வியாழன், 30 ஜூன், 2011

பொருளாதாரப் பேதைகள்

விண்ணை முட்டும் விலைவாசி காரணமாக நாட்டு மக்கள் தாங்கொணாத தவிப்புக்கு ஆளாகிவருகிறார்கள். ஆட்சியாளர்களோ சதவீதக் கணக்கைப் போட்டுக்கொண்டு ""ரிசர்வ் வங்கி நடவடிக்கையால் பணவீக்கம் கட்டுக்குள் வந்துவிட்டது, வந்து கொண்டிருக்கிறது, வருவது உறுதி'' என்று கட்டியங்கூறிக் கொண்டே காலத்தைக் கடத்துகிறார்கள்.விலைவாசி உயர்வுக்கு காரணம் கேட்டால் ""இது சர்வதேசச் சந்தையின் பாதிப்பு, எங்களுடைய சாமர்த்தியத்தால்தான் இது தீவிரமாக உங்களைத் தாக்கவில்லை'' என்று கூறுகிறார்கள்.பன்னாட்டு நிறுவனங்களுக்கு நடைபாவாடை விரிக்க எங்கே சந்தர்ப்பம் என்று அலைபாயும் நம்முடைய ஆட்சியாளர்கள், ""சில்லறை வர்த்தகத்தில் பன்னாட்டு நிறுவனங்களின் நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளித்துவிட்டால் இந்த விலைவாசி குறைந்துவிடும்'' என்று புதிதாக ஓத ஆரம்பித்திருக்கிறார்கள்.""விலைவாசி ஒன்றும் அப்படி ஒரேயடியாக உயர்ந்துவிடவில்லை, நம் நாட்டு மக்கள் தாங்கும் அளவுக்குத்தான் இருக்கிறது, நம் நாட்டின் எந்தப் பகுதியிலும் பட்டினிச் சாவு நிகழவில்லை, வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் மக்களுக்கு மலிவு விலையிலோ இலவசமாகவோ கோதுமையும் அரிசியும் கொடுத்துக் கொண்டிருக்கிறோம், நம்முடைய களஞ்சியங்களில் அடுக்க இடம் இல்லாமல் வெட்ட வெளியில் தானியங்களை மழைக்கும் வெயிலுக்கும் தீனியாகக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்'' என்றெல்லாம் இறுமாப்புடன் பதில் சொல்கிறார்கள்.ஆனால் இந்தப் பணவீக்கம் என்ற பகாசுரன் பாமர மக்களின் வாழ்க்கையைச் சூறையாடி வருவதை ""கிரைசில்'' என்ற தர மதிப்பீட்டு அமைப்பின் சமீபத்திய ஆய்வு அம்பலப்படுத்தியிருக்கிறது.கடந்த 3 நிதியாண்டுகளில் மட்டும் 5.8 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு மக்களுக்குக் கூடுதல் செலவு ஏற்பட்டிருக்கிறது.ஏழைகள், நடுத்தர மக்களை இந்த விலை உயர்வு கடுமையாகப் பாதித்துக் கொண்டிருக்கிறது. சாப்பாட்டுச் செலவை மட்டுமே சமாளிக்க முடியாமல் குடும்பங்கள் அரை வயிறு, கால் வயிறு என்று சாப்பிடத் தொடங்கிவிட்டன. ஏழை, நடுத்தர மக்களுடைய வாங்கும் சக்தி வெகுவாகக் குறைந்துவிட்டது.சாப்பாட்டுச்செலவு அதிகமாகிவிட்டதால் மருத்துவச் செலவு, கல்விச் செலவு போன்றவற்றைக் குறைத்துக் கொள்ள ஆரம்பித்துவிட்டனர். நோய் முற்றி பாயில் விழுந்தால்தான் இனி சிகிச்சை என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.2008-09-ம் நிதியாண்டு முதல் 2010-11-ம் நிதியாண்டு வரை பணவீக்க விகிதம் 8% ஆக அதிகரித்துக் கொண்டே வந்துள்ளது. அதற்கு முந்தைய ஆண்டில் இது வெறும் 5% ஆகத்தான் இருந்தது.அரிசி, கோதுமை, பருப்பு, இதர தானியங்கள், சமையல் எண்ணெய், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றின் விலை உயர்வு மட்டும் 11.6% ஆக இந்தக் காலத்தில் இருந்திருக்கிறது. உணவுப் பொருள் அல்லாத பண்டங்களின் விலை உயர்வோ 5.7% ஆகத்தான் இருந்திருக்கிறது. இதில் இரட்டை ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. அதாவது சாமான்யர்கள் உற்பத்தி செய்யும் பண்டங்களுக்குத் தேவை குறைந்து அவற்றை வாங்குவோர் குறைந்ததால் அவற்றின் விலையை உயர்த்த முடியாமல் குறைத்துவிட்டனர். இதனால் அந்தத் துறையில் வேலை இழப்பும் ஆள் குறைப்பும் ஏற்பட்டிருக்கிறது. விலைவாசியைக் குறைக்க அரசு எடுத்த ஒரே நடவடிக்கை ரிசர்வ் வங்கி மூலம் வட்டி வீதத்தை கால், கால் (0.25) சதவீதமாக பத்து முறை உயர்த்தியதுதான். வீடு கட்டக் கடன் வாங்கியவர்களும் வாகனக்கடன் வாங்கியவர்களும் மேலும் தங்களுடைய பொருளாதாரச் சக்தியை இழந்ததுதான் மிச்சம்.அதனால், வங்கிகளின் புத்தக மதிப்பு லாபம் பல மடங்கு கூடியது; எனவே ஆட்சியாளர்கள் ""தங்களுடைய திறமையால் வங்கிகள் லாபம் ஈட்டி வருவதாக'' தம்பட்டம் அடித்து வருகின்றனர்.""சர்வதேச பண்டச் சந்தையில் விலைவாசி உயர்ந்து கொண்டே வருவதால், அதிலும் குறிப்பாக கச்சா பெட்ரோலிய எண்ணெய் விலை அதிகரித்துக் கொண்டே வருவதால் நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் விலைவாசி குறையாது, உயர்ந்துகொண்டே போகும்'' என்று ஆரூடம் கூறுகிறது ரிசர்வ் வங்கியின் அறிக்கை.சமீபத்திய டீசல், சமையல் கேஸ், கெரசின் விலை உயர்வால் பணவீக்க விகிதம் இரட்டை இலக்கை ஜூலையிலேயே தாண்டும் என்று எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது.3 ஆண்டுகளுக்கு முன்னால் ஒருவர் தன் வருவாயில் வெறும் 14 சதவீதத்தைத்தான் தன்னுடைய செலவுகளுக்காக ஒதுக்கினார். இப்போது அந்தத் தேவைகளின் எண்ணிக்கையைக் குறைத்துக்கொண்டாலும்கூட 17% அளவுக்கு அவருக்குப் பணம் தேவைப்படுகிறது. இந்த நிலைமை இப்படியே போனால் நடுத்தர மக்களிடம் சேமிப்பே இருக்காது என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். சர்வதேச அளவில் மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்ட போதிலும்கூட இந்தியாவில் பொருளாதாரச் சக்கரம் சுழல்வதற்கு நடுத்தர மக்களின் சேமிப்புதான் அச்சாணியாக இருந்தது. இப்போது அந்த அச்சாணியும் முறியத் தொடங்கியிருக்கிறது.தாங்க முடியாத விலைவாசி உயர்வுதான் தீவிரவாதத்துக்கு அடிப்படைக் காரணமாக அமையும். சராசரி மனிதனின் அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவேற்ற முடியாத அளவுக்கு விலைவாசி உயரும்போது அது சட்ட ஒழுங்கு பிரச்னையாக மாறிவிடுகிறது. இதுகூடப் புரியாமல் ஆட்சி செய்த பிரெஞ்சு மன்னன் 16}ம் லூயியின் சரித்திரத்தை இன்றைய மத்திய ஆட்சியாளர்கள் படித்துத் தெரிந்து கொள்வது நல்லது.மக்களவை பொதுத் தேர்தலுக்குத்தான் இன்னும் 3 ஆண்டுகள் இருக்கிறதே என்று மெத்தனமாக இராமல் விலைவாசியைக் கட்டுக்குள் வைக்க முழு முனைப்புடன் அரசு செயல்பட வேண்டும். பொருளாதாரம் வளருவது இருக்கட்டும். முதலில் விலைவாசியைக் குறைப்பது பற்றிக் கவலைப்படுவோம். பொருளாதாரம் படித்தால் மட்டும் போதாது. மக்களின் வாழ்வாதாரம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதும் தெரிந்திருக்க வேண்டும்.

 

0 கருத்துகள்: