சனி, 30 அக்டோபர், 2010

இணையதள வங்கித்திருட்டு



இணையதள வங்கிப்பணப்பரிமாற்றம் மூலம் ரூ.4 இலட்சம் சுருட்டிய கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
 சென்னை நுங்கம்பாக்கத்தில் ‘செடிலா கம்யூனிகேஷன்’ நிறுவனத்தை நடத்தி வருபவர் அஞ்சன்குமார். இவர் கோட்டக் மகேந்திரா வங்கியில் கணக்கு வைத்துள்ளார். இவரது கணக்கில் இருந்து திடீரென ரூ.3.92 லட்சம் மாயமானது. வங்கியில் கேட்டபோது, ஆன்லைனில் பணம் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசில் அஞ்சன் குமார் புகார் செய்தார். அதன் அடிப்படையில், சைபர் கிரைம் கூடுதல் துணை ஆணையர் சுதாகர் விசாரணை நடத்தினார். விசாரணையில், ஏழு கிணறு போர்சுகீஸ் தெருவை சேர்ந்த இம்ரான் (21), அவரது கூட்டாளிகள் அக்கிம் (26), அப்துல் காலீத் (21) ஆகிய 3 பேர் ஆன்லைனில் பணம் சுருட்டியது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இந்த நூதன மோசடி குறித்து போலீசில் இம்ரான் அளித்த வாக்குமூலம்: அஞ்சன்குமார் வங்கி கணக்கு விபரத்தை அங்கிருந்த ஒருவர் மூலம் பெற்றோம். அவரது லெட்டர் பேடை போலியாக தயாரித்து, அதன் மூலம் அவரது சிம்கார்டு தொலைந்து விட்டதாக கூறி புதிய சிம்கார்டு கேட்டு சம்பந்தபட்ட செல்போன் நிறுவனத்துக்கு விண்ணப்பித்தோம். அவர்கள் பழைய சிம்கார்டை பிளாக் செய்து புதிய சிம்கார்டு கொடுத்தனர். அதை உபயோகித்த போது, அவரது வங்கி கணக்குக்கான பாஸ்வேர்டு கிடைத்தது. இந்நிலையில், போலி டிரைவிங் லைசென்சை பயன்படுத்தி அதே வங்கியிலும், கரூர் வைஸ்யா வங்கியிலும் கணக்கு தொடங்கினோம். பின்னர் கேமரா இல்லாத இன்டர்நெட் மையத்தில் இருந்து ஆன்லைன் பண பரிவர்த்தனை மூலம் எங்களது வங்கி கணக்குக்கு பணத்தை மாற்றினோம். இதையடுத்து பர்தா அணிந்து கொண்டு ஏடிஎம் சென்டர்களுக்கு சென்று பணத்தை எடுத்தோம். இவ்வாறு இம்ரான் கூறினார். போலீஸ் எச்சரிக்கை சிம்கார்டு தொலைந்து போனால் அல்லது சிதைந்து போனால், அதே எண்ணுக்குரிய புதிய சிம்கார்டு கேட்டு செல்போன் நிறுவனங்களுக்கு விண்ணப்பிப்பது வழக்கம். அவர்களும் விண்ணப்பத்தை மட்டும் சரிபார்த்து புதிய சிம்கார்டு கொடுத்து விடுகின்றனர். இதை மோசடி கும்பல் குற்ற வழக்குகளுக்கு பயன்படுத்தி கொள்கின்றனர். இதுபோன்ற நூதன மோசடிகளை தடுக்க சம்பந்தபட்ட செல்போன் நிறுவனங்கள் அவர்களின் ஐடி புரூப்பை உறுதி செய்த பின்பே இணைப்பு வழங்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

0 கருத்துகள்: