமல் விரைவில் ஆவியாகிவிட்டது. ஒரே ஒரு குட்டையில் மட்டுமே சிறிதளவு நீர் தங்கி இருந்தது. யானை அதனைப் பாதுகாக்கும் பொருட்டு தனது அடிமையான ஆமையை அந்தக் குட்டையில் விட்டு நீரை வேறு யாரும் குடித்துவிடாமல் பாதுகாக்கச் சொல்லிவிட்டு உணவருந்தச் சென்றது.

அந்தக் குட்டைக்கு வந்த வரிக்குதிரையைக் கண்ட ஆமை, "இந்த நீர் யானை எசமானருக்குச் சொந்தம். எனவே இதனை நீர் குடிக்கக் கூடாது" என்று தடுத்தது.

அடுத்து வந்த நரி, பன்றி, கரடி, ஒநாய் போன்ற அனைத்து மிருகங்களிடமும் அவ்வாறே சொல்லி விரட்டி அடித்தது. அடுத்ததாக அங்கு வந்த சிங்கத்திடமும், "இந்த நீர் யானை எசமானருக்குச் சொந்தம்" என்று ஆமை கூற ஆரம்பித்ததுமே தன் பலம் பொருந்திய காலால் ஓங்கி அறைந்து வெளியே தள்ளிவிட்டு, குட்டை நீரைக் குடித்துச் சென்றது.

உணவருந்திவிட்டுத் திரும்பி வந்த யானை குட்டையில் நீரில்லாததைக் கண்டு ஆமையிடம், "என்ன நடந்தது?" என்று கோபத்துடன் கேட்டது.

ஆமை அழுது கொண்டே நடந்ததைக் கூற, அதனை நம்பாத யானை, "நீரை எல்லாம் நீயே குடித்துவிட்டு நாடகமாடுகிறாய்" என குற்றம் சாட்டியது.

"என்னை ஏமாற்றிய உனக்கு மரணம் நிச்சயம். உன்னைக் காலால் மிதித்துக் கொல்லட்டுமா? விழுங்கிவிடட்டுமா?" என்று ஆமையிடம் கேட்டது யானை.

"என்னை விழுங்கிவிடுங்கள், எசமானரே" என்று கேட்டுக் கொண்டது ஆமை.

யானை ஆமையை விழுங்கியதும், ஆமை யானையின், இதயம், கல்லீரல், நுரையீரல் போன்ற அனைத்து உள்ளுறுப்புகளையும் கிழித்துப் போட்டது. வலி தாங்காமல் கதறித்துடித்த யானை சற்று நேரத்தில் இறந்துவிட்டது. ஆமை யானையின் இறந்த உடலிலிருந்து வெளிப்பட்டு சுதந்திரமாய் வாழ்ந்து வந்தது.

யானை இறந்ததைக் கேட்டதும், மழையும் மகிழ்ச்சியாகப் பெய்து நீர்நிலைகளை நிரப்பியது.

0 கருத்துகள்: