புதன், 18 ஆகஸ்ட், 2010

ரூ. ஒரு கோடிக்கு ஏலம் போன மாலை

சுபாஸ் சந்திர போஸ், சுதந்திரப் போராட்ட காலத்தில் பிரிட்டிஷாருக்கு எரிமலையாக விளங்கியவர். உடனடியாக சுதந்திரம் பெற வேண்டும் என்ற அவரது, வேட்கை சுதந்திர தாகம் உள்ள அனைவரையும் கவர்ந்தது. பிரிட்டிஷாருக்கு எதிராக இந்திய தேசிய ராணுவத்தை அமைப்பதற்கு முன் அவர் சிங்கப்பூர் சென்றிருந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது. அவருக்கு அணிவிக்கப்பட்ட மாலைகள் ஒரு லாரி நிறைய குவிந்துவிட்டன. சிங்கப்பூர் மக்களுக்கு நன்றி தெரிவித்த அவர், தன்னுடைய கழுத்தில் அணிவித்த மாலையை ஏலம் விடப்போவதாக அறிவித்தார். அந்த பணம், ஐ.என்.ஏ., அமைக்க உதவும் என்றும் கூறினார். மாலையின் ஆரம்ப ஏல விலை ரூ.25 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் எதிர்பாராத விதமாக அது ரூ.ஒரு கோடியே 3 ஆயிரத்துக்கு ஏலம் போனது. ஹபிபுர் ரஹ்மான் எனும் இஸ்லாமிய தொழிலதிபர் இந்த ஏலத்தை எடுத்தார். பெண்கள் தங்கள் கழுத்து, கைகளில் இருந்த நகைகளை கழற்றி போசிடம் கொடுத்தனர். அன்று ரூ.25 கோடி நிதி வசூலானது. இதற்கிடையில் சேகர் என்பவர், தான் வாழ்நாள் முழுவதும் கஷ்டப்பட்டு சம்பாதித்த ரூ.7 லட்சத்தை நீட்டி, தனக்கு மாலை வழங்கும் படி போசிடம் கேட்டுக் கொண்டார். "என்னுடைய இந்த பணத்தை அளித்து, இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொள்ள விரும்புகிறேன்' என்று அந்த தியாகி கூறினார். அவருடைய பணத்தை பெருமிதத்துடன் பெற்றுக் கொண்ட போஸ், அவருக்கும் ஒரு மாலையை பரிசாகக் கொடுத்தார். ஆசிய நாடுகளின் வெவ்வேறு பகுதிகளுக்கு அவர் சென்றார். அப்போது அவருக்கு பூக்குடுவை பரிசளிக்கப்பட்டது. அதை ரூ.25 ஆயிரத்துக்கு ஏலம் விடப்போவதாக அறிவித்தார். ஆனால் அது ரூ.51 ஆயிரத்துக்கு விலை போனது. சுபாஷ் சந்திர போசின் இந்த முயற்சியால்தான், அவரது ராணுவம் அமைக்கப்பட்டது. பிரிட்டிஷாருக்கு அச்சமூட்ட முடிந்தது.

0 கருத்துகள்: