வியாழன், 18 நவம்பர், 2010

சாம்சங் கேலக்ஸி டேப்ளட் பிசி

பெர்சனல் கம்ப்யூட்டர்கள் நமக்குக் கிடைத்த நாளிலிருந்து, தொழில் நுட்ப வளர்ச்சி முடங்கிவிடாமல், தொடர்ந்து வளர்ந்து கொண்டுள்ளது. பெர்சனல் கம்ப்யூட்டர் அல்லது டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களைத் தொடர்ந்து, மக்கள் தாங்கள் செல்லும் இடங்களில் எல்லாம் கைகளில் வைத்து இயக்க கம்ப்யூட்டர்களை எதிர்பார்த்தனர். அதற்கென லேப்டாப் கம்ப்யூட்டர்கள் கிடைத்தன.  பின் இந்த லேப்டாப் கம்ப்யூட்டர்களில், டச் ஸ்கிரீனை எதிர்பார்த்த மக்களுக்கு   டேப்ளட் பிசிக்கள் கிடைத்தன. ஆனால் மக்களின் பயன் பாட்டில்,  தொடக்கத்தில் இவை இடம் பெறவில்லை. லேப்டாப் கம்ப்யூட்டர்களைக் காட்டிலும் எடை குறைவாக, எளிதாகக் கையாள ஒரு கம்ப்யூட்டரைத் தேடினார்கள். அதற்கான விடையாக, நெட்புக் அல்லது நெட் டாப் கம்ப்யூட்டர்கள் கிடைத்தன. இவற்றைக் காட்டிலும் சிறியதாக, 5 முதல் 10 அங்குல அகலத்தில் தொடுதிரையுடன் கூடிய கம்ப்யூட்டரை நாடிய போது, முன்னர் அறிமுக நிலையில் இருந்த டேப்ளட் பிசிக்கள், புதிய விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் அறிமுகமாகி வருகின்றன.
பெர்சனல் கம்ப்யூட்டரை முதலில் கொண்டு வந்த ஆப்பிள் நிறுவனமே, டேப்ளட் பிசியையும் அறிமுகப்படுத்தியது. ஆப்பிள் தன் ஐ–பேட் சாதனத்தை இந்த வகையில் கொண்டு வந்தது. ஆனால் இதன் பயன்பாடு மக்களின் தாகத்திற்குச் சரியான தீனி இடாததால், 2010 ஆம் ஆண்டில் பல நிறுவனங் கள் டேப்ளட் பிசிக்கள் தயாரிப்பில் இறங்கியுள்ளன.
டேப்ளட் பிசிக்களைப் பல நிறுவனங்கள் வெளியிடத் தொடங்கிவிட்டன. இன்னும் சில ஆண்டுகளில் மிகப் பெரிய எண்ணிக்கையில் மக்களிடம் இடம் பிடிக்க இருக்கும் இந்த சாதன விற்பனைச் சந்தையில் பல முன்னணி நிறுவனங்கள் இடம் பிடிக்க இப்போதிருந்தே தயாராகி வருகின்றன. அந்த வகையில், அண்மையில் சாம்சங் வெளியிட்ட கேலக்ஸி டேப்ளட் பிசி அனைவரின் கவனத்தையும் கவர்ந்துள்ளது. அதன் சிறப்புகளை இங்கு காண்போம்.
 ஐ–பேட்  டேப்ளட் பிசிக்கு போட்டியாக இது சந்தையில் உலா வரும் என்று அனைவரும் கணித்துள்ளனர்.  ஏறத்தாழ ஐ–பேட்   சாதனத்தைப் போல வடிவில் இருந்தாலும் (பரிமாணம் 190.09 து 120.45 x  11.98மிமீ ), கேலக்ஸியின் டி.எப்.டி. திரை 7 அங்குல அகலம் கொண்டு தொடுதிரை யாக   உள்ளது. (ஐ–பேட் திரை 9.7 அங்குலம்). இது ஒரு சிறிய நூல் வடிவில் உள்ளது. இரண்டின் பரிமாணமும் ஒரே வகையில் இருந்தாலும், ஐ–பேட் சாதனத்தின் எடையைக் காட்டிலும் குறைவாக 380 கிராம்  எடை உள்ளது.  எனவே ஒரே கையில் பிடித்து, நடந்து கொண்டிருக்கும் போதே இதனை எளிதாக இயக்கலாம்.  இதன் திரை  1024 x  768 ரெசல்யூ சனில் பார்ப்பதற்கு பளிச் என உள்ளது.
இதன் கீ போர்டு அழுத்துவதற்கு மற்ற கீகளின் இடையூறு இன்றி எளிதாக உள்ளது. இந்த வகையில் இது ஒரு மிகப் பெரிய பிளாக் பெரி ஸ்மார்ட் போன் போலத் தோற்ற மளிக்கிறது.  இதில் ஆண்ட்ராய்ட் 2.2. ப்ரையோ ஆப்பரேட்டிங் சிஸ்டம், ஒரு கிகா ஹெர்ட்ஸ் ப்ராசசருடன் இயங்குகிறது. டெஸ்க்டாப், ஸ்லைடிங் அப்ளிகேஷன் ட்ரே, விட்ஜெட்கள், மேலாக உள்ள ஸ்டேட்டஸ் பார் ஆகியவை மாற்றப்படாமல் அப்படியே உள்ளன. அலெர்ட் கிடைத்தால், விரல் தொட்டு இழுத்து அமைத்துக் கொள்ளலாம்.
எலக்ட்ரானிக் டெக்ஸ்ட்களைப் படிக்க, சாம்சங் இதில் மூன்று அப்ளிகேஷன்களைத் தந்துள்ளது. நியூஸ் படிக்க ப்ரெஸ் டிஸ்பிளே (Press Display) , இபுக் படிக்க கோபோ (Kobo) இதழ்கள் வாசிக்க ஸினியோ (Zinio) . இதழ்களைப் படிக்கும் போதுதான், இன்னும் கொஞ்சம் கூடுதல் அகலத்தில் திரை இருந்திருக்கலாமோ என்று எண்ணத் தோன்றுகிறது.
ஆண்ட்ராய்ட் மார்க்கட் அப்ளிகேஷன் ஸ்டோரை, மிக எளிதாக இதன் திரை மேலுள்ள ஐகான் அழுத்திப் பெறலாம். விரைவாக அப்ளிகேஷன்களை டவுண்லோட் செய்திட முடிகிறது.
பிளாஷ் பிளேயர் 10.1 இதில் இயங்குவதால், இணையப் பக்கங்களை வேகமாக இயக்கிப் பார்க்க முடிகிறது.
கொடுக்கப்பட்ட மெமரி கார்ட் ஸ்லாட் மூலம், இதன் நினைவகத்தினை 32 ஜிபி வரை அதிகப்படுத்தலாம்.  GSM/GPRS/EDGE நெட்வொர்க்கில் இயங்கும் இந்த டேப்ளட் பிசியில் 3ஜி நெட்வொர்க் இணைப்பும்  தரப்பட்டுள்ளது. அதிவேக இணைய பிரவுசிங் மேற்கொள்ள வை–பி  உள்ளது. மற்ற சாதனங்களுடன் வயர்லெஸ் இணைப்பிற்கு புளுடூத் 3.0 கிடைக்கிறது.
டேப்ளட் பிசியின் முன்பக்கத்தில், வீடியோ அழைப்புகளுக்கு 1.3 மெகா பிக்ஸெல் கேமராவும், பின்புறம் வழக்கமான 3 மெகா பிக்ஸெல் ஆட்டோ போகஸ் கேமராவும்  தரப்பட்டுள்ளது. வழக்கமான ஜியோ மேக்னடிக் சென்சார் இணைப்புடன், கைரோ ஸ்கோப் சென்சார் மற்றும் ஆக்ஸிலரோமீட்டர் ஆகியன இணைந்துள்ளன.
இதனைப் பயன்படுத்துபவர்கள், ஹை டெபனிஷன் வகை திரைப்படங்களை இதன் 7 அங்குல திரையில் பார்த்து ரசிக்க முடியும்.  இதில் Swype  எனப்படும் திரையில் இயங்கும் கீ போர்டும் கிடைக்கிறது. ஆபீஸ் டாகுமெண்ட்களைக் காண Think Free Suite   என்ற அப்ளிகேஷன் தரப்படுகிறது.  இதில் தரப்பட்டுள்ள திறன் கொண்ட பேட்டரி யினால், ஏழு மணி நேரம் தொடர்ந்து இந்த டேப்ளட்  பிசியை இயக்கலாம். அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த டேப்ளட் பிசி, ஆசிய நாடுகளிலும் படிப்படியாக விற்பனைக்கு வந்துள்ளது.  இந்தியாவில் வரும் டிசம்பர் இறுதிக்குள், இது விற்பனைக்கு வரலாம். மேற்கு நாடுகளில் இதன் விலையைப் பார்க்கையில், இந்தியாவில் இது அதிக பட்சமாக ரூ.40,000 என்ற அளவில் இருக்கலாம் என்று எதிர்பபார்க்கப்படுகிறது

0 கருத்துகள்: