புதன், 18 ஆகஸ்ட், 2010

இந்தியாவில் இருந்து உருவானதா சூப்பர் பக் ? சில கேள்விகளும் சந்தேகங்களும்

எந்த நோய்த்தடுப்பு மருந்துக்கும் கட்டுப்படாத, ஆபத்தான, நியூடெல்லி மெட்டல்லோ-பீட்டா-லேக்டோமேஸ்-1 (NDM-1) என்ற ஒரு வகையான புரதத்தைத் தன்னகத்துள்ளே சுமந்துள்ள ஆபத்தான பாக்டீரியா ஒன்று இந்தியாவிலிருந்து பரவி வருவதாக பிரிட்டன் மருத்துவ விஞ்ஞானி கூறியதிலிருந்து உலக அளவில் ஊடகங்கள் ஒரு விதமான பீதியை உருவாக்கி வருகின்றன.




உடலின் கண்ணுக்குத் தெரிந்த உறுப்புகள் முதல் கண்ணுக்குத் தெரியாத உறுப்புகள், நுண்ணுயிரிகள், மரபணுக்கள் வரை தங்களிடையே ஒரு செய்தி தொடர்புபடுத்தல் வலைப்பின்னல் அமைப்பைக் கொண்டுள்ளன.



அந்தச் 'செய்தி' பரிவர்த்தனையில் ஏற்படும் கோளாறுகளினால் நோய்கள் உருவாகின்றன என்று மருத்துவக் கோட்பாடுகள் சில கூறுகின்றன. ஆனால் அந்த நோய்க்கிருமி வேகமாக பரவுகிறதோ இல்லையோ அதனைப் பற்றிய செய்தி மிகவேகமாக பரவி வருகிறது.



பாக்டீரியாக்கள் தன்னகத்தே கொண்டுள்ள சமிக்ஞைச் செய்திகளை மற்றொரு உடலுக்கு அல்லது மற்றொரு பாக்டீரியாவுக்கு வேகமாக கடத்துவதை விட இந்த ஆபத்தான் பாக்டீரியா பற்றிய ஊடகச் செய்திகள் அதனைக் காட்டிலும் வேகமாகப் பரவி வருகின்றன. ஒரு 'செய்தி' ப் பரவலுக்கு மருத்துவர்கள் மருத்துவம் கண்டுபிடிக்கட்டும். ஆனால் நாம் செய்ய வேண்டியது இந்த மற்றொரு செய்திப் பரவலின் உண்மைத் தன்மைகள் குறித்து பரிசீலிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.



பிரிட்டன் கார்டிஃப் பல்கலைப் பேராசிரியர் டிமோதி வால்ஷ், புதுடெல்லிக்கு பயணம் மேற்கொண்டு திரும்பிய ஸ்வீடன் நோயாளியிடம் இந்த 'ஆபத்தான' என்.டி.எம்.-1 என்ற என்சைமைச் சுமந்திருக்கும் பாக்டீரியா இருப்பதைக் கண்டறிந்தார். அதனால் அதற்கு நியூடெல்லி என்ற அடைமொழி கிடைத்துள்ளது! ஏன் ஸ்வீடன் என்றோ அல்லது அதனைக் கண்டுபிடித்த டிமோதி வால்ஷ் பெயரோ அடைமொழியாக, முன் ஒட்டாகச் ஏன் சேர்க்கப்படவில்லை என்று தெரியவில்லை.



பொதுவாக நல்ல மருந்தைக் கண்டுபிடித்து விட்டோம் என்று மார்தட்டும்போது அதற்கு அந்த விஞ்ஞானியின் பெயரின் ஒரு பகுதியையோ அல்லது அதனை அறிவுறுத்துவது மாதிரியோ பெயர் தேர்வு செய்யப்படும். ஆனால் ஆபத்தான, மனித குலத்திற்கு 'ஆபத்து' விளைவிக்கும் நோய்க்கிருமியை, அதுவும் புதுடெல்லியிலிருந்து வந்த ஸ்வீடம் நபரிடம் கண்டுபிடித்திருப்பதால் இதற்கு நியூடெல்லி என்ற பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.



இதன் விளைவுகள் மோசமாக இருக்கும். நியூடெல்லியிலிருந்து அயல்நாட்டிற்கு செல்பவர்கள் எல்லோரும் இனி என்.டி.எம்-1 இருக்கிறதா என்ற பரிசோதனை செய்து கொள்வது நிர்பந்தமாகவே மாறிவிடலாம். அயல்நாட்டிற்குச் செல்லும் இந்தியர்களோ அல்லது இந்தியாவுக்கு வந்து சிகிச்சை பெறும் அயல்நாட்டவர்களையோ தனிமைப்படுத்துவதில் போய் இது முடியலாம்.



இதற்கு எதிர்வினையாற்றியுள்ள தேசிய நோய்க்கட்டுப்பாட்டு மைய செயலர் வி.எம். கடோச் மிகச் சரியாகவே கூறுகிறார்:



"இந்த புதிய சூப்பர் பக் என்ற கிருமி சுற்றுச்சூழல் தொடர்புடைய ஒன்றாக இருக்கும்போது அதனை ஒரு குறிப்பிட்ட நாட்டுடன் தொடர்புபடுத்தியிருப்பது துரதிர்ஷ்டவசமானது. எனக்கு ஆச்சரியமாக உள்ளது, இந்த புதிய நோய்க்கிருமி இயற்கையில் உள்ளது, இது தற்செயல் நிகழ்வு, இன்னொன்றிற்கு மாற்றமடையாதது" என்று கூறியுள்ளார்.



இவரது எதிர்வினையில் நியாயம் இல்லாமல் இல்லை. ஏனெனில் இந்த நோய்க்கிருமியில் இந்த என்.டி.எம். உருவாவதற்குக் காரணம் உலகிலேயே இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட துணைக்கண்ட நாடுகளில் அதிகம் பேர் ஆண்ட்டிபயாடிக் மருந்துகளை அதிகம் எடுத்துக் கொள்வதுதான் என்று இங்கிலாந்து ஆய்வாளர்கள் கூறியிருப்பதுதான்.



இந்த என்.டி.எம்.-1 உள்ள பாக்டீரியாவை முறியடிக்கும் மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே இது தாக்கினால் உலகம் முழுதும் மரண விகிதம் அதிகரிக்கும் என்பதுதான் தற்போது கூறப்பட்டு வரும் செய்தி.



இந்த என்.டி.எம்-1 பற்றிய ஆய்வுகள் அனைத்தும் இன்னும் மிகவும் ஆரம்ப நிலையிலேயே உள்ளது. ஆனால் அதனைப் பற்றிய அச்சுறுத்தல் மட்டும் பல்வேறு நிலைகளைக் கடந்து மக்களிடையே ஒரு பீதியைக் கிளப்பும் உச்சத்திற்குச் சென்றுள்ளது.



பாக்டீரியாக்களின் வகைகள்:



பாக்டீரியாக்கள் பற்றிய ஒரு ஆரம்ப நிலை விளக்கமே அது எல்லா வகையான சூழல்களிலும் உள்ளது என்பதே. அதனால் இது நியூடெல்லி, கராச்சி, டாக்கா என்றெல்லாம் குறிப்பிட்ட சூழலுக்கு ஏற்றி கூற முடியாது.
டி.என்.ஏ. வரிசைமுறையாக்கம் என்ற ஒன்று கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னால் பாக்டீரியாக்களை அதன் வடிவம் வைத்துத்தான் வகைபிரித்து வந்தார்கள். மேலும் அதன் உயிர்-வேதிக்கூறுகள் கொண்டு வகைப் பிரித்து வந்தார்கள்.




அதன் படி கழி அல்லது கோல் வடிவ பாக்டீர்யாக்கள் பேசில்லி (bacilli) என்றும், கோள அல்லது உருளை வடிவ பாக்டீரியாக்கள் கோக்கை (cocci) என்றும், சுருள் வடிவ பாக்டீரியாக்கள் ஸ்பைரில்லா (spirilla) என்றும் வகைபிரிக்கப்பட்டன. ஆனால் நாளடைவில் இந்த வடிவங்கள் அல்லாத மேலும் சிக்கலான வடிவ அமைப்புகளில் புதிய பாக்டீரியாக்கள் இருப்பதும் தெரியவந்தது.



தனது இருத்தலுக்கு பிராண வாயு கட்டாயம் தேவைப்படும் பாக்டீரியாக்கள் ஏரோபிக் பாக்டீரியாக்கள் என்றும், பிராண வாயு தேவைப்படாத பாக்டீரியாக்கள் அனரோபிக் பாக்டீரியாக்கள் என்றும் அறியப்படுவது எல்லாம் நாம் பாடப்புத்தகங்களில் பார்த்திருப்போம்.



ஆனால் இப்போது நம் விவாதத்திற்கு முக்கியமான வகைப்பிரிவு இதோ: கிராம் பாசிட்டிவ் பாக்டீரியா, கிராம் நெகடிவ் பாக்டீரியா. அதாவது அதன் நிறவேறுபாடு (stain) வைத்து இதனை பிரித்துள்ளனர். கிராம் என்றால் பயப்படுவதற்கு ஒன்றுமில்லை. 1884ஆம் ஆண்டு ஹான்ஸ் கிறிஸ்டியன் கிராம் என்பவர் இதனைக் கண்டுபிடித்ததால் கிராம் பாசிட்டிவ், கிராம் நெகடிவ் என்று அழைக்கப்படுகிறது. அதன் செல்சுவர் அமைப்பாக்கக் கூறுகளை வைத்து இது பிரிக்கப்படுகிறது.



கிராம் பாசிட்டிவ் செல்சுவர் ஊதா நிறமுடையது. கிராம் நெகடிவ் செல்சுவர் அதன் ஊதா நிறத்தைத் தக்கவைக்க முடியாதது. பாக்டீரியாக்கள் நடத்தை என்னவென்று பார்த்தால் அது தனது சூழலுக்குள் ரசாயனங்களைச் சுரக்கும் ஏனெனில் அப்போதுதான் சூழலை தனக்கு நன்மை பயக்கும் விதமாக அது மாற்ற முடியும். இந்த சுரப்பிகள் பெரும்பாலும் புரோட்டீன்களையே சுரக்கும். அது என்சைம்களாக செயல்பட்டு அதன் சுற்றுச்சூழலில் உள்ள உணவை உண்டு சீரணிக்கும்.



மனிதர்களிடத்தில் முக்கால்வாசி நோய்க்கூறுகளூக்கு கிராம் பாசிடிவ் பாக்டீரியாக்களே காரணம். இதில் நாம் சற்று முன் குறிப்பிட்ட கோள வடிவ கோக்கை பாக்டீர்யாக்களான ஸ்ட்ரெப்டோ கோக்கஸ், ஸ்டெஃபைலோ கோக்கஸ் ஆகியவையும் மீது 4 வகை நாம் பேசில்லி என்று குறிப்பிட்ட கழி வடிவ பாக்டீரியாக்களும் அடங்கும்.



இதில் கிராம் பாசிட்டிவ் நோய்களுக்கு ஏகப்பட்ட ஆன்ட்டி பயாடிக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கிராம் நெகடிவ் நோய்கள் அனைத்திற்கும் இன்னும் மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. கிராம் பாசிடிவில் கோக்கஸ், பேசில்லி இருப்பது போல் இதில் ஈ-கோலை, சால்மனொல்லா, ஷிகெல்லா உள்ளிட்ட பல வகைகள் உள்ளன.



இதில் மருத்துவம் தொடர்பான பேசில்லியில் குறிப்பிடவேண்டுமென்றால் கிளெப்சியல்லா நிமோனியா, ஹீமோபீலஸ் இன்ஃபுளெயென்சா, ஆகியவை மூச்சுக்குழல் தொடர்பான பிரச்சனைகளை தோற்றுவிப்பது.



மற்றொன்று சிறுநீர்க்குழாய்ப்பாதை தொடர்பான நோய்களை உருவாக்கும் ஈ-கோலை (E-coli) ஆகும்.



இப்போது நம் பிரச்சனைக்கு வருவோம் என்.டி.எம்.-1 என்ற என்சைமைச் சுமந்து செல்லும் தற்போதைய கண்டுபிடிப்பான ‘சூப்பர் பக்’ பாக்டீரியா ஒரு கிராம் நெகடிவ் பாக்டீரியா.



மனித உடலின் உணவுச் செரிமானக் குழாயின் அடிப்பகுதியில் காணப்படும் ஈ-கோலை மற்றும் கிளெப்சியல்லா நிமோனியா ஆகிய பாக்டீரியாக்கள் தற்போது சில நபர்களை ஆய்வு செய்த போது என்.டி.எம்.-1 என்ற ஆபத்தான என்சைமை சுமந்து கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதான் மையமான பிரச்சனை!



இதனால் சிறுநீர்ப்பாதை உபாதைகளும், ரத்தம் நச்சுமயமாவதும் நிகழும் என்பது மருத்துவர்கள் கூறும் தகவல். வழக்கமாக இதற்கு கொடுக்கப்படும் எந்த ஆன்ட்டி-பயாடிக்குகளும் இதற்கு ஒத்து வராது, ஏனெனில் இந்த என்சைம் அவற்றின் தடுப்புச் செயல்பாட்டினை முறியடித்துவிடும். இதுதான் மருத்துவர்களின் தற்போதைய கவலை அல்லது கிளப்பும் பீதிக்கான அடிப்படை.



இங்குதான் நாம் சில கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்பவேண்டியுள்ளது.



துணைக்கண்டங்களில்தான் அதிகம் ஆன்ட்டி-பயாடிக்குகள் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. அதனால் இங்குதான் இந்த என்சைம் உருவாகியுள்ளது என்பதற்கான கறாரான சுற்றுச்சூழல், மருத்துவ, உடல்ரீதியான காரணங்கள் சந்தேகமற நிரூபிக்கப்பட்டுள்ளதா?



அப்படியே ஆன்ட்டி-பயாடிக்குகளை நாம்தான் அதிகம் பயன்படுத்துகிறோம் என்றால் அது என்ன துணைக்கண்டங்களின் கண்டுபிடிப்பா? அனைத்து ஆன் ட்டி பயாடிக்குகளும் நமக்கு மேற்கு நாடுகளிலிருந்து வந்ததுதான். மேற்கில்தான் அது கண்டுபிடிக்கப்பட்டது எனும்போது அங்குதான் எதிர்ப்புச் சக்தி நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்றாகிறது. அப்படியென்றால் ஏற்கனவே எதிர்ப்புச் சக்தி நெருக்கடி கண்ட அந்த உடல்களின் உள்ளேயே இந்த புதிய சூப்பர் பக் உருவாவதற்கான சந்தர்ப்பங்களை நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளாமல் இருக்க முடியுமா?
123» பொதுவாகவே இப்போதெல்லாம் ஆன்ட்டி பயாடிக் விளைவுகளைத் தடுக்கும் நோய்க்கூறுகள் அதிகம் தோன்றுவதாக ஆய்வுகள் வெளிவந்து கொண்டிருக்கையில் அதற்கான பொதுப்படையான காரணங்களே இந்த புதிய சூப்பர் பக் உருவாவதற்கும் காரணமாக இருக்கலாம் அல்லவா?




மெதிசில்லின் தடுப்பு ஸ்டெபைலோகோக்கஸ் (Methicillin-resistant Staphylococcus aureus - MRSA) அழைக்கப்படும் என்ற நுண்ணுயிரி உருவாக்கும் நோய்கள் மீது இதுநாள் வரைக்கும் பெரிய அளவில் பணம் செலவழிக்கப்பட்டு ஆய்வுகள் நடத்தி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்ட அளவுக்கு ஆண்ட்டி பயாடிக் தடுப்பு கிராம் நெகடிவ் பாக்டீரியாக்களை முறியடிக்க ஏன் அதிக அளவு கவனம் செலுத்தப்படவில்லை?



ஈ-கோலை அல்லது கிளப்சியெல்லா நிமோனியா மற்றும் பிற என்டெரோ பாக்டீரியாக்களின் பொதுவான மருந்து தடுப்பு உத்தி என்னவெனில் பீட்டா லேக்டோமேஸ் என்ற ஒரு என்சைமை அது உற்பத்தி செய்வதால்தான். இது அந்தந்த என்சைம்களைப் பொறுத்து பீட்டா லேக்டம் ஆன்ட்டி பயாடிக்குகளின் செயலை இழக்கச்செய்கிறது. இந்த என்சைம்கள் பலவகையானது. இதுவரை 532 இந்த வகை என்சைம்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை பொதுவாக செபலோஸ்போரின்ஸ், பென்சிலின் வகை ஆண்ட்டிபயாடிக்குகளை திறமையாக தடுத்து விடுகிறது.



தற்போது பிரச்சனையில் உள்ள ஆபத்தான என்சைம் புவியியல் சூழல் (குறிப்பாக நகரப்பகுதிகளில் இருப்பவர்கள்), மருத்துவமனை, நோயாளியின் வயது ஆகிய காரணிகளால் மாறுபடுகிறது.



இதில் துணைக்கண்ட பகுதிகளில் உருவாகும் இவ்வகை என்சைம்கள் அனைத்தையும் ஆய்வு செய்யப்பட்டு விட்டதா? அப்படியிருக்கையில் துணைக்கண்ட உடல்களிலிருந்துதான் இது உருவானது என்று எவ்வாறு கூற முடியும்?



இது பற்றி 1997-2002ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட நோய் எதிர்ப்பு மருந்துகளை தடுக்கும் சக்திகள் பற்றிய ஆய்வில் குறிப்பாக ரத்த ஒட்டம் தொடர்பான நோய்க்கிருமித் தாக்குதலுக்குக் காரணமான கிளப்சியெல்லா நிமோனியா சுமந்துள்ள என்சைமின் அளவு லத்தீன் அமெரிக்க நோயாளிகளிடம் 43.7% இருப்பதும் ஐரோப்பிய நோயாளிகளிடம் 21.7 சதவீதம் இருப்பதும், வட அமெரிக்காவில் 5.8% இருப்பதும் தெரிய வந்துள்ளது. (இந்தத் தகவலை தாமஸ் ஜி.ஸ்லாமா என்பவர் எழுதிய கிரிட்டிக்கல் கேர் கட்டுரை Gram-negative anti-biotic resistance: there is a price to pay என்பதில் காணலாம்)



மேலும் இதற்கு ஆண்ட்டி-பயாடிக் சிகிச்சை இல்லை என்றே கூற முடியாது. மேற்கூறிய கட்டுரையாளர் இது பற்றி அதே கட்டுரையில் குறிப்பிடுகையில் இவ்வகை பாக்டீரியாக்கள் உருவாக்கும் நோய்க் கிருமிகளுக்கு தகுந்த ஆண்ட்டி பயாட்டிக்குகளைக் கண்டு பிடித்து கொடுப்பதில் தாமதம் ஏற்படுவது தவிர்க்கவியலாது. இதனால் மருத்துவமனைச் செலவு அதிகரிக்கும் என்பது உண்மை. ஆனால் துவக்கத்திலேயே சரியான ஆண்ட்டி பயாடிக்குகளை கொடுக்க முடியாமல் போவதுதான் இதனால் ஏற்படும் மரணங்களுக்குக் காரணமாகிறது என்கிறார்.



இது பற்றிய ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதும், இன்னும் ஆய்வுகள் தேவை எனும்போதும் இது இந்தியாவில் உருவாகிறது, பாகிஸ்தானில் உருவாகிறது என்றேல்லாம் கூறுவதன் நோக்கத்தில் உள்நோக்கமும் லாப நோக்கமும் (மருத்துவ வருவாய் இழப்பு) இருக்கலாம் என்று தோன்றுகிறது.



பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து கொள்ள அயல்நாட்டிலிருந்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் நிறைய பேர் வருவது அதிகரித்துள்ளது. காரணம் அங்கு இதற்கு ஆகும் செலவை விட இங்கு பன்மடங்கு குறைவு என்பதே. எனவே அவர்களை இது போன்று பயமுறுத்தி வரவிடாமல் செய்தால் அவர்கள் அங்கேயே (ஐரோப்பாவிலேயே) இந்த சிகிச்சைகளை செய்து கொள்ள முடிவெடுக்கலாம். இது போன்ற நோக்கங்களையும் நாம் கண்டு கொள்ளாமல் விட்டு விட முடியாது.



இன்று இந்த விவகாரம் மாநிலங்களவையில் விவாதத்திற்கு வந்தபோது உறுப்பினர்கள் பலர் இதன் பின்னணியில் பன்னாட்டு மருந்து நிறுவனங்களும், பன்னாட்டு மருத்துவமனை நிறுவனங்களும் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.



அதாவது இந்தியா ஒரு மருத்துவச் சுற்றுலாவிற்கான இடமாக மாறிவரும்போது இது போன்ற செய்திகள் பன்னாட்டு மருத்துவ நிறுவனங்களின் கெட்ட நோக்குடைய பிரச்சாரமாக இருக்கலாம் என்று பாஜக உறுப்பினர் அலுவாலியா தெரிவித்துள்ளார்.



ஆனால் நாம் பொறுப்புள்ள நபர்களாக ஒரு புறம் ஐரோப்பிய பிரச்சார எந்திரத்தின் நிலைப்படுத்தல்களையும், அதனை எதிர்க்கும் இந்திய ஊடக பிரச்சார எந்திர எதிர் நிலைப்படுத்தல்களையும் நம்புவதை ஒத்தி வைத்து சற்றே தள்ளியிருந்து இந்த விவகாரம் என்ன ஆகிறது என்பதை கவனிக்கவேண்டும்.



ஐரோப்பியச் செய்திகளின் பின்னணிகளை அலசக் கற்றுக் கொள்ளவேண்டும். அது அவசியத்திலெல்லாம் அத்யாவசியம்.

சுதந்திர தின சபதங்கள்

அண்ணல் காந்தி அகிம்சா வழியில் பெற்ற சுதந்திரம்


ஆயிரமாயிரம் தியாகிகள் நாட்டுக்கு அர்ப்பணித்த சுதந்திரம்

அரசியல், ஆன்மிகம், விவசாயம், வியாபாரம், விஞ்ஞானம்

அனைத்தும் வளர வித்திட்ட சுதந்திரம்

===

கிடைத்த சதந்திரத்தைக் காப்பாற்றிட

இப்பொன்னாளில் ஏற்போம் சில சபதங்கள்...

===

1. தீவிரவாதத்தைத் தீர்த்துக் கட்டுவோம்

2. தீண்டாமையை தீயிலிடுவோம்

3. குற்றங்களைக் குழி தோண்டி புதைத்திடுவோம்

4. லஞ்சத்தை ஒழித்திடுவோம்

5. வதந்திகளைப் புறந்தள்ளுவோம்

6. சேவைகள் பல செய்திடுவோம்

7. சிந்தித்து செயல்படுவோம்

8. ஏழைகளுக்கு உதவிடுவோம்

9. ஆன்மிகத்தில் நாட்டம் கொள்வோம்

10. மன அழுத்தத்திற்கு விடுதலை கொடுப்போம்

===

வாழ்க சுதந்திரம்...! வளர்க இந்தியா...!





தேசப்பற்றில் 4வது இடம்

தேசத்தின் மீது தனக்கு பற்று இல்லை என்று எந்த நாட்டினரும் எப்போதும் கூற மாட்டார்கள். பலர் தேசப்பற்றை தங்கள் மனதுக்குள் வைத்திருப்பார்கள். சிலர் வெளிப்படையாகக் காட்டுவார்கள். கிரிக்கெட் அணியை தேசத்தின் அடையாளமாகவும், பதக்கம் வெல்லும் மற்றும் சாதனை நிகழ்த்தும் வீரர்களை தேசத்தின் பிள்ளைகளாகப் பார்க்கிறோம். கலைத் துறையினர், விஞ்ஞானிகள் மற்றும் சாதனையாளர்களை "இந்தியர்கள்' என்று கூறி பெருமைப்படுகிறோம். முகத்தில் தேசக்கொடியை வரைந்து கொள்கிறோம். தேசிய தினங்களில் இந்தியாவை நினைத்துப் பார்க்கிறோம். கடந்த 1995-97ம் ஆண்டில் நடந்த ஒரு கருத்துக் கணிப்பில் அமெரிக்கர்கள்தான் உலகிலேயே அதிகமாக தங்கள் தேசத்தின் மீது பாச மழை பொழிகிறார்கள் என்று தெரியவந்தது. இந்த பட்டியலில் வெனிசுலா, தென் ஆப்ரிக்காவுக்குப் பின் 4வது இடம் இந்தியாவுக்கு கிடைத்தது. ஆஸி., ஜப்பான், ரஷ்யா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் இந்தியாவுக்கு பின்னால் இருந்தன. இதுவே நமக்குப் பெருமை என்றாலும் நாம் முதலிடத்துக்கு வர - இன்னும் காட்ட வேண்டிய அன்பு எவ்வளவு இருக்கிறது என்று பாருங்கள்.






பச்சைத் தமிழரான "ஆங்கிலேயர்'

சுதந்திரத்துக்கு முன்னும் பின்னும் இந்தியா மீது அன்பு வைத்திருந்த ஆங்கிலேயர்களை அறிந்திருக்கிறோம். சுதந்திரத்துக்குப் பிந்தைய காலத்தில் தன்னை தமிழர் என்று அழைத்துக் கொள்வதில் பெருமை அடைந்தஆங்கிலேயரில் முக்கியமானவர் ஆடம் ஆஸ்பர்ன்.








தாய்லாந்தில் ஆங்கிலேய தந்தைக்கும் போலந்து தாய்க்கும், 1939ல் மகனாகப் பிறந்தார். பிறந்ததுதான் அங்கே. வளர்ந்தது எல்லாம் திருவண்ணாமலையில்தான். இவரது பெற்றோர் ரமண மகரிஷியின் சீடர்கள். ஆகவே ஆஸ்பர்ன் தமிழ் மண்ணிலேயே ரமணரின் ஆஸ்ரமத்தில் வளர்ந்தார். கணினி அறிவியல் துறையில் ஆஸ்பர்ன் பெரிய விஞ்ஞானி. இவர் கண்டறிந்த பஸ் எஸ்-100 - முதல் மைக்ரோ கம்ப்யூட்டருக்கு அடிகோலியது. 1981ல் இவர்தான் ஆஸ்பர்ன் 1 எனும் முதல் கையடக்க கம்ப்யூட்டரை வர்த்தக ரீதியில் வெளியிட்டார். ஐ.பி.எம்., கம்பெனி துவக்குவதற்கு முன்னரே, தனது நிறுவனத்தை துவக்கிவிட்டார். அமெரிக்காவில் வாழும் வெள்ளைக்காரத் தமிழன் என்று பெருமையுடன் கூறிய அவர் தனது சுயசரிதையில் இந்திய தேசப் பற்றை வெளிக் காட்டியுள்ளார்.







அவர் தெரிவித்திருப்பது: தமிழ் மண்ணிலிருந்து ஐரோப்பியர்கள் கற்றுக் கொள்ள வேண்டியது ஏராளமாக இருக்கின்றன. இந்தியர்கள் தங்களுடைய தேசியம் மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றால் பெருமை அடைந்திருக்கின்றனர். ஆனால் அமெரிக்காவில் வாழும் இந்தியர்களோ தாங்கள் இந்தியர்கள் என்றபெருமையை மறந்தவர்களாக இருக்கிறார்கள். அமெரிக்காவின் சிலிக்கான் பள்ளத்தாக்கில் இந்தியர்கள் எங்கும் காணப்படுகிறார்கள். விஞ்ஞானிகளாக, டாக்டர்களாக, இன்ஜினியர்களாக, வழக்கறிஞர்களாக இருக்கிறார்கள். தங்களுடைய ஜாதி, இனம் மற்றும் மதம் ஆகியவற்றில் அவர்களுக்கு உள்ள பற்று தேசியம் என்பதில் இல்லாமல் இருக்கிறது. எப்போது இந்தியா தனது பெருமையை உணரத் தொடங்குகிறதோ அப்போதுதான் உலகின் சூப்பர் பவராக அது மாறும். பலர் என்னுடைய இந்த எண்ணத்தை சரியென சொல்லியிருக்கிறார்கள்.நான் இந்தியா திரும்புவேன். அப்போது இந்தியர்களுக்கு இந்தியர்களின் பெருமை பற்றி நிச்சயம் கற்றுத் தருவேன்.







இந்தியர்கள் இந்துவாகவோ, இஸ்லாமியர்களாகவோ அல்லது பார்சிகளாகவோ இருப்பதில் பெருமை இல்லை. தமிழர்களாகவோ, தெலுங்கர்களாகவோ, பஞ்சாபியர்களாகவோ இருப்பதிலும் பெருமை இல்லை. பிராமணர்களாகவோ அல்லது வேறு ஜாதியினராகவோ இருப்பதிலும் பெருமை இல்லை. இந்தியர்களாக இருப்பதில்தான் பெருமை என்பதை நான் கூறுவேன். சிங்கப்பூர் மக்கள் தங்கள் தேசத்தின் மீது வைத்திருக்கும் பற்றினைப் போல் இந்தியர்களும் வைத்திருக்க வேண்டும். இந்தியர்கள் இந்திய தயாரிப்புகளை வாங்க வேண்டும். - லஞ்சம் ஊழல் குடும்பத்தின் பெருமையை கெடுக்கும் என்பதையும் புரிந்து வைத்திருக்க வேண்டும். இவ்வாறு அவர் எழுதியுள்ளார்.







ஆஸ்பர்னின் கம்ப்யூட்டர் நிறுவனம், ஐ.பி.எம்., போன்ற பெரிய நிறுவனங்களின் வருகையால் நிதி நெருக்கடிக்கு உள்ளானது. ஆஸ்பர்ன் தான் கூறிய படியே, இந்தியா திரும்பினார். உடல் நலக்குறைவுடன் இருந்த அவர், 2003ல் கொடைக்கானலில் மரணமடைந்தார். இந்திய தேசியத்தின் மீது வைத்திருந்த அவருடைய பற்று - இன்றைய நவீன இளைஞர்களுக்கு ஒரு சிறந்த முன்மாதிரி.

ரூ. ஒரு கோடிக்கு ஏலம் போன மாலை

சுபாஸ் சந்திர போஸ், சுதந்திரப் போராட்ட காலத்தில் பிரிட்டிஷாருக்கு எரிமலையாக விளங்கியவர். உடனடியாக சுதந்திரம் பெற வேண்டும் என்ற அவரது, வேட்கை சுதந்திர தாகம் உள்ள அனைவரையும் கவர்ந்தது. பிரிட்டிஷாருக்கு எதிராக இந்திய தேசிய ராணுவத்தை அமைப்பதற்கு முன் அவர் சிங்கப்பூர் சென்றிருந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது. அவருக்கு அணிவிக்கப்பட்ட மாலைகள் ஒரு லாரி நிறைய குவிந்துவிட்டன. சிங்கப்பூர் மக்களுக்கு நன்றி தெரிவித்த அவர், தன்னுடைய கழுத்தில் அணிவித்த மாலையை ஏலம் விடப்போவதாக அறிவித்தார். அந்த பணம், ஐ.என்.ஏ., அமைக்க உதவும் என்றும் கூறினார். மாலையின் ஆரம்ப ஏல விலை ரூ.25 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் எதிர்பாராத விதமாக அது ரூ.ஒரு கோடியே 3 ஆயிரத்துக்கு ஏலம் போனது. ஹபிபுர் ரஹ்மான் எனும் இஸ்லாமிய தொழிலதிபர் இந்த ஏலத்தை எடுத்தார். பெண்கள் தங்கள் கழுத்து, கைகளில் இருந்த நகைகளை கழற்றி போசிடம் கொடுத்தனர். அன்று ரூ.25 கோடி நிதி வசூலானது. இதற்கிடையில் சேகர் என்பவர், தான் வாழ்நாள் முழுவதும் கஷ்டப்பட்டு சம்பாதித்த ரூ.7 லட்சத்தை நீட்டி, தனக்கு மாலை வழங்கும் படி போசிடம் கேட்டுக் கொண்டார். "என்னுடைய இந்த பணத்தை அளித்து, இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொள்ள விரும்புகிறேன்' என்று அந்த தியாகி கூறினார். அவருடைய பணத்தை பெருமிதத்துடன் பெற்றுக் கொண்ட போஸ், அவருக்கும் ஒரு மாலையை பரிசாகக் கொடுத்தார். ஆசிய நாடுகளின் வெவ்வேறு பகுதிகளுக்கு அவர் சென்றார். அப்போது அவருக்கு பூக்குடுவை பரிசளிக்கப்பட்டது. அதை ரூ.25 ஆயிரத்துக்கு ஏலம் விடப்போவதாக அறிவித்தார். ஆனால் அது ரூ.51 ஆயிரத்துக்கு விலை போனது. சுபாஷ் சந்திர போசின் இந்த முயற்சியால்தான், அவரது ராணுவம் அமைக்கப்பட்டது. பிரிட்டிஷாருக்கு அச்சமூட்ட முடிந்தது.

சுதந்திரத்தின் சுவாசம்

நாம் நமக்குக் கிடைத்த சுதந்திரத்தை சரியாகப் பயன்படுத்துகிறோமா... இல்லையா... என்பதை காலம் காலமாக பட்டிமன்றம் நடத்தி வருகிறோம். ஆனால் பொது இடங்களில் நாம் நடந்து கொள்ளும் முறைகளோ மாறியிருப்பதாகத் தெரியவில்லை. பலர் சுதந்திரம் என்பதை - எல்லாம் தனக்கு வழங்கப்பட்டு விட்டதாகக் கருதுகிறார்கள்.








பொது இடங்களில் எச்சில் துப்புபவர்கள், வாகன நெரிசலின் போது, போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள், அனுமதி இல்லாமல் போஸ்டர் ஒட்டுபவர்கள், கழிவுநீரை பொது இடங்களில் விடுபவர்கள், லஞ்சம் வாங்குபவர்கள், வேலை நேரத்தில் தங்கள் கடமையை செய்யாதவர்கள் என்று, "சுதந்திரத்தைக் கையில்' எடுத்துக் கொண்டவர்கள் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. நாடு வல்லரசாக வேண்டும், பொது இடங்கள் "அமெரிக்கா' போன்று இருக்க வேண்டும் என்று விரும்புபவர்கள், தங்களுடைய கடமையை முழுமையாக நிறைவேற்றுகிறோமா என்று ஒரு நிமிடம் யோசிக்கலாம்.







சாலைகளில்...: பலர் சரியான தடத்தில்தான் செல்கிறோமா என்பதைக்கூட கவனிப்பதில்லை. உரிய இடத்தில் "யூ டர்ன்' செய்ய பலருக்கு சோம்பேறித்தனம். குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட வேகத்தில் செல்வதில்லை. சிவப்பு எரியும் போது நிற்பதில்லை. மஞ்சள் விளக்கு எரியும் போதே சென்று விடுவது. பலர் இண்டிகேட்டரை பயன்படுத்துவதே இல்லை. ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட்கள் பயன்படுத்துபவர்களையே "குற்றவாளிகள்' போல் பார்ப்பது. இரவில் முறையாக ஹெட்லைட் பயன்படுத்தாமல் செல்வது, குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டுவது என்று சாலைப் பயணத்தை மனவேதனைப்படுத்தும் விஷயங்களாக மாற்றியிருக்கிறோம். அதிலிருந்து மாற வேண்டும். சாலையில் நடந்து செல்லும் போது கூட, மொபைல் பேசக்கூடாது. அது பெரிய ஆபத்தில் முடியும். அதேபோல் சாலை ஓரங்களில் சிறுநீர் கழித்தல், அசுத்தம் செய்வது அப்பகுதியை நோய்க்கிருமிகளின் கிடங்காக மாற்றுவதோடு, அதன் வழியே சென்றுவரும் பயணிகளுக்கு "இலவசமாக' அந்த இடம் நோய்களை வழங்கத் தொடங்கிவிடும்.







நடத்தைகளில்...: காரணமே இல்லாமல் கோபப்படுவோரை பார்த்திருக்கிறோம். சில்லரை கேட்கும் பயணியிடம் பஸ் கண்டக்டர் எரிந்து விழு தல், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடம் தவறாக நடத்தல், தகவல் கேட்கும் பொதுமக்களிடம் அதிகாரிகள் கோபம் காட்டுவது, நியாயமான தொகையை சொல்லும் பயணியிடம் ஆட்டோக்காரர்கள் காட்டும் கோபம் என்று எதற்கு கோபப்படுவோரை நாம் சாதாரணமாக பார்க்கலாம். மற்றவர்களுடன் எதற்கெடுத்தாலும் வில்லங்கம் பேசும் பண்பு, சண்டைக்குப் போகும் குணம் மாற வேண்டும். இன்றும் பலர் ஜாதி, மத வேறுபாடுகளை மனதுக்குள் சுமந்து கொண்டிருக்கிறார்கள். சமுதாயம் என்பது ஒருவருக்கு ஒருவர் சார்ந்து இருப்பது. மற்றவர்கள் மீது நம்பிக்கை இல்லாத நிலை இப்போது உருவாகி வருகிறது என்றே கூற முடியும்.







பஸ், ரயில், விமானப் பயணங்கள் சில நேரங்களில் நம்பும்படியாக இல்லை. நாம் நமது நாட்டின் தலைசிறந்த தலைவர்கள் மற்றும் அவர்கள் நடந்த வழி ஆகியவற்றை பின்பற்றி நமது நல் ஒழுக்கங்களை அமைத்துக் கொள்ள வேண்டும். இந்தியாவில் உள்ள இன்னொரு பிரச்னை, வரிசையை தவிர்ப்பது. மேலைநாடுகளில் பொதுவாக, நான்கு பேர் கூடினால் கூட, அவர்களாக வரிசை அமைத்துக் கொள்வார்கள். ஆனால் இங்கு கோயில் திருவிழா அல்லது பஸ் ஸ்டாண்டில் உள்ள கூட்டத்தினருக்கு வரிசை அமைக்க போலீசார்வரவேண்டியிருக்கிறது. மக்கள் தொகை அதிகமுள்ள நம் நாட்டில், வரிசை என்பது மிக முக்கியம். இல்லாவிட்டால், முதலில் வந்தவர் கடைசியில் கூட அவருக்குரியதை பெற முடியாமல் போய்விடும். வரிசையில் செல்வோருக்கு இடையில் புகுந்துவிடுவது. வரிசையில் தெரிந்தவர் இருந்தால் அவர் தலையில் தனது சுமையைக் கட்டுவது.







மதித்து நடத்தல்...: வயதானோர், பெண்கள், குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளை மதித்து நடக்க வேண்டும். அவர்களுக்கு உரிய இருக்கை மற்றும் வரிசையில் இடம் ஆகியவற்றை அளிக்க வேண்டும்.







வர்த்தகத்தில்...: சரியான பொருளுக்கு உரிய விலை நிர்ணயித்துள்ளோமா?. பொருள் தரமானதுதானா? உபயோகிப்பாளரிடம் உரிய முறையில் நடந்து கொள்கிறோமா? விற்பனையாகும் பொருள் சுற்றுச்சூழலுக்கு ஏற்றதுதானா? என்பதை யோசித்துக் கொள்ள வேண்டும். இந்த நாட்டின் சுதந்திரம் நமக்கு மட்டுமல்ல... எல்லோருக்கும்தான் என்ற உணர்வு ஏற்பட்டால்தான் உண்மையான சுதந்திரத்தின் சுவாசத்தை எல்லோரும் அனுபவிக்கமுடியும்.

மன அமைதியில்லா மனிதர்கள் கலியுகத்தில் கலியாகும் டி.வி

களியக்காவிளை: கலியுகத்தில் கலியாக வீடுகளில் டி.வி., விளங்குகிறது என செங்கல் சிவசக்தி கோயில் மடாதிபதி கிருஷ்ணன்குட்டி சுவாமிகள் பேசினார்.அகில இந்திய ஸ்ரீமத் ராமாயண ஸத்திர ஸமிதியின் சார்பில் ராமாயண விளக்கவுரை மாநாடு வரும் டிசம்பர் 19ம் தேதி முதல் 26ம் தேதி வரை வெட்டுவெந்நி கண்டன்சாஸ்தா கோயிலில் நடக்கிறது. இந்த மாநாட்டில் திருவனந்தபுரம், குமரி மாவட்டங்களில் அமைந்துள்ள கோயில் நிர்வாகிகள், வித்வான்கள், ஆன்மிக பெரியோர்கள், சன்யாசிகள், யோகிகள் கலந்து கொள்கின்றனர். மாநாட்டை முன்னிட்டு திருவனந்தபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களில் அமைந்துள்ள அனைத்து கோயில்களிலும் ராமாயண பாராயணம் இரண்டு மணி நேரம் நடத்தப்பட்டு வருகிறது. இதன் துவக்க விழா மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் வளாகத்தில் நடந்தது. வெள்ளிமலை விவேகானந்தா ஆசிரம மடாதிபதி சுவாமி சைதன்யானந்தஜி மகராஜ் துவக்கி வைத்தார். திருவனந்தபுரம் மாவட்டத்தில் ராமாயண பாராயண துவக்க விழா ஆற்றுகால் பகவதி அம்மன் கோயிலில் நடந்தது. மாநில ஐ.ஜி., சாந்தாராம் துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து இரண்டு மாவட்டங்களிலும் மாதந்தோறும் ராமாயண பாராயணம் நடக்கிறது.கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயில் வளாகத்தில் நடந்த ராமாயண பாராயண துவக்க விழாவில் அகில இந்திய ஸ்ரீமத் ராமாயண பாராயண ஸத்திர ஸமிதி சேர்மன் டாக்டர் பத்மனாபன் தலைமை வகித்தார். செங்கல் சிவசக்தி கோயில் மடாதிபதி கிருஷ்ணன்குட்டி சுவாமிகள் குத்துவிளக்கு ஏற்றி வைத்து பேசியதாவது: கலியுகத்தில் கலியாக ஒவ்வொரு வீடுகளிலும் டி.வி., விளங்குகிறது. பண்டைய காலங்களில் ஒவ்வொரு குடும்பங்களிலும் தாய்மார்கள் மாலை நேரத்தில் பூஜை அறையில் குத்துவிளக்கு ஏற்றி ராம நாமம் சொல்வர். அப்போது மனிதர்களுக்கு மன அமைதி ஏற்பட்டது.எங்கும் அமைதி நிலவியது. மனிதர்கள் மன நிம்மதியுடன் வாழ்ந்தனர். இன்றைய கால கட்டத்தில் அறிவியல் வளர்ச்சியின் காரணமாக பல கண்டுபிடிப்புகள் நிகழ்ந்துள்ளன. இதன்படி மனிதர்கள் கண்டுபிடித்த டி.வி., கள் ஒவ்வொரு வீடுகளிலும் உள்ளன. இன்றைய தாய்மார்கள் தங்களது வீடுகளில் குழந்தைகளுடன் உட்கார்ந்து மாலை நேரத்தில் டி.வி., பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ராம நாமம் வீடுகளில் ஜெபிப்பதில்லை. இதனால் மனிதர்கள் மன அமைதியின்றி அலைகின்றனர். மன அமைதியின்றி தவிப்பதற்கு காரணமாக டி.வி., விளங்குகிறது. இதனைப் போக்கி மன நிம்மதி அடைய மனிதர்கள் ராம நாமம் ஜெபிக்க வேண்டும். இதற்கு ஸ்ரீமத் ராமாயண ஸத்திர ஸமிதி உள்ளிட்ட அனைத்து அமைப்புகளும் ராமாயணம், மகாபாரதம் உள்ளிட்ட அனைத்து சுலோகங்களையும் மனிதர்களுக்கு போதித்து, வரும் தலைமுறைகளையாவது காப்பாற்ற இறைவன் அருள் புரியட்டும். இவ்வாறு கிருஷ்ணன்குட்டி சுவாமிகள் பேசினார்.தொடர்ந்து கவிஞர் மதுசூதனன், வக்கீல் மோகன்குமார், கிருஷ்ணம்மா ஆகியோர் பேசினர். கூட்டத்தில் ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் ராமசந்திரன் நாயர், நல்லூர் வெட்டுவெந்நி ஸ்ரீகண்டன் சாஸ்தா கோயில் செயலாளர் புரு÷ஷாத்தமன் நாயர், ஸ்ரீகுமரன் நாயர், பரமேஸ்வரன் நாயர் மற்றும் கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயில் நிர்வாகிகள், பக்தர்கள் கலந்து கொண்டனர். அகில இந்திய ஸ்ரீமத் ராமாயண ஸத்திர ஸமிதி செயலாளர் நாராயணன் நாயர் நன்றி கூறினார்

நாட்டுக்கு அவசியம்

டாஸ்மாக்' ஊழியர்களுக்கு சம்பள உயர்வு, ஊக்கத்தொகை உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை தமிழக அரசு திடீரென அறிவித்து உள்ளது. ஊழியர்கள் கடந்த 11ம் தேதி, "ஸ்டிரைக்' நடத்திய நிலையில், திடீர் சலுகை அறிவிப்புகளை அரசு வெளியிட்டுள்ளதோடு, ஊழியர்களின் கோரிக்கைக்கு படிந்துள்ளது.








பணி நிரந்தரம் செய்தல், வார விடுமுறை என்பது போன்ற கோரிக்கைகளை, "டாஸ்மாக்' ஊழியர்கள் வலியுறுத்தி வந்தனர். அரசு கண்டு கொள்ளாததால், தனித்தனியாக போராடி வந்த அண்ணா தொழிற் சங்கபேரவை,ஏ.ஐ.டி. யூ.சி., - சி.ஐ.டி.யூ., - பாட்டாளி தொழிற் சங்கங்கள்ஒன்றாக இணைந்து,கூட்டு நடவடிக்கைகுழுவை துவக்கின. கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 11ம் தேதி ஒரு நாள், "ஸ்டிரைக்' நடத்தின. தமிழக அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகள் மூலம், "ஸ்டிரைக்' முறியடிக்கப் பட்டது. 90 சதவீதத்திற்கும் மேலான கடைகள் வழக்கம்போல் இயங்கின. போராட்டத்தை வெற்றி கரமாக முறியடித்த தமிழக அரசு, தற்போது, "டாஸ்மாக்' ஊழியர் களுக்கு சம்பள உயர்வு உள்ளிட்டபல்வேறு சலுகைகளை அறிவித்துள் ளது.







முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிவிப்புகள்: மேற்பார்வையாளர்கள் மாத தொகுப்பூதியம் 4,000த்திலிருந்து 4,500 ரூபாயாகவும், விற்பனையாளர்கள் தொகுப்பூதியம் 2,800லிருந்து, 3,200 ரூபாயாகவும், மதுக்கூட உதவியாளர் தொகுப்பூதியம் 2,100லிருந்து, 2,400 ரூபாயாகவும் உயர்த்தப் பட்டுள்ளது. இதன் மூலம் 30 ஆயிரம் பணியாளர்கள் பயன் பெறுவர். "டாஸ்மாக்' பணியாளர் களின், "டிபாசிட்'டுக்கான வட்டி 3.5 சதவீதத்திலிருந்து, 6 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும். இதனால்,ஆண்டு ஒன்றுக்கு மேற்பார்வையாளர்களுக்கு 1,250, விற்பனையாளர்களுக்கு 375 ரூபாய், உதவியாளர்களுக்கு 250 ரூபாய் கூடுதலாக கிடைக்கும்."டாஸ்மாக்' பணியாளர் களுக்குவழங்கப்படும் ஊக்கத்தொகை 1.5 சதவீதத்திலிருந்து, 1.75 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும்.







மதுபானவிற்ப னைக்குபின், கடைகளில் தேங்கும் காலி அட்டைப் பெட்டிகள், பணியாளர் களால் ஒப்பந்ததாரர்களுக்கு விற்கப்படுகின்றன. இந்த அட்டைப் பெட்டிகளில் ஏற்படும் சேதம் 2.5 சதவீதமென கணக்கிடப் பட்டுள்ளது.அது, தற்போதுபணியாளர்களின் ஊதியத்திலிருந்து பிடிக்கப் படுகிறது. இனி அட்டைப் பெட்டிகள் சேதத்தினால் ஏற்படும் இழப்பை, நிர்வாகமே ஏற்றுக் கொள்ளும். இந்த சலுகைகள் அனைத்தும் வரும் செப்.,1முதல்நடைமுறைக்கு வரும். அரசின் தூய நோக்கத்தின் மீது நம்பிக்கை வைத்து, தொடர்ந்து பணியாற்றி வரும், "டாஸ்மாக்' ஊழியர்களுக்கு, அரசு உரிய நேரத்தில் சலுகைகளையும், உரிமைகளை அளிக்கும் என்பதற்கு, இது எடுத்துக்காட்டு. இவ்வாறு தமிழக அரசு அறிவித்துள்ளது.







"டாஸ்மாக்' ஊழியர்கள் நடத்திய போராட்டத்தை முறியடிப்பதில் வேகம் காட்டிய தமிழக அரசு, தொழிற்சங்கங்களுடன் கூட ஆலோசிக்காமல், திடீரென பல்வேறு சலுகை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அரசின் இந்த முடிவு, ஊழியர்களிடம் அரசு படிந்துள்ளதாகவே கருதப்படுகிறது.







முக்கிய கோரிக்கை கதி? "டாஸ்மாக்' தொழிற் சங்க கூட்டு நடவடிக்கை குழு வெளியிட் டுள்ள அறிக்கையில், "தொழிற்சங்கங்களை அழைத்து பேசாமல், அறிவிப்பை வெளியிட் டுள்ளதுமோசமான செயல். பணி நிரந்தரம், வார விடுமுறை, தினமும் எட்டு மணி நேர வேலை போன்ற முக்கிய கோரிக் கைகள் பற்றி, எந்த அறிவிப்பும் இல்லாமல், மற்ற அறிவிப்புக்கள், ஊழியர்களை திருப்திப் படுத்தாது என,தெரிவிக்கப் பட்டுள்ளது.

வருகிறது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9

வரும் 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பின் பதிப்பு 9ன் சோதனைத் தொகுப்பு வெளியிட இருப்பதாக மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது. அதிகம் பேர் இந்த தொகுப்பைப் பயன்படுத்தத் தொடங்கு கையில், மைக்ரோசாப்ட் தரும் பிங் தேடல் சாதனத்தினையும் அவர்கள் பயன்படுத்த முயற்சிப்பார்கள். அதனால், தேடல் வகை வருமானம் அதிகமாகும் என மைக்ரோசாப்ட் எதிர்பார்க்கிறது. இதில் இன்னொரு சிக்கலும் உள்ளது. இப்போது பெரும்பாலானவர்களால் இன்னும் பயன்படுத்தப் பட்டுக் கொண்டிருக்கும் விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தில் இது செயல்படாது. இதனால், இதனைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை, மைக்ரோசாப்ட் எதிர்பார்க்கும் அளவிற்கு உயராது.


இதில் தரப்படும் சில வசதிகள், தற்போது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசருக்குப் போட்டியாகச் சந்தையில் உள்ள மற்ற பிரவுசர்களில் உள்ளவையாக இருக்கும் என்று கருதப்படுகிறது. சீன நாட்டின் தளம் ஒன்றில் இந்தக் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக "Your most popular sites" என்ற வகையில் நாம் அடிக்கடி செல்லும் இணைய தளங்களுக்கான சிறிய படங்கள் காட்டப்படும் என இந்த தளம் அறிவித்துள்ளது. இது தற்போது குரோம் பிரவுசரில் உள்ள ஓர் அம்சமாகும்.

அதே போல ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பைல்களை டவுண்லோட் செய்திடத் தரப்பட்டுள்ள டவுண்லோடிங் விண்டோவும், பயர்பாக்ஸ் மற்றும் குரோம் பிரவுசர்களில் உள்ள சிறப்பான அம்சங்களாகும்.

இவை மற்றவர்களுக்கு, மைக்ரோசாப்ட் வழங்காமல் திருட்டுத் தனமாகக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் வெளியாகி யிருக்கும் தகவல்களே. சோதனைப் பதிப்பு வரும் போதுதான், இவற்றை நாம் உறுதிப்படுத்த முடியும். எனவே அடுத்த ஆண்டு இதே காலத்தில் இந்த புதிய பிரவுசரின் சோதனைப் பதிப்பிற்காகக் காத்திருப்போம்.

ஒரு தமிழனின் கனவு

ஒரு தமிழனின் கனவு!!






விடுதலையின்

வேட்கையில்

ஒவ்வொன்றாய் உதிர்கிறது

ஈழ உயிர்ப்புகள்;



ஆயினும் -

வெல்வோமெனும் திடத்தில்

தோற்றிடவில்லை ஒரு

உலகத்

தமிழரும்!

---------------------------------------------------



அண்ணன் தம்பி

அம்மா அப்பா

பிள்ளை மனைவி

யாரையும் இழந்த

எம் உறவுகள் -

ஈழத்தை இழக்க மட்டும்

தயாரில்லை!

---------------------------------------------------



சுவாசத்தில் சுதந்திரம்

கேட்டு -

வாழ்தலுக்கு ஒரு

ஈழம் கேட்டுத் தானே

இத்தனை போராட்டமென

அறுபது வருடம் தாண்டியும்

புரிந்துக் கொள்ள வில்லை

உலகம்!

---------------------------------------------------



கைவீசி நடந்த அதே

தெருவில் -

கைகால் முடமாக்கப் பட்டு

கிடக்கிறேன் -

பரவாயில்லை;

எக்காரணம் கொண்டும் எம்

விடுதலை உணர்வை

முடமாக்கிக் கொள்ளாதீர்கள்

உறவுகளே!

---------------------------------------------------



நெல்மணிக்கும்

தேயிலைக்கும்

விவசாயம் பார்த்த

தமிழனமே; வாருங்கள்

ஊரெல்லாம் உறைந்துக் கிடக்கும்

ரத்தத்தில் -

எந்த உயிர் யாருடையதெனப்

பார்ப்போம்.



ஒருவேளை அது -

என்னுடையதாய் இருந்தால்

மீண்டுமென்னை உயிர்பித்து விடுங்கள்

ஈழம் வெல்லும் வரை மட்டும்!

---------------------------------------------------



உலக தமிழினங்களே

வாருங்கள் -

ஒரு வாரம்

ஈழத்தில் தங்கி

இறந்த போராளிகளின்

உடம்பு கறி கிடைக்கும்

தின்று விடுதலை உணர்வை

மீட்டுக் கொள்ளுங்கள்!

---------------------------------------------------



குண்டு வெடி

சப்தத்திற்கோ

பீரங்கியில் சிதைந்து போகும்

மரணத்திற்கோ

பயமில்லை;



இறந்து கொண்டிருப்பது

வெறும் போராளிகள் மட்டுமல்ல

எங்களின் நம்பிக்கையுமென்பதே

பயம்!

---------------------------------------------------



இறந்தவர்களுக்கு

இறந்த பின்பும்

நிறைய கடிதங்கள்

எழுதப் படுகின்றன;



பதிலாய் வரும்

அத்தனை கடிதத்திலும்

ஒற்றை சொல்லே

வருகிறது; மீண்டும் மீண்டும்

போராடுங்கள்..

போராடுங்கள்..

---------------------------------------------------



இதுவரை

வீடிழந்து

நாடிழந்து

விடுதலை தேடி திரியும்

எம் உறவுகளே;

உயிரை

யாருக்கு வேண்டுமாயினும்

விட்டுவிடுங்கள்;

விடுதலை உணர்வை -

ஈழத்திற்கு மட்டுமாய்

மிச்சம் வையுங்கள்!

---------------------------------------------------



ரத்தம் ஊறிய

மண்ணில் ஓர் தினம்

புலிக்கொடி -

பட்டொளி வீசிப்

பறக்கும்;



இது கனவென்று

நினைக்கிறார்கள் சிலர்;



ஆம் கனவு தான்

தமிழனின் கனவு!!

-----------------------------------------

நல்ல நண்பண்

ஒரு ஊரில் ஒரு இளைஞன் இருங்தான். அவன் எப்போதும் கோபப்படும் சுபாவத்தை கொண்டவன். ஒரு முறை அவனது நண்பன் அவனிடம் ஆணிகள் நிரம்பிய பையை கொடுத்தான். நீ எப்போதெல்லாம் கோபப்படுகிறாயோ அப்போதெல்லாம் ஒரு ஆணியை இந்த சுவற்றில் அடிக்கவும் என்றான்,




இளைஞ்சனும் அப்படியே செய்து வந்தான். முதல் நாள் அவன் 35 ஆணிகளை அடித்தான், மறு நாள் 30 என்று இப்படியாக குறைந்து கொண்டு வந்தது. சில நாட்கள் கழித்து அவன் கோபப்படுவதை நிறுத்தி விட்டான். அதணால் அவன் ஆணிகளை அடிக்கவில்லை. அதை அவனது நண்பன் பார்த்து பெருமை பட்டான். அவனை முழுவதுமாக திருத்த ஆசைப்பட்ட அவன் அவனிடம் அடித்த ஆணிகளை பிடுங்க சொன்னான்.



இளைஞ்ஞனும் அப்படியே செய்தான். அதை பார்த்த அவன் நண்பன் அவனிடம் சொன்னான்.



என் நண்பனே. நீ நான் சொன்னபடியே எல்லா வேலைகளையும் செய்தாய். இப்போது நீ அடித்த ஆணிகள் பிடுங்கப்பட்டு விட்டன. ஆணால் ஆணி அடித்த இடங்களில் உள்ள ஓட்டைகளை பார்.இந்த சுவர் முன்னால் இருந்த மாதிரி இல்லை. எல்லா இடங்களிலும் ஓட்டைகள் உள்ளன. அது போலத்தான் நீ கோபத்தில் சொல்லும் வார்த்தைகளும், செயல்களும் ஒரு வடுவை உன்டாக்கி விடும். நீ என்னதான் உன் செயல்களுக்கு மன்னிப்பு கேட்டாலும் அந்த வடு மாறாது, மறையாது. நீ வார்த்தைகளால் உன்டாக்கும் வடுவிற்கும், செயல்காளால் உன்டாக்கும் வடுவிற்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை.



என் நண்பனே, உண்மையை சொல்லப் போனால் நண்பர்கள் ஒரு அரிய பொக்கிஷங்கள். அவர்கள் உன்னை சிரிக்க வைப்பார்கள். உன் வாழ்க்கையில் நீ உயர தட்டிக் கொடுப்பார்கள். நீ சொல்வதை காது கொடுத்து கேட்ப்பார்கள். நீ நல்ல நிலமைக்கு வரும் போது உன்னை புகழ்வார்கள். அதையும் இதைய பூர்வமாக செய்வார்கள். அதை தான் நான் இப்போது செய்தேன்,



என்னை மன்னித்து விடு, நான் உன்னில் ஏதாவது வடுவை உன்டாக்கி இருந்தால்.





--------------------------------------------------------------------------------