தமிழ்க் கவிஞர்கள் யாருக்கும் இல்லாத பெருமை திருவள்ளுவருக்கு மட்டும் உண்டு. குமரிமுனையில் 133 அடி உயரத்தில் பிரம்மாண்டமான சிலையாக வள்ளுவர் நிற்பதற்குக் காரணம், அவர் திருக்குறள் என்ற அறநூலைப் படைத்ததுதான். சங்க காலத்திற்குப் பிந்தைய நூலாக திருக்குறள் ஏதோ ஒரு வகையில் தமிழில் தொடர்ந்து செல்வாக்குப் பெற்றிருக்கிறது. பக்தி இயக்கக் காலகட்டத்தில் முக்கியத்துவம் இல்லாமலிருந்த திருக்குறள், இருபதாம் நூற்றாண்டில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
வள்ளுவத்தின் எழுச்சி
தேவாரம், நாலாயிரத் திவ்விய பிரபந்தம், புராணங்கள் போன்றவற்றை இலக்கியமாகக் கருதிய சூழலில், அதற்கு மாற்றாகத் திராவிட இயக்கத்தினர் திருக்குறளை முன்னிறுத்திப் புதிய சொல்லாடலை உருவாக்கினர். கடவுளை மையமாக்கிப் புனையப்பட்ட பக்தி இலக்கியம் பரப்பிய நம்பிக்கைகளுக்கு எதிராக திருக்குறளின் அறிவுபூர்வமான கருத்துகள், தமிழகத்தில் முதன்மையிடம் பெற்றன. நாளடைவில் திருக்குறள் தமிழர் மறை அல்லது வேதம் எனப் போற்றப்பட்டது. மத அடையாளம் வெளிப்படையாக அற்ற திருக்குறளின் பொதுத்தன்மையானது சமூக சீர்திருத்த நோக்கமுடையவர்களைக் கவர்ந்தது.
அன்றைய காலகட்டத்தில் சமஸ்கிருதத்தினை தேவபாஷையாக உயர்த்திப் பிடித்த வைதிக இந்து சமய நெறிக்கு மாறாகத் தமிழின் மேன்மையை வெளிப்படுத்தத் திருக்குறள் பெரிதும் பயன்பட்டது. 1950-களில் தொடங்கி திருமண விழாக்களில் அன்பளிப்பாக வழங்கப்படும் பொருளாகத் திருக்குறள் இடம் பெற்றது. திருமண அழைப்பிதழ்களில், 'அன்பும், அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை...' எனத் தொடங்கும் திருக்குறள் அச்சடிக்கப்பட்டது.
தொடக்கப் பள்ளிக்கூடம் தொடங்கி உயர்கல்வி வரை திருக்குறள் தமிழ்ப் பாடத் திட்டத்தில் இடம் பெறுதல் கட்டாயமானது. எழுபதுகளில் பேருந்துகளில் இடம்பெற்ற திருக்குறள், ஓரளவு வாசிக்கத் தெரிந்தவர்களின் மனதில் பதிவாகியது. தமிழில் இருந்து உலக மொழிகளில் அதிகமாக மொழிபெயர்க்கப்பட்டுள்ள நூல் திருக்குறள் ஆகும். இன்று தமிழின் அடையாளமாக அறியப்பட்டுள்ள திருக்குறளின் செல்வாக்கு, தமிழரின் வாழ்வில் ஆழமாக ஊடுருவியுள்ளது.
திருக்குறளை இந்தியாவின் தேசிய நூலாக அறிவிக்க வேண்டுமென்று ஒலித்த குரல்கள், தமிழைச் செம்மொழியாக அறிவித்தவுடன் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளன. இன்னொரு புறம் திருக்குறளை உலகப் பொதுமறையாக உயர்த்திப் பிடிக்கும் போக்கு வலுவடைந்துள்ளது. அறக்கருத்து அல்லது நீதியைத் தமிழர்களிடையே போதிக்கும் அறநூலான திருக்குறள், ஒப்பீட்டளவில் வேறு எந்த நூலையும் விடத் தமிழறிஞர்களால் போற்றப்படுகின்றது. ஒவ்வொரு அறக்கருத்தும் மனிதர்களை மேன்மைப்படுத்தும் தன்மையுடையது என்ற கருத்தானது பொதுப்புத்தியாகத் தமிழரிடையே நிலவுகிறது. இத்தகைய போக்குகள் நுண்ணரசியலைப் பின்புலமாகக் கொண்டுள்ளன.
திருக்குறள் உலகப் பொதுமறையா?
உலகமயமாக்கல், தகவல் தொடர்புப் பரவல் காரணமாகத் தமிழ் அடையாளமானது பெரும் சவால்களை எதிர்நோக்கியுள்ளது. தமிழரின் வாழ்நிலையும் தமிழின் இருப்பும் முன்னைவிடச் சிக்கலுக்குள்ளாகியுள்ளன. அறிவியல், தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள பிரம்மாண்டமான வளர்ச்சிக்கேற்ப தமிழ்மொழியும் மாற வேண்டிய நெருக்கடியான சூழலில் உள்ளது. உலகமெங்கும் தமிழர்கள் பரவியுள்ள நிலையில், தமிழை உலகமொழிகளில் ஒன்றாக மாற்ற வேண்டியது இன்றைய உடனடித் தேவை. ஆனால், திருக்குறளை உலகப் பொதுமறை என்ற புனைவைக் கட்டமைத்துப் பிரச்சாரம் செய்யும் முயற்சி மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இத்தகு சூழலில் மனிதர்கள் வாழவேண்டிய நெறிமுறைகள் யாவை என்பதைக் கண்டறிந்து, அவற்றைச் செய்யுள் வடிவில் தந்துள்ள வள்ளுவரின் கருத்தியலையும், அவை நவீனத் தமிழ்ச் சமூகத்தில் பெறுமிடத்தையும் மதிப்பிட வேண்டியுள்ளது.
நவீன மனிதனுக்கும் திருக்குறள் பிரதிக்குமான உறவு குறித்துக் கண்டறியும்போது புதிய சொல்லாடல்கள் பிறக்க வழியேற்படும். சங்க காலத் தமிழகத்தில் பல்வேறுபட்ட இனக்குழுவினர் ஒருங்கிணைந்தும் முரண்பட்டும், தங்கள் அடையாளங்களை வெளிப்படுத்தினர். குடும்பம், அரசு போன்ற கருத்தியல்கள் வலுப்பெற்றுக் கொண்டிருந்தன. ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழும் குடும்பம் இருந்தது. அதே வேளையில் தாய் வழிச் சமுதாயத்தின் எச்சமாக விளங்கிய பெண்கள் குடும்ப அமைப்பிற்குள் கட்டுப்படாமல், ஆணைப் போலவே தன்னிச்சையாக வாழ்ந்தனர். போரில் எதிராளியைக் கொல்லுதல், இறைச்சி உண்ணுதல், கள் குடித்தல், ஆறலைக் களவு, ஆநிரை கவர்தல், ஒருவரையொருவர் விரும்பிய ஆணும், பெண்ணும் திருமணத்திற்கு முன்னர் உடலுறவு கொள்ளுதல் போன்றன இயல்பாக நடைமுறையிலிருந்தன. கொண்டாட்டங்கள் நிரம்பிய அன்றாட வாழ்வில், தத்துவ போதனைகளைக் கேட்கவோ, போதிக்கவோ யாருக்கும் அக்கறை இல்லை. எனவே ஒழுக்க விதிகள் அல்லது அறக் கருத்துகளின் தொகுப்பு நூல் எதுவும் சங்க காலத்தில் எழுதப்படவில்லை.
பௌத்த, ஜைனத் துறவியரின் தமிழக வருகைக்குப் பின்னர், தமிழரின் நடைமுறை வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்பட்டன. வைதிக இந்து சமயம் கற்பித்த சாதிய ஏற்றத் தாழ்வு சமூகத்தில் வலுப்பெற்றது. உழவுத் தொழிலையும், வணிகத்தையும் அங்கீகரித்த ஜைன சமயம், மக்களிடையே நிலவிய பொருளியல் சமமற்ற சூழலை வினைக் கோட்பாடு மூலம் நியாயப்படுத்தியது. ஜைன சமயம் போதித்த அறங்கள் 'உயிர்க்கொலை கூடாது' என்பதை முதன்மையாகப் போதித்தன. பௌத்த சமயத்தின் பஞ்சசீலமானது கொல்லாமை, களவு செய்யாமை, காமம் கொள்ளாமை, பொய் பேசாமை, கள் குடிக்காதிருத்தல் ஆகியவற்றை அறங்களாக வலியுறுத்தியது.
மதத்தைப் பரப்புதலில் மதங்களுக்கிடையில் நடைபெற்ற பூசல்களும், மோதல்களும், கொலைகளும் அளவற்றவை. இத்தகு சூழலில் ஒழுக்கம் என்ற பொருளில் 'அறம்' என்ற சொல் உருவானது. எனவேதான் பெரும்பாலான அறங்கள் மதச்சார்புடையனவாக விளங்குகின்றன. சங்க காலத்தியக் கொண்டாட்டங்களை விமர்சனக் கண்ணோட்டத்துடன் அணுகிய மதங்கள், வேறு வகைப்பட்ட நெறிகளை மக்களுக்குப் போதிக்கத் தொடங்கின. புத்தரின் போதனைகளைப் பரப்பிட முயன்ற புத்த பிக்குகளும், மகாவீரரின் கருத்துகளைப் பரப்பிய ஜைன துறவியரும் போதித்த கருத்துகள் நாளடைவில் அறங்கள் தோன்றுவதற்கான பின்புலத்தை உருவாக்கின. அன்றைய காலகட்டத்தில் தமிழில் பல அறநூல்கள் எழுதப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இன்று நமக்குத் திருக்குறள் மட்டுமே கிடைக்கிறது.
(தொடரும்)
வியாழன், 11 நவம்பர், 2010
திருக்குறள் உலகப்பொதுமறையா? - சில சொல்லாடல்கள் (1)
4:04 PM
No comments
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக