புதன், 18 ஆகஸ்ட், 2010

உலக மொழியில் அமைந்த எழுத்துக்கள்

அசோக மித்திரன் சமீபத்தில் அவுட் லுக் இதழில் விக்ரம் சேத் எழுதிய "இரு வாழ்க்கைகள்" ( Two Lives ) புத்தகத்தை மதிப்புரை செய்திருந்தார். அதில் விக்ரம் சேத்தின் எழுத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது அவரது எழுத்து வாசகரின் கண்ணைக் கூசச் செய்வதில்லை என்று சொல்லுகிறார். அசோக மித்திரனின் எழுத்துக்கும் இக் கூற்று நிச்சயம் பொருந்தும். அவரது கட்டுரைகளின் தொகுதி (இரு தொகுதிகள்) 1700 பக்கங்களுக்கு மேற்பட்டது. அவற்றைப் படிக்கும் போது ஒரு தடவையாவது கறுப்புக் கண்ணாடியைத் தேட வேண்டிய அவசியம் எனக்கு இருக்கவில்லை. தமிழ் இலக்கிய உலகின் முக்கிய இரு ஆளுமைகளில் ஒருவரான சுந்தர ராமசாமி மற்றொருவரான அசோகமித்திரனைப் பற்றிக் குறிப்பிடும்போது அவரது படைப்புகளில் வன்முறைகளின் சாதனங்களே இருக்காது, அதிக பட்சம் அரிவாள்மணை இருக்கும் அவ்வளவுதான், என்றார்.




அசோகமித்திரனின் கட்டுரைகள் உலகம் தழுவியவை. பல அரசும் சமூகமும் வாழ்க்கையும் அன்றாடம் நடத்தும் வன்முறைகளைப் பற்றிய கூரிய பார்வை கொண்டவை. அவரது கட்டுரைகளில் இவ் வன்முறைகளுக்கு எதிர்மறையாக கோபமோ, எரிச்சலோ, உலகை ஒரு கை பார்த்து விடுகிறேன் என்ற உத்வேகமோ தென்படுவதில்லை. ஆனால் இதுதான் நடந்தது என்று அவர் சொல்லும் போதே நடந்ததின் தாக்கம் நம் மீது நம்மையே அறியாமல் குளிர் காலத்தில் கவியும் பனி போல கவிந்து விடுகிறது. இத்தகைய எழுத்து உலகை ஓர் அரிய சமன்பாடுடனும், சிறிதே எள்ளலுடனும் பார்க்கும் அபூர்வமான, தேர்ந்த படைப்பாளிகளுக்கே சாத்தியம். அத்தகைய படைப்பாளியாக அசோக மித்திரன் அமைந்திருப்பது தமிழ் பெற்ற பேறு.



அவர் புற உலகை தனி மனிதனாகப் பார்க்கிறார். அந்த உலகின் எண்ணற்ற, பெயரற்ற, நாளும் நசுங்கும் மனிதர்களில் அவரும் ஒருவர். பார்வை, மிகச் சில தருணங்களைத் தவிர, பருந்துப் பார்வை அல்ல. தினமும் தெருவில் சைக்கிளில் செல்பவர் தன்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை அமைதியாக பதட்டம் இல்லாமல் பார்த்து அவற்றைப் பற்றி எழுதினால் எப்படி இருக்குமோ அப்படித் தோற்றம் அளிக்கின்றன அவரது பெரும்பாலான கட்டுரைகள். ச்¢று நடப்புகளும், சிறு வெற்றிகளும், சிறு இழப்புகளும்தான் மனிதனை இயங்கச் செய்கின்றன, வாழ்வோடு ஒன்றச் செய்கின்றன என்பவற்றை மறுபடியும் மறுபடியும் சொல்லும் கட்டுரைகள் அவை. சைக்கிள் மனிதர் உலகைச் சில சமயம் தான் வேலை செய்யும் அலுவலக ஜன்னலிலிருந்து பார்க்கிறார். சில சமயம் பூங்கா பெஞ்சிலிருந்து பார்க்கிறார். அவர் பொது நூலகத்திலிருந்து எடுத்துப் படித்த புத்தகங்களைப் பற்றி பேசி விட்டு அவை உலகை எவ்வாறு பார்க்கின்றன என்பதைப் பற்றி நமக்குச் சொல்கிறார். அவருக்கு சென்னையை விட்டு வெளியே செல்லத் தயக்கம். சென்றாலும் உடனே திரும்பி வருவதற்கு விருப்பம். இப்படி முழுக்க முழுக்க சென்னைக்கு வந்து சிவமாகி, சிவமானதுடன் சமரசம் செய்து கொண்டவராக சைக்கிள் மனிதர் தோன்றுகிறார். இந்தத் தோற்றம் ஒரு தேர்ந்த வாசகனை ஏமாற்றி விடாது. அவன் படிக்கும் போதே சைக்கிள் மனிதரின் விசாலமான படிப்பையும் கட்டுரைகளின் பரப்பையும் அவை அவனை கேட்கும் கேள்விகளையும், அவனை கேட்க வைக்கும் கேள்விகளையும், எல்லாவற்றிற்கும் மேலாக இக் கேள்விகளுக்கு ஒற்றைப் பதில் கிடையாது என்பதையும், உடனே உணர்ந்து அறிந்து வ்¢டுவான். எப்படி வாழ்ந்தாலும் எங்கே வாழ்ந்தாலும் மனிதன் தன் சூழலை மீறி உலக மொழியில் பேச முடியும் என்பதற்கு இந்த எழுத்து எடுத்துக் காட்டு என்பதை உணர்ந்து விடுவான்.



இக் கட்டுரைகள் மிக நேர்த்தியாக அச்சடிக்கப் பட்டிருக்கின்றன. ஒரு படைப்பாளியின் தீவிர வாசகரே அவரது பதிப்பாளராக அமைந்தது நமக்கு நல்லதாகி விட்டது. முதற் தொகுதி அவரது அனுபவங்களையும், அபிப்ராயங்களையும் சொல்லும் கட்டுரைகள் அடங்கியது. இரண்டாம் தொகுதி அவர் எழுத்தாளர்கள், புத்தகங்கள் , நுண்கலைகள் பற்றி எழுதிய கட்டுரைகள் அடங்கியது. கவனம் இல்லாமல் இப்புத்தகங்களைத் தூக்கினால் மணிக்கட்டு சுளுக்கிக் கொள்ளும் அபாயம் இருக்கிறது.



அசோக மித்திரனின் சொற்கள் கடுகைத் துளைத்து கடலைப் புகட்டி குறுகத் தரித்த சொற்கள். தன்னுடைய அயோவா அனுபவத்தைப் பற்றி அவர் சொல்வதில் சில வரிகள்: எங்கள் குழுவில் பெண்கள் உண்டு. தனி ஆண்களாக பத்துப் பதினைந்து நபர்கள் நடுவில் தனிப் பெண்களாக நான்கைந்து பேர் இருந்து விட்டால் அதில் எவ்வளவு சிக்கல்கள் நேரும் என்பதை நான் உங்கள் கற்பனைக்கு விட்டு விடுகிறேன். இந்தப் பெண்கள் அழகானவர்கள். ஒருத்தி மிகவும் அழகானவள். ஆதலால் இலக்கியத்திற்கு எழுத்துக்கும் அப்பாற்பட்ட பல சூழ்நிலைகள் அமைந்தன. (பக்கம் 62, தொகுதி 1)



சென்னை வாழ்க்கையைப் பற்றி அவர் எழுதுகிறார்: ஒருகாலத்தில் சூதாட்டம் ஒருவர் வாழ்க்கையில் அடிக்கடி நேர்கிற நிகழ்ச்சியாக இல்லை. . இன்று ரசமற்ற அன்றாட வாழ்க்கையை பூர்த்தி செய்வதற்குப் பல கட்டங்களில் தினமும் அபாயத்தோடு சூதாட வேண்டி வருகிறது. (பக்கம் 111, தொகுதி 1)



தமிழ் திரைப் படங்களைப் பற்றி அவர் சொல்கிறார்: தமிழ்த் திரைப்படங்களைக் கிண்டல் செய்ய அவ்வளவு ஆற்றல் தேவையில்லை. படத்தின் கதைச் சுருக்கத்தை எழுதினால் போதுமானதாக இருக்கும். (பக்கம் 788, தொகுதி 2)



திரு கருணாநிதியின் பராசக்தி படத்தைப் பற்றி அவர் கூறியிருப்பது இது: (51-52களில்) தமிழ் சினிமா, சினிமாவை விட்டு விலகி, நாடகப் பண்புகளிலேயே மலினமானவற்றைக் கைக் கொள்ள ஆரம்பித்தது. 'பராசக்தி' தமிழ்த் திரைப்படம் ஒரு மைல்கல் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அதுவே சினிமாவிற்குரிய சிந்தனைப் போக்கைத் தமிழ் சினிமா உலகில் வெகுதூரம் பின் தள்ளி விட்டது. புணர்ச்சிக்குப் பின் ஆணைக் கொன்று தின்றுவிட்டு முட்டையிடலுக்குப் பின் தானும் மடிந்து விடும் ஒரு கொடூர வகைப் பூச்சி போல ' பராசக்தி', சினிமாவையும் பின் தள்ளி விட்டு தமிழ் மேடை நாடகத்தையும் குற்றுயிர் கொலையுயிருமாகச் செய்து விட்டது. ( பக்கங்கள் 671-672, தொகுதி 2). இப்படிக் கூறுவதனாலேயே 'பொது மக்கள் விரும்பும் படங்களுக்கு அவர் எதிரி என்று சொல்ல முடியாது. இன்றைய சராசரித் தமிழ்ப் படத்தில் கூட பல நடிகைகள், அவர்களுக்காக வடித்துத் தந்த எளிமைப் படுத்தபட்ட பாத்திர வார்ப்பையும் மீறிச் சிக்கல்களைப் பிரதிபலிக்குமாறு நடித்திருக்கிறார்கள். நடிக்கிறார்கள். .. ஆனால் தமிழ் சினிமா உலகம் இன்னும் நாயகனுக்கே உரியதாக உள்ளது. தமிழ் சினிமா நாயகர்கள் விதி விலக்கில்லாமல் தமிழ் சினிமாவை எளிமைப் படுத்தப் பட்ட பொழுது போக்குக்கு மேல் உயர முடியாதபடி பார்த்துக் கொள்கிறார்கள். (பக்கம் 675- தொகுதி 2). இந்தக் கட்டுரை 1981ல் எழுதப் பட்டது. இன்று நிலைமை இன்னும் மோசம். எளிமைப் படுத்தப் படுவதில் நடிகைகளின் பங்கு முன்பை விட இப்போது மிகக் கணிசமாக உள்ளது.



சிகந்தராபாத் மற்றும் ஜெமினி ஸ்டூடியோ பற்றிய அவரது கட்டுரைகள் இத்தொகுதிகளின் முக்கியமான கட்டுரைகளில் குறிப்பிடத் தக்கவை. ஜெமினி பற்றிய கட்டுரைகளை The Illustrated Weekly of India பத்திரிகையில் வந்த போது படித்திருத்திருக்கிறேன். இன்று அக் கட்டுரைகள் இந்திய சினிமாவைப் பற்றி எழுதப் பட்டவற்றில் மிகச் சிறந்தவைகளாகக் கருதப் படுகின்றன. இவற்றில் எனக்கு மிகப் பிடித்தது ராஜாஜி சினிமாவிற்குப் போனார் (690-700, தொகுதி 2) என்ற கட்டுரைதான். கட்டுரை ராஜ் மோகன் காந்தி ராஜாஜி பற்றி எழுதிய வாழ்க்கை வரலாறு பற்றிய செய்தியுடன் தொடங்குகிறது. அதில் ராஜாஜியின் டைரிக் குறிப்புகளைப் பற்றிய செய்தி. ஒரு குறிப்பு ஜெமினியின் ஔவையார் படம் பார்த்தேன் என்று தொடங்குகிறது. எப்படி முடிகிறது என்பதை அசோக மித்திரன் உடனே நமக்குச் சொல்வதில்லை. கட்டுரை ஜெமினியின் சம்சாரம் படத்திற்குத் தாவுகிறது. அதன் வெற்றியைப் பற்றி சொல்லி விட்டு அடுத்த ஜெமினி படமான மூன்று பிள்ளைகள் ( ஆர். கே நாராயண் வசனம் எழுதியது!) அடைந்த தோல்வியைப் பற்றி விரிவாகப் பேசுகிறது. இந்தத் தோல்வி ஜெமினி அதிபர் வாசனை அவர் ஏழு எட்டு ஆண்டுகள் கிடப்பில் போட்டிருந்த ஔவையார் படத்தை வெளிக் கொணரத் தூண்டியது. ஔவையாருக்கு வசனம் எழுதிய பலரில் புதுமைப் பித்தனும் ஒருவர். ஏகப் பட்ட ரீல்கள் ஏற்கனவே எடுத்து முடித்தாகி விட்டது. படம் அப்படியே ஓடினால் ஒரு நாள் முழுவதும் ஓடும். "வாசன் தனது கதை இலாகாவைச் சேர்ந்தவர்கள் மதியம் தூங்கி வழிவதைப் பார்த்ததால் அவர்களிடம் ஔவையாருக்காக ஏன் ஒரு சீன் எழுதக் கூடாது என்று கேட்டுக் கொண்டதின் விளைவுதான் அது. வாசனின் தீவிர முயற்சியால் படம் மனிதர்கள் பார்க்கும் அளவிற்கு சுருக்கப் பட்டது. சில காட்சிகள் சேர்க்கப் பட்டன. படத்தின் முன்னோட்டக் காட்சிக்கு ராஜாஜி அழைக்கப் பட்டார். ராஜாஜிக்கும் சினிமாவிற்கும் உள்ள உறவைப் பற்றி அசோக மித்திரன் சொல்கிறார்: ராஜாஜி போன்ற ஒரு நபரை ..அழைப்பது என்பது ..மொரார்ஜி தேசாயை சிகரட் பிடிக்கும் தம்பதியருக்கான போட்டிக்குத் தலைமை தாங்க வைப்பதைப் போன்றதாகும்.



ராஜாஜி படம் பார்த்தார். மௌனமாகப் பார்த்தார். ஒன்று கூறாமலே சென்று விட்டார். மறுபடியும் படம் திரைப்பட அரங்கில் ஓடிய போது டிக்கட் எடுத்துப் பார்த்தார். ராஜாஜி ஔவையார் படத்தை இருமுறை பார்த்தார் என்பதே செய்தியாகி விட்டது. ஆனல் ராஜாஜி படத்தைப் பற்றி என்ன நினைத்தார்? அசோக மித்திரன் அதை கட்டுரையின் கடைசியில் சொல்கிறார்: ..ஔவையார் பார்த்தேன். டி.கே.சண்முகத்தின் நாடகம் இதைவிட நூறுபங்கு மேலானது. இடி, மின்னல் புயல், வெள்ளம் போன்று ஸ்டாக் சீன்கள். யானைகள் அணிவகுக்கின்றன. அட்டைக் கோட்டை விழுகிறது. ..படம் ரொம்ப சாதாரணமானது. ஆனால் இவ்வளவு பணம் செலவழித்துத் துணிச்சலாக எடுத்திருக்கும்போது ஒருவரால் எப்படி அதைக் கண்டனம் செய்ய முடியும்?



சிகந்தராபாத் பற்றி அவர் எழுதிய கட்டுரைகளில் முக்கியமானது 18-வது அட்சக் கோட்டில் என்ற கட்டுரை (பக்கங்கள் 121-164, தொகுதி 2). இரண்டாம் உலகப் போர் முடிவுற்ற 1945-ல் தொடங்கி 1948ல் நடந்த ஹைதராபாத் நேரடி நடவடிக்கையுடன் முடிவுறும் இந்தக் கட்டுரை ஒரு சகாப்தம் முடிந்து மற்றொரு சகாப்தம் ஆரம்பிப்பதை வியக்க வைக்கும் சொற்சிக்கனத்தோடு ஒரு இளைஞனது பார்வையில் சொல்கிறது. உலகப் போர் முடிந்தாலும் அன்றாட வாழ்க்கையை முடிவடையா போராக்கிய ரேஷன் முறை, ஹைதராபாத் நிஜாமிற்கும் இந்திய அரசிற்கும் இடையே ஏற்பட்ட பிளவுகள், அந்தப் பிளவுகளை அடிப்படை வாதிகள் பயன்படுத்திக் கொண்ட விதம், ஹைதாராபாத்திலிருந்து சென்னைக்கு வருவதற்குக் கூட அனுமதி பெற வேண்டிய கட்டாயம், கடைசியாக இந்திய அரசின் நேரடி நடவடிக்கை போன்றவை பற்றிய இந்தக் கட்டுரை மனிதர்கள் தங்களுக்குள் போட்டுக் கொள்ளும் மூடச்சண்டைகள் பற்றி ஒரு மெல்லிய பெருமூச்சோடும், ஆழ்ந்த துக்கத்தோடும் பேசுகிறது. "சிகந்தராபாத்திலும் அகதிகள் வந்து குவிந்திருந்தார்கள். இவர்களில் அனேகமாக எல்லோருமே விதர்பா என்னும் பிரதேசத்திலிருந்து வந்த ஏழை முஸ்லிம்கள். அந்த ஏழ்மையில் அவர்களுக்கு சில கவளங்கள் சோறும், படுத்துக் கிடக்கக் கை அகலத் தரையும்தான் உலகமாகவே இருந்திருக்க வேண்டும். அதையும் விட்டு விட்டுத் தங்கள் உயிர்களைக் காப்பாற்றிக் கொள்ள, அவர்கள் ஓடி வந்த நிஜாம் சம்ஸ்தானத்தில் அவர்களுக்கு என்ன கிடைத்தது? சில கவளங்கள் சோறும் படுத்துக் கிடக்கத் தெருவோரமாகக் கையகல இடமும்தான்.



அசோக மித்திரன் அவர் ஆனந்த விகடனுக்கு 1985-ம் ஆண்டு எழுதியகடிதத்தில் கூறுகிறார்: மனித இனமே ஒன்று என்ற ஒரே செய்தியைத்தான் என் முப்பதாண்டு படைப்புகள் கூறி வருகின்றன. இப்போது இன்னும் இருபது ஆண்டுகள் ஆகி விட்டன. மனித இனத்தின் மீது அவர் கொண்டிருக்கும் அன்பில் எந்த மாற்றமும் ஏற்பட்டிருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இது கொள்கை சாரா அன்பு. இடம், வலம் போகாமல் மக்களை நேராகச் சந்தித்தால் ஏற்படும் அன்பு. அவரிடம் வந்து முன்னுரை கேட்பவர்களைப் புண் படுத்தக் கூடாது என்பதற்காக விமரிசனக் கத்தியை உறையில் போட்டுக் கொள்ள வைக்கும் அன்பு. இத்தகைய அன்பிற்கு இடம் கிடையாது என்ற கொள்கைப் பிடிப்பு உள்ளவர்களைக் கூட ஆச்சரியத்தில் ஆழ்த்தும் அன்பு. அவர் சமீபத்தில் எழுதிய காசி என்ற கட்டுரையில் கூறுவது இது: (காசியில் சிராவண மாதத்தில் காவடி தூக்கி விஸ்வநாதரைத் தரிசிக்க வரும் ஏழைகளைப் பற்றியது) இவர்கள்தான் ஆண்டு முழுக்க நாட்டுக்காக வயலிலும் பட்டறையிலும் வேலை செய்து ஒரு வேளை சோறு கிடைத்தால் போதும் என்று இருப்பவர்கள். ..நாம் எவ்வளவு எளிதாக இவர்கள் பக்தியையும், விசுவாசத்தையும். சகிப்புத்தன்மையையும், போதுமென்ற தன்மையையும் கருத்தரங்குகளிலும், பத்திரிகைக் கட்டுரைகளிலும் அலட்சியப் படுத்துகிறோம்? தென்னிந்தியாவிலும் சபரி மலைக்கு லட்சக் கணக்கில் மக்கள் போகிறார்கள். அது ஏன் மனத்திற்கு சங்கடம் ஏற்படுவதாக அமைந்து விடுகிறது? (பக்கங்கள் 854-87, தொகுதி 2)



தமிழில் பாடப் புத்தகங்களில் பதிக்கப் பட்ட சில கட்டுரைகளை வாசிக்கும் வாய்ப்பு எனக்கு ஒரு சமயம் கிடைத்தது. மாணவர்கள் தமிழ் என்றால் ஏன் அலறி ஓடுகிறார்கள் என்பதின் காரணம் எனக்கு உடனே புரிந்து விட்டது. மலம் கழிப்பதை எளிமையாக்கும் தமிழர் மருத்துவம் பற்றி மாணவர்களிடம் பேசினால் அவர்களால் வேறு என்ன செய்ய முடியும்? அசோக மித்திரன், சுரா (உதாரணமாக அவரது காற்றில் கலந்த பேரோசை) எழுதிய கட்டுரைகளில் சில உலக இலக்கியத்தில் எழுதப் பட்ட மிகச் சிறந்த கட்டுரைகளோடு ஒப்பிடத் தக்கவை. இவை மாணவர்களைச் சென்றடையாதது தமிழகத்தில் உண்மையான, அரசியல் மற்றும் திரைப்படங்களினால் தூக்கிப் பிடிக்கப் படாத படைப்பாளிகளுக்கு என்ன மதிப்பிருக்கிறது என்பதற்கு ஒரு உதாரணம்.



(நன்றி : இந்தியா டுடே)

0 கருத்துகள்: