புதன், 18 ஆகஸ்ட், 2010

சுதந்திரத்தின் சுவாசம்

நாம் நமக்குக் கிடைத்த சுதந்திரத்தை சரியாகப் பயன்படுத்துகிறோமா... இல்லையா... என்பதை காலம் காலமாக பட்டிமன்றம் நடத்தி வருகிறோம். ஆனால் பொது இடங்களில் நாம் நடந்து கொள்ளும் முறைகளோ மாறியிருப்பதாகத் தெரியவில்லை. பலர் சுதந்திரம் என்பதை - எல்லாம் தனக்கு வழங்கப்பட்டு விட்டதாகக் கருதுகிறார்கள்.








பொது இடங்களில் எச்சில் துப்புபவர்கள், வாகன நெரிசலின் போது, போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள், அனுமதி இல்லாமல் போஸ்டர் ஒட்டுபவர்கள், கழிவுநீரை பொது இடங்களில் விடுபவர்கள், லஞ்சம் வாங்குபவர்கள், வேலை நேரத்தில் தங்கள் கடமையை செய்யாதவர்கள் என்று, "சுதந்திரத்தைக் கையில்' எடுத்துக் கொண்டவர்கள் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. நாடு வல்லரசாக வேண்டும், பொது இடங்கள் "அமெரிக்கா' போன்று இருக்க வேண்டும் என்று விரும்புபவர்கள், தங்களுடைய கடமையை முழுமையாக நிறைவேற்றுகிறோமா என்று ஒரு நிமிடம் யோசிக்கலாம்.







சாலைகளில்...: பலர் சரியான தடத்தில்தான் செல்கிறோமா என்பதைக்கூட கவனிப்பதில்லை. உரிய இடத்தில் "யூ டர்ன்' செய்ய பலருக்கு சோம்பேறித்தனம். குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட வேகத்தில் செல்வதில்லை. சிவப்பு எரியும் போது நிற்பதில்லை. மஞ்சள் விளக்கு எரியும் போதே சென்று விடுவது. பலர் இண்டிகேட்டரை பயன்படுத்துவதே இல்லை. ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட்கள் பயன்படுத்துபவர்களையே "குற்றவாளிகள்' போல் பார்ப்பது. இரவில் முறையாக ஹெட்லைட் பயன்படுத்தாமல் செல்வது, குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டுவது என்று சாலைப் பயணத்தை மனவேதனைப்படுத்தும் விஷயங்களாக மாற்றியிருக்கிறோம். அதிலிருந்து மாற வேண்டும். சாலையில் நடந்து செல்லும் போது கூட, மொபைல் பேசக்கூடாது. அது பெரிய ஆபத்தில் முடியும். அதேபோல் சாலை ஓரங்களில் சிறுநீர் கழித்தல், அசுத்தம் செய்வது அப்பகுதியை நோய்க்கிருமிகளின் கிடங்காக மாற்றுவதோடு, அதன் வழியே சென்றுவரும் பயணிகளுக்கு "இலவசமாக' அந்த இடம் நோய்களை வழங்கத் தொடங்கிவிடும்.







நடத்தைகளில்...: காரணமே இல்லாமல் கோபப்படுவோரை பார்த்திருக்கிறோம். சில்லரை கேட்கும் பயணியிடம் பஸ் கண்டக்டர் எரிந்து விழு தல், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடம் தவறாக நடத்தல், தகவல் கேட்கும் பொதுமக்களிடம் அதிகாரிகள் கோபம் காட்டுவது, நியாயமான தொகையை சொல்லும் பயணியிடம் ஆட்டோக்காரர்கள் காட்டும் கோபம் என்று எதற்கு கோபப்படுவோரை நாம் சாதாரணமாக பார்க்கலாம். மற்றவர்களுடன் எதற்கெடுத்தாலும் வில்லங்கம் பேசும் பண்பு, சண்டைக்குப் போகும் குணம் மாற வேண்டும். இன்றும் பலர் ஜாதி, மத வேறுபாடுகளை மனதுக்குள் சுமந்து கொண்டிருக்கிறார்கள். சமுதாயம் என்பது ஒருவருக்கு ஒருவர் சார்ந்து இருப்பது. மற்றவர்கள் மீது நம்பிக்கை இல்லாத நிலை இப்போது உருவாகி வருகிறது என்றே கூற முடியும்.







பஸ், ரயில், விமானப் பயணங்கள் சில நேரங்களில் நம்பும்படியாக இல்லை. நாம் நமது நாட்டின் தலைசிறந்த தலைவர்கள் மற்றும் அவர்கள் நடந்த வழி ஆகியவற்றை பின்பற்றி நமது நல் ஒழுக்கங்களை அமைத்துக் கொள்ள வேண்டும். இந்தியாவில் உள்ள இன்னொரு பிரச்னை, வரிசையை தவிர்ப்பது. மேலைநாடுகளில் பொதுவாக, நான்கு பேர் கூடினால் கூட, அவர்களாக வரிசை அமைத்துக் கொள்வார்கள். ஆனால் இங்கு கோயில் திருவிழா அல்லது பஸ் ஸ்டாண்டில் உள்ள கூட்டத்தினருக்கு வரிசை அமைக்க போலீசார்வரவேண்டியிருக்கிறது. மக்கள் தொகை அதிகமுள்ள நம் நாட்டில், வரிசை என்பது மிக முக்கியம். இல்லாவிட்டால், முதலில் வந்தவர் கடைசியில் கூட அவருக்குரியதை பெற முடியாமல் போய்விடும். வரிசையில் செல்வோருக்கு இடையில் புகுந்துவிடுவது. வரிசையில் தெரிந்தவர் இருந்தால் அவர் தலையில் தனது சுமையைக் கட்டுவது.







மதித்து நடத்தல்...: வயதானோர், பெண்கள், குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளை மதித்து நடக்க வேண்டும். அவர்களுக்கு உரிய இருக்கை மற்றும் வரிசையில் இடம் ஆகியவற்றை அளிக்க வேண்டும்.







வர்த்தகத்தில்...: சரியான பொருளுக்கு உரிய விலை நிர்ணயித்துள்ளோமா?. பொருள் தரமானதுதானா? உபயோகிப்பாளரிடம் உரிய முறையில் நடந்து கொள்கிறோமா? விற்பனையாகும் பொருள் சுற்றுச்சூழலுக்கு ஏற்றதுதானா? என்பதை யோசித்துக் கொள்ள வேண்டும். இந்த நாட்டின் சுதந்திரம் நமக்கு மட்டுமல்ல... எல்லோருக்கும்தான் என்ற உணர்வு ஏற்பட்டால்தான் உண்மையான சுதந்திரத்தின் சுவாசத்தை எல்லோரும் அனுபவிக்கமுடியும்.

0 கருத்துகள்: