தமிழருவி மணியன் தலைமையில் இயங்கி வரும் காந்திய அரசியல் இயக்கம், காந்திய மக்கள் இயக்கமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
காந்திய மக்கள் இயக்கத்தின் துவக்க விழா திருப்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இயக்கத்தின் தலைவராக தமிழருவி மணியனும், மாநில துணைத் தலைவர்களாக நாமக்கல் நரசிம்மன், ஓ.கே.எஸ்.கந்தசாமி, மாநில பொதுச் செயலராக வழக்கறிஞர் துறையூர் கணேசன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இப்புதிய இயக்கம் குறித்து தமிழருவி மணியன் செய்தியாளர்களிடம் கூறியது: சென்னையில் கடந்த 2009-ம் ஆண்டு அக்டோபர் 2ல் துவங்கப்பட்ட காந்திய அரசியல் இயக்கம் மதுரை, திருச்சி, நாமக்கல் மாவட்டங்களிலும் ஏற்படுத்தப்பட்டது.
இந்த இயக்கம் அரசியல் கட்சியைப்போல் தெரிவதால் காந்திய மக்கள் இயக்கம் எனப் பெயர் மாற்றம் செய்து திருப்பூரில் துவங்கப்பட்டுள்ளது.
தனிப்பட்ட எந்தக் கட்சிக்கும் ஆதரவாகவோ, எதிராகவோ இந்த இயக்கம் செயல்படாது. மாறாக, ஊழல், ஆடம்பர அரசியல், அதிகார துஷ்பிரயோகத்துக்கு எதிராகத் தொடர்ந்து செயல்படும். அரசியல் களத்துக்கு வெளியே நின்று அரசியல்வாதிகள் மற்றும் ஆட்சியில் அமரும் கட்சியின் தவறுகளை விமர்சிப்பதும், அவற்றுக்கு எதிராக மக்களின் சக்தியை திரட்டுவதுமே இந்த இயக்கத்தின் நோக்கம். இந்த இயக்கத்தில் எந்த கட்சியைச் சேர்ந்தவர்களும் உறுப்பினராகலாம். ஆனால், எந்தக் கட்சியையும் சாராதவர்களே பொறுப்புக்கு வர முடியும்.
ஆனால், காந்தியின் கனவும், நேருவின் நோக்கமும் இன்றுவரை நிறைவேறவில்லை.அதிகாரப் பரவலும், கிராமம் சார்ந்த சிறு மற்றும் குடிசைத் தொழில், தற்சார்பு பொருளாதாரமுமே காந்தியின் லட்சியமாக இருந்தது.
ஆனால், காந்தியின் வாரிசுகளாக ஆட்சிக்கு வந்தோர் அதிகாரக் குவியல், பெருந்தொழில் உற்பத்தி என்ற தவறான பாதையில் நாட்டை திசை திருப்பியதால் இப்போது நாட்டிலுள்ள கோடிக்கணக்கான மக்கள் வறுமையில் வாடுகின்றனர் என்றார் அவர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக