வியாழன், 11 நவம்பர், 2010

குழந்தைகள் கடத்தலும் வர்க்கப் பார்வையும்

மெளனத்தில் கரையும் அடித்தட்டு குழந்தைகளின் கண்ணீர் 

கோவையில் இரண்டு குழந்தைகள் கடத்தப்பட்டுக் கொடூரமாகக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அதில் பெண் குழந்தை பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறது. சென்னையில் இரண்டு சம்பவங்களில் குழந்தைகள் கடத்தப்பட்டு உயிரோடு மீட்கப்பட்டிருக்கிறார்கள். ஒட்டுமொத்த சமூகமும் தங்களது குழந்தைகள் பள்ளிக்குப் பாதுகாப்பாகச் சென்று திரும்புவார்களா என்று பீதியடையச் செய்திருக்கின்றன இந்தச் சம்பவங்கள். பள்ளி வாகனத்தில் அனுப்பி வந்த குழந்தைகளைத் தாங்களே நேரடியாக அழைத்து வருவது என ஒரு சில பெற்றோர் இந்நேரம் முடிவெடுத்திருப்பார்கள். எனினும் அந்த வைராக்கியத்தை அவர்களால் கொஞ்ச நாள் மட்டுமே காப்பாற்ற முடியும். கூட்டுக் குடும்பம் சிதைந்துபோன, கணவன்-மனைவி இருவரும் வேலைக்குச் செல்கிற இன்றைய காலகட்டத்தில் அது குறுகிய காலத்திற்கு மட்டுமே சாத்தியம்.  

                ஒரு பிரச்சினை நடுத்தர வர்க்கத்தின் வாசலில் எட்டிப் பார்க்கும்போது ஏற்படுகிற உணர்ச்சிப் பெருக்கையும் அரசுக்கு அவர்கள் ஏற்படுத்துகிற மறைமுகமான நெருக்கடியையும் பார்க்கும்போது, உண்மையில் மக்கள் மனது வைத்தால் இந்த ஜனநாயகத்தை நிஜமான ஜனநாயகமாக உயிர்ப்புடன் வைத்திருக்கும் சாத்தியங்கள் உள்ளன என்ற நம்பிக்கை பிறக்கிறது. கோவையில் ஏதோ ஒரு குடும்பம் தனது இரண்டு பிள்ளைகளையும் கடத்தல்காரர்களிடம் இழந்துவிட்டு நின்றபோது, இத்தகைய பிரச்சினை தங்கள் ஒவ்வொருவர் வீட்டிலும் நிகழக்கூடும் என்று கருதிய ஒட்டுமொத்த நடுத்தர வர்க்கமும் அதிர்ந்து போனது. ஒரு மக்கள் செல்வாக்கு கொண்ட மிகப் பெரிய தலைவரின் இறுதி ஊர்வலம் போல அந்தக் குழந்தைகள் பெரும் திரளான மக்கள் அலையுடனும் உணர்வு அலையுடனும் அடக்கம் செய்யப்பட்டார்கள். பல லட்சங்களையோ, கோடிகளையோ ஈர்க்க முடிகிற மேல்நடுத்தர, பணக்கார வர்க்கத்தினரையே இத்தகைய கடத்தல்காரர்கள் பணம் கேட்டு மிரட்டுவதற்காக கடத்துகிறார்கள் என்றாலும், நடுத்தர வர்க்கம் இது தனது குழந்தைகளுக்கும் ஏற்படக்கூடும் என அஞ்சியது. அந்த உணர்ச்சி அலை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையையே அசைத்துப் பார்த்தது. கடத்தல்காரர்கள் மீது ஏற்பட்ட கோபம், அதைத் தடுக்காத போலீஸ் மீது ஏற்பட்ட கோபம் தி.மு.க. அரசாங்கத்தின் மீது திரும்பும், தேர்தலில் அதன் வெற்றி வாய்ப்பை பாதிக்கும் என்று உணர்ந்த மறுகணமே திராவிட அரசியல்வாதிகள் போர்க்களத்தில் இறங்கினார்கள். காவல் துறை நியமனங்களில் ஊழலையும் பரிந்துரைகளையும் புகுத்தி அதை மந்தமாக்கிய அரசாங்கம் திடீரென சாட்டையை சொடுக்கியது. நல்ல தூக்கத்திற்கு நடுவில் எழுப்பிவிட்டு வேட்டைக்கு அனுப்பப்பட்டதாலோ என்னவோ சற்று தடுமாறிவிட்டுக் கடைசி இரு சம்பவங்களிலும் கடத்தப்பட்ட சிறுவர்களை உயிருடன் மீட்டிருக்கிறார்கள் போலீஸ்காரர்கள்; ஒரு சம்பவத்தில் பணத்தையும் கொடுத்த பிறகு. சம்பவம் முடிந்ததுமே அவர்களின் பி.ஆர். வேலை தொடங்கியது. ஒரு தந்திர யுக்தியாகத்தான் பணம் கொடுக்கப்பட்டது என்றார் முதல்வர் மு.கருணாநிதி. கோவையில் குழந்தைகள் கடத்தப்பட்டது குறித்து தாமதமாகவே போலீசுக்குப் புகார் தரப்பட்டதுதான் அந்தக் குழந்தைகளைக் காப்பாற்ற முடியாமல் போனதற்குக் காரணம் என்று சென்னையின் கமிஷனர் கண்ணாயிரம் உதாராகப் பேசினார். குழந்தைகள் கடத்தப்பட்டுவிட்டால் ஆழ்ந்த உறக்கத்திலிருக்கும் தங்களை எழுப்ப ஒரு வாளித் தண்ணீருடன் காவல் நிலையத்தை உடனடியாக அணுக வேண்டும், இல்லாவிட்டால் ஆபரேஷன் தோற்றதற்கு நீங்களே காரணம் என்று எஃப்.ஐ.ஆர். போடுவோம் என்ற ரீதியில் பேசியிருக்கிறார். கேடி கோயபல்ஸ் இப்படி நபர்களையும் ஊடகங்களையும் வைத்துக் காட்சியைத் தனக்கு சாதகமாக மாற்ற முடயற்சி செய்தால், ரவுடி ராக்கம்மா சும்மா விட்டுவிடுவாரா? தமிழகத்தில் சமீப காலமாக வரிசையாக நடக்கும் குற்றச் சம்பவங்களையும் குற்றங்கள் செய்வதன் ஒட்டுமொத்த டீலர்ஷிப் எடுத்துக்கொண்டிருக்கும் தி.மு.க. கட்சிக்காரர்களையும் பற்றி சம்பவ உதாரணங்களுடன் விளாசிவிட்டார் விளாசி. இந்த அரசியல் அக்கப்போருக்கு நடுவில் உண்மையில் காணாமல் போயிருப்பது அடித்தட்டு வர்க்கத்தின் கொடுத்து வைக்காத குழந்தைகள்தான்.



                இந்தியாவில் 2005ல் மட்டும் 44,476 குழந்தைகள் காணாமல் போகிறார்கள். இதைவிட அதிகமான குழந்தைகள் வேலைக்கு என்ற பெயரில் அழைத்துச் செல்லப்பட்டு கொடுமையான தொழிற்சாலைகளிலும் அதைவிட கொடியவர்கள் நிரம்பிய வீட்டு வேலைக்கும் பலர் பிராத்தல்களிலும் தள்ளப்படுகிறார்கள். இந்தியாவிலுள்ள 28 லட்ச பாலியல் தொழிலாளர்களில் 43 சதவீதம் பேர் வயதுக்கு வராதவர்கள். அதில் பெரும்பாலானோர் அதில் குடும்பத்தாலேயே கட்டாயப்படுத்தி தள்ளப்பட்டவர்களும் இருப்பார்கள், கடத்தப்பட்டு தள்ளப்பட்டவர்களும் இருப்பார்கள். இதில் பிரதானமாக பாதிக்கப்படுவது, ஏழ்மையின் பிடியில் இருக்கும் அடித்தட்டு குடும்பத்துக் குழந்தைகளே. அடித்தட்டு வீட்டுக் குழந்தைகள் ரயிலில் கூட்டம் கூட்டமாக அழைத்துச் செல்லப்படும்போதோ, அவர்கள் ஏதோ ஒரு வீட்டில் காவலாளியால் அல்லது முதலாளியால் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்படும் போதோ நடுத்தர வர்க்கத்தின் உணர்வுகள் இவ்வாறு பொங்கி எழுவதில்லை. அத்தகைய ஒரு நிகழ்வு தங்கள் வீட்டில் நிகழும் என்ற அச்சுறுத்தல் ஏற்படும்போது வெளிப்படுத்துகிற மனிதாபிமானமும் கூட்டு உணர்வையும் சமூகத்தின் ஒவ்வொரு முக்கியமான பிரச்சினையிலும் வெளிப்படுத்தினால் திராவிட அரசாங்கங்கள்கூட மக்களை ஏமாற்றி அரசியல் செய்ய முடியாது. ஆளும் கட்சியின் கொட்டத்தைத் தேர்தலின்போது அடக்கிக்கொள்ளலாம் என்று விட்டுவிடுவது தனக்கே இப்படி ஒரு பீதியை உண்டாக்கும் என நடுத்தர வர்க்கம் நினைத்துப் பார்த்திருக்காது.  

                கடந்த நான்கரை ஆண்டுகளில் தமிழக அரசாங்கம் ஒவ்வொரு அம்சத்திலும் செயலிழந்து வருகிறது அல்லது எதிர்மறையாகச் செயல்பட்டு வருகிறது. காவல் துறையின் முக்கிய பொறுப்புக்கள் முதல் பல்கலைக்கழகத் துணை வேந்தர் பொறுப்புக்கள்வரை ஒரு விலைக்கு விற்கப்படுகின்றன; அரசியல் கட்சிகளுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு சிறப்புத் தள்ளுபடி உண்டு. அரசின் ஒவ்வொரு அங்கமும் ஊழலால் புளுத்துவிட்ட பிறகு அவை செய்யவேண்டிய கடமையை சரிவர செய்யும் என எவ்வாறு எதிர்பார்க்க முடியும்? அதனால் துணைவேந்தர்கள் கல்வி கிடக்கிறது களுதை என்று தொலைநிலைக் கல்வி மூலம் கல்லா கட்டுகிறார்கள். போலீஸ்காரர்கள் சட்டம், ஒழுங்கு கிடக்கிறது களுதை என்று தங்கள் வசூலில் குறியாக இருக்கிறார்கள். அவர்கள் வசூலைப் பார்ப்பார்களா, குற்றங்கள் அதிகமாகி வருவதைத் தடுக்கப் பார்ப்பார்களா? இப்படி பிரச்சினைகள் ஏற்படுகிற சமயங்களில் மட்டும் சுறுசுறுப்பாக இருப்பது போல் நடித்துக்கொண்டு, தங்களைப் பற்றி ஊடகங்களில் நல்லவிதமாக செய்தி வருவதை உறுதி செய்துவிட்டால் போதுமானது. தங்கள் வேலையையும் காப்பாற்றிக் கொள்ளலாம், ஏதோ நடவடிக்கை எடுத்தோம் என்றும் காட்டிக்கொள்ளலாம். நுகர்வுக் கலாச்சாரத்தின் தாக்கத்தால் உழைக்காமல், குறுக்கு வழியில் பணக்காரர்களாக நினைக்கும் நபர்களுக்கு இதுதான் சரியான வாய்ப்பு. எளிதான இலக்குகளான குழந்தைகளைக் கடத்துவதும் சுலபம், பெற்றோரின் உணர்வுகளைப் பயன்படுத்தி பணத்தை பெறுவதும் சுலபம் என அவர்கள் கணக்குப் போடுகிறார்கள். இந்த இரண்டொரு சம்பவங்கள் போலீஸில் புகாராகி, சம்பவம் ஊடகங்களில் அடிபட்டதால் நமக்கெல்லாம் அதைப் பற்றி தெரிகிறது. இந்த மட்டத்திற்கு வராமல் இந்தக் கடத்தல் பிசினஸ் எத்தனையோ குறுக்குப் புத்திக்காரர்களுக்கு பணமீட்ட உதவியிருக்கும். அந்த தைரியம்தான் மேலும் மேலும் புதிய சட்ட விரோத சக்திகள் பணக்கார வீட்டுக் குழந்தைகளைக் குறி வைத்து களமிறங்க அடிப்படை ஊக்கத்தைக் கொடுக்கின்றன.


                காவல் துறை தூங்கிக்கொண்டிருக்கிறது என்றால், நீதித்துறை அதன் மந்தத்தனத்திற்காகப் பிரசித்தி பெற்றது. நடுத்தர வர்க்கம் தனது எண்ணிக்கை மூலமும் கூட்டு சேரும் விழிப்புணர்வு மூலமும் தனது பிரச்சினைகளை வெளிப்படுத்தி அரசுக்கு நெருக்கடி உண்டாக்க முடியும். மேல்தட்டு வர்க்கம் பணத்தை வைத்தும் அரசியலுடனான நெருக்கம் மூலமாகவும் தன்னைப் பிரச்சினைகளிலிருந்து மீட்டுக்கொள்ள முயற்சிக்கும். இந்த இரண்டு வாய்ப்புகளும் இல்லாத அடித்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்த குழந்தைகள்தான் காவல் துறையின் செயலின்மையாலும் நீதித் துறையின் மந்தத்தனத்தாலும் அதிகம் பாதிக்கப்படுகின்றன. ஹேக் கன்வென்ஷன் ஆன் சைல்ட் அப்டெக்ஷன் என்ற சர்வதேச குழந்தை கடத்தலுக்கு எதிரான ஒப்பந்தத்தில் இந்தியாவைக் கையெடுத்திட நிர்ப்பந்திப்பது தற்போதை கடத்தல்களுடன் நேரடியாகத் தொடர்புடையது இல்லையென்றாலும் அவசியமான ஒன்று. ஊடகங்களைப் போலவே மக்களின் ஞாபகமும் பலவீனமானது என்ற எண்ணம்தான் அரசாங்கத்தின் அலட்சியத்தின் ரகசியம். கோவையில் இரண்டு குழந்தைகளின் மரணத்தால் எழுந்த உணர்ச்சி வேகம், நடுத்தர வர்க்கத்தின் மனதில் ஒரு பாடமாகப் பதிய வேண்டியது அவசியம்.

0 கருத்துகள்: