புதன், 18 ஆகஸ்ட், 2010

இந்தியாவில் இருந்து உருவானதா சூப்பர் பக் ? சில கேள்விகளும் சந்தேகங்களும்

எந்த நோய்த்தடுப்பு மருந்துக்கும் கட்டுப்படாத, ஆபத்தான, நியூடெல்லி மெட்டல்லோ-பீட்டா-லேக்டோமேஸ்-1 (NDM-1) என்ற ஒரு வகையான புரதத்தைத் தன்னகத்துள்ளே சுமந்துள்ள ஆபத்தான பாக்டீரியா ஒன்று இந்தியாவிலிருந்து பரவி வருவதாக பிரிட்டன் மருத்துவ விஞ்ஞானி கூறியதிலிருந்து உலக அளவில் ஊடகங்கள் ஒரு விதமான பீதியை உருவாக்கி வருகின்றன.




உடலின் கண்ணுக்குத் தெரிந்த உறுப்புகள் முதல் கண்ணுக்குத் தெரியாத உறுப்புகள், நுண்ணுயிரிகள், மரபணுக்கள் வரை தங்களிடையே ஒரு செய்தி தொடர்புபடுத்தல் வலைப்பின்னல் அமைப்பைக் கொண்டுள்ளன.



அந்தச் 'செய்தி' பரிவர்த்தனையில் ஏற்படும் கோளாறுகளினால் நோய்கள் உருவாகின்றன என்று மருத்துவக் கோட்பாடுகள் சில கூறுகின்றன. ஆனால் அந்த நோய்க்கிருமி வேகமாக பரவுகிறதோ இல்லையோ அதனைப் பற்றிய செய்தி மிகவேகமாக பரவி வருகிறது.



பாக்டீரியாக்கள் தன்னகத்தே கொண்டுள்ள சமிக்ஞைச் செய்திகளை மற்றொரு உடலுக்கு அல்லது மற்றொரு பாக்டீரியாவுக்கு வேகமாக கடத்துவதை விட இந்த ஆபத்தான் பாக்டீரியா பற்றிய ஊடகச் செய்திகள் அதனைக் காட்டிலும் வேகமாகப் பரவி வருகின்றன. ஒரு 'செய்தி' ப் பரவலுக்கு மருத்துவர்கள் மருத்துவம் கண்டுபிடிக்கட்டும். ஆனால் நாம் செய்ய வேண்டியது இந்த மற்றொரு செய்திப் பரவலின் உண்மைத் தன்மைகள் குறித்து பரிசீலிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.



பிரிட்டன் கார்டிஃப் பல்கலைப் பேராசிரியர் டிமோதி வால்ஷ், புதுடெல்லிக்கு பயணம் மேற்கொண்டு திரும்பிய ஸ்வீடன் நோயாளியிடம் இந்த 'ஆபத்தான' என்.டி.எம்.-1 என்ற என்சைமைச் சுமந்திருக்கும் பாக்டீரியா இருப்பதைக் கண்டறிந்தார். அதனால் அதற்கு நியூடெல்லி என்ற அடைமொழி கிடைத்துள்ளது! ஏன் ஸ்வீடன் என்றோ அல்லது அதனைக் கண்டுபிடித்த டிமோதி வால்ஷ் பெயரோ அடைமொழியாக, முன் ஒட்டாகச் ஏன் சேர்க்கப்படவில்லை என்று தெரியவில்லை.



பொதுவாக நல்ல மருந்தைக் கண்டுபிடித்து விட்டோம் என்று மார்தட்டும்போது அதற்கு அந்த விஞ்ஞானியின் பெயரின் ஒரு பகுதியையோ அல்லது அதனை அறிவுறுத்துவது மாதிரியோ பெயர் தேர்வு செய்யப்படும். ஆனால் ஆபத்தான, மனித குலத்திற்கு 'ஆபத்து' விளைவிக்கும் நோய்க்கிருமியை, அதுவும் புதுடெல்லியிலிருந்து வந்த ஸ்வீடம் நபரிடம் கண்டுபிடித்திருப்பதால் இதற்கு நியூடெல்லி என்ற பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.



இதன் விளைவுகள் மோசமாக இருக்கும். நியூடெல்லியிலிருந்து அயல்நாட்டிற்கு செல்பவர்கள் எல்லோரும் இனி என்.டி.எம்-1 இருக்கிறதா என்ற பரிசோதனை செய்து கொள்வது நிர்பந்தமாகவே மாறிவிடலாம். அயல்நாட்டிற்குச் செல்லும் இந்தியர்களோ அல்லது இந்தியாவுக்கு வந்து சிகிச்சை பெறும் அயல்நாட்டவர்களையோ தனிமைப்படுத்துவதில் போய் இது முடியலாம்.



இதற்கு எதிர்வினையாற்றியுள்ள தேசிய நோய்க்கட்டுப்பாட்டு மைய செயலர் வி.எம். கடோச் மிகச் சரியாகவே கூறுகிறார்:



"இந்த புதிய சூப்பர் பக் என்ற கிருமி சுற்றுச்சூழல் தொடர்புடைய ஒன்றாக இருக்கும்போது அதனை ஒரு குறிப்பிட்ட நாட்டுடன் தொடர்புபடுத்தியிருப்பது துரதிர்ஷ்டவசமானது. எனக்கு ஆச்சரியமாக உள்ளது, இந்த புதிய நோய்க்கிருமி இயற்கையில் உள்ளது, இது தற்செயல் நிகழ்வு, இன்னொன்றிற்கு மாற்றமடையாதது" என்று கூறியுள்ளார்.



இவரது எதிர்வினையில் நியாயம் இல்லாமல் இல்லை. ஏனெனில் இந்த நோய்க்கிருமியில் இந்த என்.டி.எம். உருவாவதற்குக் காரணம் உலகிலேயே இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட துணைக்கண்ட நாடுகளில் அதிகம் பேர் ஆண்ட்டிபயாடிக் மருந்துகளை அதிகம் எடுத்துக் கொள்வதுதான் என்று இங்கிலாந்து ஆய்வாளர்கள் கூறியிருப்பதுதான்.



இந்த என்.டி.எம்.-1 உள்ள பாக்டீரியாவை முறியடிக்கும் மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே இது தாக்கினால் உலகம் முழுதும் மரண விகிதம் அதிகரிக்கும் என்பதுதான் தற்போது கூறப்பட்டு வரும் செய்தி.



இந்த என்.டி.எம்-1 பற்றிய ஆய்வுகள் அனைத்தும் இன்னும் மிகவும் ஆரம்ப நிலையிலேயே உள்ளது. ஆனால் அதனைப் பற்றிய அச்சுறுத்தல் மட்டும் பல்வேறு நிலைகளைக் கடந்து மக்களிடையே ஒரு பீதியைக் கிளப்பும் உச்சத்திற்குச் சென்றுள்ளது.



பாக்டீரியாக்களின் வகைகள்:



பாக்டீரியாக்கள் பற்றிய ஒரு ஆரம்ப நிலை விளக்கமே அது எல்லா வகையான சூழல்களிலும் உள்ளது என்பதே. அதனால் இது நியூடெல்லி, கராச்சி, டாக்கா என்றெல்லாம் குறிப்பிட்ட சூழலுக்கு ஏற்றி கூற முடியாது.
டி.என்.ஏ. வரிசைமுறையாக்கம் என்ற ஒன்று கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னால் பாக்டீரியாக்களை அதன் வடிவம் வைத்துத்தான் வகைபிரித்து வந்தார்கள். மேலும் அதன் உயிர்-வேதிக்கூறுகள் கொண்டு வகைப் பிரித்து வந்தார்கள்.




அதன் படி கழி அல்லது கோல் வடிவ பாக்டீர்யாக்கள் பேசில்லி (bacilli) என்றும், கோள அல்லது உருளை வடிவ பாக்டீரியாக்கள் கோக்கை (cocci) என்றும், சுருள் வடிவ பாக்டீரியாக்கள் ஸ்பைரில்லா (spirilla) என்றும் வகைபிரிக்கப்பட்டன. ஆனால் நாளடைவில் இந்த வடிவங்கள் அல்லாத மேலும் சிக்கலான வடிவ அமைப்புகளில் புதிய பாக்டீரியாக்கள் இருப்பதும் தெரியவந்தது.



தனது இருத்தலுக்கு பிராண வாயு கட்டாயம் தேவைப்படும் பாக்டீரியாக்கள் ஏரோபிக் பாக்டீரியாக்கள் என்றும், பிராண வாயு தேவைப்படாத பாக்டீரியாக்கள் அனரோபிக் பாக்டீரியாக்கள் என்றும் அறியப்படுவது எல்லாம் நாம் பாடப்புத்தகங்களில் பார்த்திருப்போம்.



ஆனால் இப்போது நம் விவாதத்திற்கு முக்கியமான வகைப்பிரிவு இதோ: கிராம் பாசிட்டிவ் பாக்டீரியா, கிராம் நெகடிவ் பாக்டீரியா. அதாவது அதன் நிறவேறுபாடு (stain) வைத்து இதனை பிரித்துள்ளனர். கிராம் என்றால் பயப்படுவதற்கு ஒன்றுமில்லை. 1884ஆம் ஆண்டு ஹான்ஸ் கிறிஸ்டியன் கிராம் என்பவர் இதனைக் கண்டுபிடித்ததால் கிராம் பாசிட்டிவ், கிராம் நெகடிவ் என்று அழைக்கப்படுகிறது. அதன் செல்சுவர் அமைப்பாக்கக் கூறுகளை வைத்து இது பிரிக்கப்படுகிறது.



கிராம் பாசிட்டிவ் செல்சுவர் ஊதா நிறமுடையது. கிராம் நெகடிவ் செல்சுவர் அதன் ஊதா நிறத்தைத் தக்கவைக்க முடியாதது. பாக்டீரியாக்கள் நடத்தை என்னவென்று பார்த்தால் அது தனது சூழலுக்குள் ரசாயனங்களைச் சுரக்கும் ஏனெனில் அப்போதுதான் சூழலை தனக்கு நன்மை பயக்கும் விதமாக அது மாற்ற முடியும். இந்த சுரப்பிகள் பெரும்பாலும் புரோட்டீன்களையே சுரக்கும். அது என்சைம்களாக செயல்பட்டு அதன் சுற்றுச்சூழலில் உள்ள உணவை உண்டு சீரணிக்கும்.



மனிதர்களிடத்தில் முக்கால்வாசி நோய்க்கூறுகளூக்கு கிராம் பாசிடிவ் பாக்டீரியாக்களே காரணம். இதில் நாம் சற்று முன் குறிப்பிட்ட கோள வடிவ கோக்கை பாக்டீர்யாக்களான ஸ்ட்ரெப்டோ கோக்கஸ், ஸ்டெஃபைலோ கோக்கஸ் ஆகியவையும் மீது 4 வகை நாம் பேசில்லி என்று குறிப்பிட்ட கழி வடிவ பாக்டீரியாக்களும் அடங்கும்.



இதில் கிராம் பாசிட்டிவ் நோய்களுக்கு ஏகப்பட்ட ஆன்ட்டி பயாடிக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கிராம் நெகடிவ் நோய்கள் அனைத்திற்கும் இன்னும் மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. கிராம் பாசிடிவில் கோக்கஸ், பேசில்லி இருப்பது போல் இதில் ஈ-கோலை, சால்மனொல்லா, ஷிகெல்லா உள்ளிட்ட பல வகைகள் உள்ளன.



இதில் மருத்துவம் தொடர்பான பேசில்லியில் குறிப்பிடவேண்டுமென்றால் கிளெப்சியல்லா நிமோனியா, ஹீமோபீலஸ் இன்ஃபுளெயென்சா, ஆகியவை மூச்சுக்குழல் தொடர்பான பிரச்சனைகளை தோற்றுவிப்பது.



மற்றொன்று சிறுநீர்க்குழாய்ப்பாதை தொடர்பான நோய்களை உருவாக்கும் ஈ-கோலை (E-coli) ஆகும்.



இப்போது நம் பிரச்சனைக்கு வருவோம் என்.டி.எம்.-1 என்ற என்சைமைச் சுமந்து செல்லும் தற்போதைய கண்டுபிடிப்பான ‘சூப்பர் பக்’ பாக்டீரியா ஒரு கிராம் நெகடிவ் பாக்டீரியா.



மனித உடலின் உணவுச் செரிமானக் குழாயின் அடிப்பகுதியில் காணப்படும் ஈ-கோலை மற்றும் கிளெப்சியல்லா நிமோனியா ஆகிய பாக்டீரியாக்கள் தற்போது சில நபர்களை ஆய்வு செய்த போது என்.டி.எம்.-1 என்ற ஆபத்தான என்சைமை சுமந்து கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதான் மையமான பிரச்சனை!



இதனால் சிறுநீர்ப்பாதை உபாதைகளும், ரத்தம் நச்சுமயமாவதும் நிகழும் என்பது மருத்துவர்கள் கூறும் தகவல். வழக்கமாக இதற்கு கொடுக்கப்படும் எந்த ஆன்ட்டி-பயாடிக்குகளும் இதற்கு ஒத்து வராது, ஏனெனில் இந்த என்சைம் அவற்றின் தடுப்புச் செயல்பாட்டினை முறியடித்துவிடும். இதுதான் மருத்துவர்களின் தற்போதைய கவலை அல்லது கிளப்பும் பீதிக்கான அடிப்படை.



இங்குதான் நாம் சில கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்பவேண்டியுள்ளது.



துணைக்கண்டங்களில்தான் அதிகம் ஆன்ட்டி-பயாடிக்குகள் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. அதனால் இங்குதான் இந்த என்சைம் உருவாகியுள்ளது என்பதற்கான கறாரான சுற்றுச்சூழல், மருத்துவ, உடல்ரீதியான காரணங்கள் சந்தேகமற நிரூபிக்கப்பட்டுள்ளதா?



அப்படியே ஆன்ட்டி-பயாடிக்குகளை நாம்தான் அதிகம் பயன்படுத்துகிறோம் என்றால் அது என்ன துணைக்கண்டங்களின் கண்டுபிடிப்பா? அனைத்து ஆன் ட்டி பயாடிக்குகளும் நமக்கு மேற்கு நாடுகளிலிருந்து வந்ததுதான். மேற்கில்தான் அது கண்டுபிடிக்கப்பட்டது எனும்போது அங்குதான் எதிர்ப்புச் சக்தி நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்றாகிறது. அப்படியென்றால் ஏற்கனவே எதிர்ப்புச் சக்தி நெருக்கடி கண்ட அந்த உடல்களின் உள்ளேயே இந்த புதிய சூப்பர் பக் உருவாவதற்கான சந்தர்ப்பங்களை நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளாமல் இருக்க முடியுமா?
123» பொதுவாகவே இப்போதெல்லாம் ஆன்ட்டி பயாடிக் விளைவுகளைத் தடுக்கும் நோய்க்கூறுகள் அதிகம் தோன்றுவதாக ஆய்வுகள் வெளிவந்து கொண்டிருக்கையில் அதற்கான பொதுப்படையான காரணங்களே இந்த புதிய சூப்பர் பக் உருவாவதற்கும் காரணமாக இருக்கலாம் அல்லவா?




மெதிசில்லின் தடுப்பு ஸ்டெபைலோகோக்கஸ் (Methicillin-resistant Staphylococcus aureus - MRSA) அழைக்கப்படும் என்ற நுண்ணுயிரி உருவாக்கும் நோய்கள் மீது இதுநாள் வரைக்கும் பெரிய அளவில் பணம் செலவழிக்கப்பட்டு ஆய்வுகள் நடத்தி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்ட அளவுக்கு ஆண்ட்டி பயாடிக் தடுப்பு கிராம் நெகடிவ் பாக்டீரியாக்களை முறியடிக்க ஏன் அதிக அளவு கவனம் செலுத்தப்படவில்லை?



ஈ-கோலை அல்லது கிளப்சியெல்லா நிமோனியா மற்றும் பிற என்டெரோ பாக்டீரியாக்களின் பொதுவான மருந்து தடுப்பு உத்தி என்னவெனில் பீட்டா லேக்டோமேஸ் என்ற ஒரு என்சைமை அது உற்பத்தி செய்வதால்தான். இது அந்தந்த என்சைம்களைப் பொறுத்து பீட்டா லேக்டம் ஆன்ட்டி பயாடிக்குகளின் செயலை இழக்கச்செய்கிறது. இந்த என்சைம்கள் பலவகையானது. இதுவரை 532 இந்த வகை என்சைம்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை பொதுவாக செபலோஸ்போரின்ஸ், பென்சிலின் வகை ஆண்ட்டிபயாடிக்குகளை திறமையாக தடுத்து விடுகிறது.



தற்போது பிரச்சனையில் உள்ள ஆபத்தான என்சைம் புவியியல் சூழல் (குறிப்பாக நகரப்பகுதிகளில் இருப்பவர்கள்), மருத்துவமனை, நோயாளியின் வயது ஆகிய காரணிகளால் மாறுபடுகிறது.



இதில் துணைக்கண்ட பகுதிகளில் உருவாகும் இவ்வகை என்சைம்கள் அனைத்தையும் ஆய்வு செய்யப்பட்டு விட்டதா? அப்படியிருக்கையில் துணைக்கண்ட உடல்களிலிருந்துதான் இது உருவானது என்று எவ்வாறு கூற முடியும்?



இது பற்றி 1997-2002ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட நோய் எதிர்ப்பு மருந்துகளை தடுக்கும் சக்திகள் பற்றிய ஆய்வில் குறிப்பாக ரத்த ஒட்டம் தொடர்பான நோய்க்கிருமித் தாக்குதலுக்குக் காரணமான கிளப்சியெல்லா நிமோனியா சுமந்துள்ள என்சைமின் அளவு லத்தீன் அமெரிக்க நோயாளிகளிடம் 43.7% இருப்பதும் ஐரோப்பிய நோயாளிகளிடம் 21.7 சதவீதம் இருப்பதும், வட அமெரிக்காவில் 5.8% இருப்பதும் தெரிய வந்துள்ளது. (இந்தத் தகவலை தாமஸ் ஜி.ஸ்லாமா என்பவர் எழுதிய கிரிட்டிக்கல் கேர் கட்டுரை Gram-negative anti-biotic resistance: there is a price to pay என்பதில் காணலாம்)



மேலும் இதற்கு ஆண்ட்டி-பயாடிக் சிகிச்சை இல்லை என்றே கூற முடியாது. மேற்கூறிய கட்டுரையாளர் இது பற்றி அதே கட்டுரையில் குறிப்பிடுகையில் இவ்வகை பாக்டீரியாக்கள் உருவாக்கும் நோய்க் கிருமிகளுக்கு தகுந்த ஆண்ட்டி பயாட்டிக்குகளைக் கண்டு பிடித்து கொடுப்பதில் தாமதம் ஏற்படுவது தவிர்க்கவியலாது. இதனால் மருத்துவமனைச் செலவு அதிகரிக்கும் என்பது உண்மை. ஆனால் துவக்கத்திலேயே சரியான ஆண்ட்டி பயாடிக்குகளை கொடுக்க முடியாமல் போவதுதான் இதனால் ஏற்படும் மரணங்களுக்குக் காரணமாகிறது என்கிறார்.



இது பற்றிய ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதும், இன்னும் ஆய்வுகள் தேவை எனும்போதும் இது இந்தியாவில் உருவாகிறது, பாகிஸ்தானில் உருவாகிறது என்றேல்லாம் கூறுவதன் நோக்கத்தில் உள்நோக்கமும் லாப நோக்கமும் (மருத்துவ வருவாய் இழப்பு) இருக்கலாம் என்று தோன்றுகிறது.



பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து கொள்ள அயல்நாட்டிலிருந்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் நிறைய பேர் வருவது அதிகரித்துள்ளது. காரணம் அங்கு இதற்கு ஆகும் செலவை விட இங்கு பன்மடங்கு குறைவு என்பதே. எனவே அவர்களை இது போன்று பயமுறுத்தி வரவிடாமல் செய்தால் அவர்கள் அங்கேயே (ஐரோப்பாவிலேயே) இந்த சிகிச்சைகளை செய்து கொள்ள முடிவெடுக்கலாம். இது போன்ற நோக்கங்களையும் நாம் கண்டு கொள்ளாமல் விட்டு விட முடியாது.



இன்று இந்த விவகாரம் மாநிலங்களவையில் விவாதத்திற்கு வந்தபோது உறுப்பினர்கள் பலர் இதன் பின்னணியில் பன்னாட்டு மருந்து நிறுவனங்களும், பன்னாட்டு மருத்துவமனை நிறுவனங்களும் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.



அதாவது இந்தியா ஒரு மருத்துவச் சுற்றுலாவிற்கான இடமாக மாறிவரும்போது இது போன்ற செய்திகள் பன்னாட்டு மருத்துவ நிறுவனங்களின் கெட்ட நோக்குடைய பிரச்சாரமாக இருக்கலாம் என்று பாஜக உறுப்பினர் அலுவாலியா தெரிவித்துள்ளார்.



ஆனால் நாம் பொறுப்புள்ள நபர்களாக ஒரு புறம் ஐரோப்பிய பிரச்சார எந்திரத்தின் நிலைப்படுத்தல்களையும், அதனை எதிர்க்கும் இந்திய ஊடக பிரச்சார எந்திர எதிர் நிலைப்படுத்தல்களையும் நம்புவதை ஒத்தி வைத்து சற்றே தள்ளியிருந்து இந்த விவகாரம் என்ன ஆகிறது என்பதை கவனிக்கவேண்டும்.



ஐரோப்பியச் செய்திகளின் பின்னணிகளை அலசக் கற்றுக் கொள்ளவேண்டும். அது அவசியத்திலெல்லாம் அத்யாவசியம்.

0 கருத்துகள்: