சுதந்திரத்துக்கு முன்னும் பின்னும் இந்தியா மீது அன்பு வைத்திருந்த ஆங்கிலேயர்களை அறிந்திருக்கிறோம். சுதந்திரத்துக்குப் பிந்தைய காலத்தில் தன்னை தமிழர் என்று அழைத்துக் கொள்வதில் பெருமை அடைந்தஆங்கிலேயரில் முக்கியமானவர் ஆடம் ஆஸ்பர்ன்.
தாய்லாந்தில் ஆங்கிலேய தந்தைக்கும் போலந்து தாய்க்கும், 1939ல் மகனாகப் பிறந்தார். பிறந்ததுதான் அங்கே. வளர்ந்தது எல்லாம் திருவண்ணாமலையில்தான். இவரது பெற்றோர் ரமண மகரிஷியின் சீடர்கள். ஆகவே ஆஸ்பர்ன் தமிழ் மண்ணிலேயே ரமணரின் ஆஸ்ரமத்தில் வளர்ந்தார். கணினி அறிவியல் துறையில் ஆஸ்பர்ன் பெரிய விஞ்ஞானி. இவர் கண்டறிந்த பஸ் எஸ்-100 - முதல் மைக்ரோ கம்ப்யூட்டருக்கு அடிகோலியது. 1981ல் இவர்தான் ஆஸ்பர்ன் 1 எனும் முதல் கையடக்க கம்ப்யூட்டரை வர்த்தக ரீதியில் வெளியிட்டார். ஐ.பி.எம்., கம்பெனி துவக்குவதற்கு முன்னரே, தனது நிறுவனத்தை துவக்கிவிட்டார். அமெரிக்காவில் வாழும் வெள்ளைக்காரத் தமிழன் என்று பெருமையுடன் கூறிய அவர் தனது சுயசரிதையில் இந்திய தேசப் பற்றை வெளிக் காட்டியுள்ளார்.
அவர் தெரிவித்திருப்பது: தமிழ் மண்ணிலிருந்து ஐரோப்பியர்கள் கற்றுக் கொள்ள வேண்டியது ஏராளமாக இருக்கின்றன. இந்தியர்கள் தங்களுடைய தேசியம் மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றால் பெருமை அடைந்திருக்கின்றனர். ஆனால் அமெரிக்காவில் வாழும் இந்தியர்களோ தாங்கள் இந்தியர்கள் என்றபெருமையை மறந்தவர்களாக இருக்கிறார்கள். அமெரிக்காவின் சிலிக்கான் பள்ளத்தாக்கில் இந்தியர்கள் எங்கும் காணப்படுகிறார்கள். விஞ்ஞானிகளாக, டாக்டர்களாக, இன்ஜினியர்களாக, வழக்கறிஞர்களாக இருக்கிறார்கள். தங்களுடைய ஜாதி, இனம் மற்றும் மதம் ஆகியவற்றில் அவர்களுக்கு உள்ள பற்று தேசியம் என்பதில் இல்லாமல் இருக்கிறது. எப்போது இந்தியா தனது பெருமையை உணரத் தொடங்குகிறதோ அப்போதுதான் உலகின் சூப்பர் பவராக அது மாறும். பலர் என்னுடைய இந்த எண்ணத்தை சரியென சொல்லியிருக்கிறார்கள்.நான் இந்தியா திரும்புவேன். அப்போது இந்தியர்களுக்கு இந்தியர்களின் பெருமை பற்றி நிச்சயம் கற்றுத் தருவேன்.
இந்தியர்கள் இந்துவாகவோ, இஸ்லாமியர்களாகவோ அல்லது பார்சிகளாகவோ இருப்பதில் பெருமை இல்லை. தமிழர்களாகவோ, தெலுங்கர்களாகவோ, பஞ்சாபியர்களாகவோ இருப்பதிலும் பெருமை இல்லை. பிராமணர்களாகவோ அல்லது வேறு ஜாதியினராகவோ இருப்பதிலும் பெருமை இல்லை. இந்தியர்களாக இருப்பதில்தான் பெருமை என்பதை நான் கூறுவேன். சிங்கப்பூர் மக்கள் தங்கள் தேசத்தின் மீது வைத்திருக்கும் பற்றினைப் போல் இந்தியர்களும் வைத்திருக்க வேண்டும். இந்தியர்கள் இந்திய தயாரிப்புகளை வாங்க வேண்டும். - லஞ்சம் ஊழல் குடும்பத்தின் பெருமையை கெடுக்கும் என்பதையும் புரிந்து வைத்திருக்க வேண்டும். இவ்வாறு அவர் எழுதியுள்ளார்.
ஆஸ்பர்னின் கம்ப்யூட்டர் நிறுவனம், ஐ.பி.எம்., போன்ற பெரிய நிறுவனங்களின் வருகையால் நிதி நெருக்கடிக்கு உள்ளானது. ஆஸ்பர்ன் தான் கூறிய படியே, இந்தியா திரும்பினார். உடல் நலக்குறைவுடன் இருந்த அவர், 2003ல் கொடைக்கானலில் மரணமடைந்தார். இந்திய தேசியத்தின் மீது வைத்திருந்த அவருடைய பற்று - இன்றைய நவீன இளைஞர்களுக்கு ஒரு சிறந்த முன்மாதிரி.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக