புதன், 18 ஆகஸ்ட், 2010

ஒற்றை நிலா யாருக்குச் சொந்தம்?

தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியால் "உலகம்" இன்று ஒரு "குளோபல் வில்லேஜ் "உலகின் எங்கோ ஒரு மூலையில் ஏதோ நடக்கிறது ...நாம் இங்கே பாதுகாப்பாகத் தான் இருக்கிறோம் ,என்ற உணர்வு சாகடிக்கப் பட்டு நெடு நாட்கள் ஆகின்றன.எங்கே எது நடந்தாலும் அது மற்றவர்களை பாதிக்கவே செய்கிறது .வாழ்வின் மேடு பள்ளங்களை...அபாயக் குழிகளை ...தடுக்கி விழச் செய்யும் சமத்கார சூழ்ச்சிகளை ...ஸ்திரத் தன்மை நீடிக்காத மிக மிக லேசான "ம்" என்றால் உடைபடும் உறவுக்கோளங்களை முன்னெப்போதையும் விட இந்த நூற்றாண்டில் மனித இனம் மிக அருகாமையில் பல முறை தரிசிக்க வேண்டிய ஒரு சூழல் இன்று நிலவுவதென்னவோ வாஸ்தவமே!




அங்கே அமெரிக்காவில் என்ன நடந்தாலும் இங்கே இந்தியப் பொருளாதாரம் பாதிக்கிறது ,இலங்கையில் தமிழன் சித்திரவதை செய்யப் பட்டால் இங்கே"முத்துக் குமரன்கள் " தீக்குளிக்கிறார்கள். அதனால் தமிழர்கள் இலங்கையில் சுகப்பட்டார்களா ? என்றால் அது தான் இல்லை?! என்றும் போல் சுடப்பட்டுக் கொண்டே தான் சிதறிக் கொண்டிருக்கிறார்கள்.



சர்வ தேச அளவில் கவனம் கலைக்கவே தனது மரணம் என்று முத்துக் குமரன் எண்ணியிருந்தால் அவருக்காக வருந்துவதில் தவறே இல்லை.நிச்சயமாக உன் மரணத்திற்கு வேறு முலாம் பூசிப் பார்க்க இங்கே மட்டும் அல்ல எங்கேயும் மனிதர்கள் இருக்கிறார்கள் .உன் வீரமரணம் சீக்கிரமே வலுவிழந்து புறக்கணிக்கப் படலாம், எதுவும் இங்கே நிலைத்த ஆதரவைப் பெறுவதில்லை.காந்தியைக் கொன்ற கோட்சேவின் செயலுக்கும் நீதி தேடிய உலகம் இது!



ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவனது செயல்பாட்டில் அது சரியோ தவறோ நிச்சயம் ஒரு நியாயம் கண்டுபிடிக்கப் பட்டிருக்கும் .கோணங்கள் இங்கே பல் கோணங்களாகி பல்கிப் பெருகி மூச்சு திணறச் செய்கின்றன பல வேளைகளில் !ஒவ்வொருவருக்கும் ஒரு கோணம் கடைசியில் வெற்று கூச்சல்கள் ...கலவரங்கள்...போராட்டங்கள்...போர்.இன்று இந்தியா ஒரு வன்முறை பூமியாக மற்றப் பட்டுக் கொண்டிருக்கிறதோ என்ற சந்தேகம் எல்லோர் மனதிலும் வேர் விடத் துவங்கி விட்டது.



இலங்கையைப் போல இந்தியா "யுத்த பூமி ஆக வேண்டாம் .அமெரிக்காவைப் போல அல்ட்ரா மாடர்ன் ஆக வேண்டாம் .வளைகுடாக்களைப் போல தீப்பிடித்து எரிய வேண்டாம் ..சீனாவைப் போல மலிவு விலை சாம்ராஜ்ய ஏகபோகத்தில் திளைக்க வேண்டாம் .உலகில் எந்த நாட்டைப் போலவும் இந்தியா ஆக வேண்டிய அவஷியமும் இல்லை. இந்தியா இந்தியாவாகவே இருக்கட்டும்.



வல்ல பாய் படேல் பாடு பட்டு இரும்பு மனம் கொண்டு ஒன்றிணைத்த இந்தியா அப்படியே இருப்பதில் எந்த வித கெடுதலும் இருப்பதாகத் தெரியவில்லை.திபெத்தை தனதாக்கிக் கொண்ட சீனா இன்று அஸ்ஸாமை திபெத்தின் ஒரு பகுதி என்று கூறி இந்தியப் எல்லையை சுருக்க தன் மூளையில் குறுக்கு வழி தேடிக் கொண்டிருக்கிறதாம்.



பாகிஸ்தானுக்கோ "காஷ்மீரின் " மீது தீராத முரட்டுக் காதல்.ஆந்திராவில் தனித் தெலுங்கான கேட்டு போராட்டம்,இங்கே நினைவு கூறப் பட வேண்டிய விசயங்களில் மற்றுமொன்று உண்டு. திராவிட நாடு கோரிக்கையை " முன் வைத்துப் பிரபலமான திராவிடக் கட்சிகளின் கட்டுப் பாட்டில் தான் தமிழக அரசியல் இன்றும் சிக்கி நிற்கிறது.



அணைந்த கொள்ளி என்று ஆசுவாசம் தேவை இல்லை.கொள்ளிகள் கொழுத்தப் படலாம் ஆட்சி மாறி அதிகாரம் மாறும் ஒரே நாளில் ! கர்நாடகாவில் எதற்கெடுத்தாலும் தமிழர்களே பலியாடுகள்! எதற்காகவும் அவர்கள் தமிழர்களை துன்புறுத்த தயங்கியதே இல்லை...தண்ணீரிலிருந்து தரமான நடிகனின் தள்ளாத வயது சாவு வரை அவன் தட்டி...முட்டி அடக்குவது தங்கத் தமிழனையே.கர்நாடகாவில் வேறு மாநிலத்தவர் எவருமே இல்லையா?



இங்கே கேரளம் மட்டும் சும்மா இருந்து விட்டால் சுவாரஷ்யத்திற்கு பஞ்சமாகி விடாதோ?! அவர்கள் பங்கிற்கு "பெரியார் டேம் ...தமிழக ஆறுகளின் மணல் திருட்டுக்கு உடந்தை...இப்படி எதையோ அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள்.மகாராஷ்ட்ரா (மும்பை) பத்திரிகைகள் சித்தரிக்கும் மும்பை என் போன்ற நடுநிலை வாசிப்பாளர்களுக்கு "தாதாக்களின் உலகம் " என்ற பயங்கரக் கற்பனையையும் அதீதமான அச்சதையுமே உருவாக்கி இருக்கிறது இந்நாள் வரையிலும். அங்கே திரைத்துறையில் இருந்து ...வியாபர காந்தங்கள் வரையில் தாதாக்களுடன் சம்பந்தப் படுத்தியே பார்க்கப் படுகிறார்கள்.



அங்கே நிலைமை இப்படி என்றால் "காந்தி பிறந்த மண்ணிலோ " இந்துத்வா வெறி தலை வெறித்து ஆடுகிறது .யார் எதைப் பின்பற்றினால் யாருக்கென்ன ?



இந்து ...முஸ்லீம்...கிறிஸ்த்தவர்கள் ...ஜெயின்கள்...பார்சிகள்...பௌத்தர்கள் மாதங்கள் எதுவாக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டுமே "எல்லோரும் மனிதர்கள் தானே" மதங்கள் வெறும் சட்டைகள் என்று படித்த ஞாபகம் வருகிறது.சட்டைகளை மாற்றிக் கொள்ளா விட்டாலும் பரவாயில்லை ஒன்றும் கெட்டு விடப் போவதில்லை. இங்கே சட்டைகளுக்காக தோலை அல்லவா உரித்துக் கொண்டு உயிரோடு சாகத் துணிந்து விட்டார்கள்.



இருத்தலுக்காக இல்லாது போகத் துணியும் அசகாய சூரத் தனம் எங்கே கற்றார்களோ?! "எல்லாம் மூளைச் சலவை " "வேற்றுமையில் ஒற்றுமை " சொல்லக் கூசுகிறது தான். நாம் ஒற்றுமையாகத் தான் இருக்கிறோமா? ஏதோ இருக்கிறோம் என்று விட்டேற்றியாக சொல்லிக் கொண்டால் நலம்."நான்கு பசுக்களும் ஒரு சிங்கமும் "கதையைப் போல ""இந்தியாவை யாரும் துண்டாடி விடாமல் பாதுகாக்க என்ன செய்கிறது நடுவண் அரசு மற்றும் உள்ள 27 மாநில அரசுகள்?



மாநில அரசுகள் தங்களுக்குள் உள்ள வேலிச்சண்டைகளை தீர்க்க முன் வராவிட்டால் நடுவண் அரசு வெளிச்சண்டைகளில் எப்படி கவனம் செலுத்த முடியும்? இங்கே நாம் காவிரிக்காக சண்டை போட்டுக் கொள்ளும் போது அங்கே சீனாக் காரன் அஸ்ஸாமை லவட்டிக் கொண்டு போய் விட்டால் பிறகு அதற்க்கு இன்னொரு பொது சண்டை போட்டுக் கொள்வோம் இராணுவம், எல்லைப் பாதுகாப்பு என்ற பெயரில் .



சுதந்திரம் என்ற பெயரில் "எல்லைக்கோடுகளில் அடைபட்டுக் கொண்டதென்னவோ" அதிகபட்ச புத்திசாலித் தனம் தான். "இது தான் சுதந்திரமா ?கேள்வி எழுப்புபவர் யாராயினும் "ஆமாம் ...இதுவே கட்டுப் பாட்டில் சுதந்திரம்...பாதுகாப்புக்கு முழு உத்திரவாதம் " என்று பட்டென்று பதில் சொல்லி வாயடைக்கலாம்.இப்படி கோடுகளில் அடைபட்டேனும் நிம்மதியாக வாழ விதித்திருக்கிறதே சில காலம் ! அதையும் கெடுத்துக் கொள்வதைப் போல அல்லவா இப்போது காரியங்கள் நிகழ்கின்றன...நிகழ்த்தப் பட்டுக் கொண்டு இருக்கின்றன.



"உள்ளதும் போச்சுடா நொள்ளைக் கண்ணா" ரேஞ்சுக்கு தரம் தாழ்ந்து விடத்தான் போகிறோமா ஒருநாள்? இல்லாவிட்டால் அமெரிக்க அண்ணனைப் போல "வல்லரசாகி" தம்மினும் எளியாரை வாட்டி வதைக்கப் போகிறோமா?



மலேசியா மற்றும் தாய்லாந்தின் குப்பைக் கிடங்காக இருந்த சிங்கப்பூர் இன்று உலகின் மிகச் சுத்தமான நாடு .



மண் வளமே சிறிதும் அற்ற இஸ்ரேல் விவசாயத்தில் பல படி முறைகளை முயற்சித்து தனக்கான தன்னிறைவைப் பெற்று விட்டதென பத்திரிகைகள் பறை சாற்றுகின்றன.



நிலாவில் வீடு கட்ட மனை வாங்கி போட்டுக்கிறேன் என்று ஒரு ஆந்திர தொழிலதிபர் பெருமை அடித்துக் கொள்கிறார்.



நிலா (சந்திரன்) யாருக்குச் சொந்தம் என்ற சண்டையும் விரைவில் வரக் கூடும்! ஏனெனில் பூமிக்கு ஒரே ஒரு துணைக்கோள் தான் . வியாழனைப் போல 12 நிலாக்கள் இருப்பினும் சர்ச்சை எழும்பத்தான் செய்யும்.இந்த உலகத்தில் தான் ஆசியா...ஆப்பிரிக்கா,ஐரோப்பா,அமேரிக்கா,அட்லாண்டிக் என்று ஐந்து கண்டங்களும்.கண்டங்களில் பலபல தேசங்களும் விரவிச் சிதறி நிற்கின்றனவே!



ஒற்றை நிலா யாருக்குச் சொந்தம்? அடடா...இந்த மானிட சமுதாயம் சர்ச்சைகளில் இருந்தும் சண்டைகளில் இருந்தும் ...விடுபட்டு கடைத்தேற நிஜத்தில் ஒரு வழியும் இல்லை போலத் தான் தெரிகிறது .



தொடரும்... (நிச்சயம் தொடரும்..)

0 கருத்துகள்: