கல்வி விழிப்புணர்வு ஏற்படவேண்டும் என்பதற்காக இந்த கட்டுரை மீண்டும் பதியப்படுகிறது
இக்கட்டுரையை படிக்க இருக்கும் சகோதர, சகோதரிகளுக்கும், மாணவச் செல்வங்களுக்கும் மற்றும் இளையவர்கத்தினருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்.
நமதூரில் 90% சதவிகிதத்திற்கும் மேல் அனைத்து தரப்பு மக்களும் அவர்கள் எழையாக இருக்கட்டும், நடுத்தர வர்க்கமாக இருக்கட்டும் அல்லது வசதிபடைத்தவர்களாக இருக்கட்டும் நாம் யாவரும் ஒன்றில் மட்டும் பாகுபாடு இல்லாமல் ஒன்றுபட்டுள்ளோம். அது என்னவெனில் நம் பிள்ளைகள் நன்கு படித்து இருந்தாலும், அரைகுறையாக அல்லது முற்றிலும் படிக்காதவர்களாக இருந்தாலும் பரவாயில்லை. அவர்களை எப்படியாவது கடன், உடன் வாங்கியாவது அயல் நாட்டிற்கு அது எந்த நாடாக இருந்தாலும் சரி எப்படியாவது முயற்சி செய்து அவர்களை அனுப்பி வைத்து குடும்பத்தின் அனைத்து சுமைகளையும், பொறுப்புகளையும் அவர்கள் தலையில் கட்டிவிடுவதில் தான். காலமெல்லாம் நாம் இப்படி சரிவர படிக்காமல் அயல் நாட்டிற்கு வந்து சாதாரன உழைப்பாளிகளாய், கூலித்தொழிலாளிகளாய், ஹோட்டல்களில் சர்வர்களாய், சித்தாள், கொத்தனார் வேலைகளெல்லாம் பார்த்தது போதும் இனியாவது நம் இளைய தலைமுறையினருக்கு முறையான கல்வி புகட்டுவதில் நாம் ஆர்வம் செலுத்த கடமைப் பட்டுள்ளோம்.
இக்காலத்தில் ஆங்கிலக் கல்வி என்பது அனைவருக்கும் வயது வித்தியாசமில்லாமல், பணக்கார எழை என்ற பாகுபாடு இல்லாமல் நம் அனைவருக்கும் அத்தியாவசியமான ஒன்றாக இருக்கிறது. இதில் நாம் அலட்சியம் காட்டுவதால் எவ்வித பலனும் கிடைக்கப்போவதில்லை நஷ்டத்தை தவிர. ஆங்கிலக் கல்வி அதிகம் படிப்பதற்கு நம் மார்க்கம் எவ்விதத்திலும் தடையாக இருக்கவில்லை. மார்க்கக் கல்வியுடன் ஆங்கிலப் புலமை இருப்பதால் டாக்டர் ஜாக்கிர் நாயக் போன்றோர்களெல்லாம் எப்படி தன் திறமையின் மூலம் இஸ்லாத்தை இந்தியாவிற்குள் மட்டுமல்ல உலகத்திற்கே எத்திவைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஒரு காலத்திலெல்லாம் வாழ்க்கைச் சக்கரத்தை ஓட்ட பத்தாம் வகுப்பு வரை படித்திருந்தால் போதும் என்றார்கள், பிறகு பன்னிரண்டாம் வகுப்பு வரை அவசியம் என்றார்கள். அதுவே இன்று குறைந்தது ஒரு முதுகலைப் பட்டமாவது ஒவ்வொருவருக்கும் அவசியம் இருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது காலத்தின் கட்டாயத்தால். ஆங்கிலத்தின் அத்தியாவசியத்தை நம் இளைஞர்கள், குறிப்பாக அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா நாடுகள் சென்று வந்த, இன்னும் இருந்து வேலை செய்து கொண்டிருப்பவர்களைக் கேட்டால் மிகவும் விளங்கும்.
ஆஸ்திரேலியா, அமெரிக்க நாடுகளை விடுங்கள். குறிப்பாக தமிழகத்தின் தலைநகராம் சென்னையிலேயே ஒரு தொழிலை தொடங்கினாலோ அல்லது ஒரு நிறுவனத்திற்கு பணிக்குச் சென்றாலோ ஆங்கில அறிவு இல்லையேல் மிகவும் அதாவது சொல்லயியலாத்துயரத்தை சந்திக்க நேரிடுகிறது. காலச் சூழ்நிலையால் நம் குழந்தைகளை சென்னையில் உள்ள பள்ளியில் சேர்க்க வேண்டிய நிலை ஏற்பட்டால் பள்ளியில் சேர இருக்கும் குழந்தைக்கு முன் அதன் பெற்றோர்களுக்குத்தான் ஆங்கில அறிவு பரிசோதனை பள்ளி நிர்வாகத்தால் நடத்தப் படுகிறது. (இது என் அனுபவத்தில் இருந்து எழுதுகிறேன்.)
ஒருவன் தன் மனைவி மக்களுடன் அயல்நாட்டில் சந்தோசமாக பொழுதைக் கழிக்கிறான் என்பதை பார்த்து நமக்கெல்லாம் முதலில் பொறாமைதான் வருகிறது. அந்த நிலைக்கு அவனைக் கொண்டு வந்தது எது? என நாம் சிந்திக்க மறந்து விடுகிறோம். நிச்சயம் அது அவன் படித்த முறையான கல்வியாகத்தான் இருக்க முடியும். அதுவும் குறிப்பாக அவன் பயின்ற ஆங்கிலக் கல்வியாகத்தான் அது இருக்கும்.
உலகில் இன்று சாதாரன மனிதர்களெல்லாம் தங்களின் சாதனைகளாலும், தன்னிகரில்லாத்திறமையாலும் புகழின் உச்சிக்கே செல்வதற்கெல்லாம் அடிப்படை பக்கபலமாக அவர்களுக்கு இருந்து கை கொடுப்பது நிச்சயம் அவர்கள் பெற்றிருக்கும் ஆங்கில மொழி அறிவு தான்.
நம் சமுதாய மக்களுக்கு உலக வாழ்க்கையும் (இம்மை) இல்லை; மறு உலக வாழ்க்கையும் (மறுமை) இல்லை என்ற சூழ்நிலை எக்காலத்திலும் ஏற்பட்டுவிடக் கூடாது.
உதாரணத்திற்காக இங்கு ஒன்று கூற விரும்புகிறேன். ஆங்கிலம் பேசும் நாட்டில் வேலை செய்யும் நமதூரைச் சேர்ந்த ஒருவன் சூழ்நிலையால் நம் மக்களிடமிருந்து தனிமைப் படுத்தப் படுகிறான் என்று வைத்துக் கொள்வோம். அவனுக்கு இரவிலோ அல்லது பகலிலோ ஏற்படும் பிரச்சினைகள், விபத்துக்கள் அல்லது ஏதேனும் விபரீதங்கள் பற்றி அவன் தன் முதலாளியிடமோ அல்லது கூட பணியாற்றும் சக ஊழியனிடமோ எப்படி? எந்த மொழியில் அவன் முறையிடுவான்? ஆங்கில மொழி அறிவு இல்லாததால் அவன் உயிருக்கே ஆபத்து வரலாம். அந்த சூழ்நிலையில் அவன் அங்கு தன் வாய் இருந்தும் ஊமையனாய், இரு கண் இருந்தும் குருடனாய், காதிருந்தும் செவிடனாய் தான் இருக்க முடியும் ஆங்கில மொழி அறிவு இல்லாததால் இந்த அவல நிலைக்கு நாம் தள்ளப்படுகிறோம்.
ஒரு சமயம் சென்னையில் படித்து வருட விடுமுறையில் நம்மூருக்கு வரும் பணக்காரர்களின் பிள்ளைகள் மட்டும் சரளமாக ஒருவருக்கொருவர் ஆங்கிலத்தில் உரையாடிக்கொள்வார்கள். அதை பட்டிக்காட்டான் மிட்டாய் கடையைப் பார்ப்பது போல் நான் சிறுவனாக இருக்கும் பொழுது பார்த்திருக்கிறேன்.
என்னடா எங்கு பார்த்தாலும் ஆங்கிலம், ஆங்கிலம் என்கிறார்களே??? ஆங்கிலம் அதிகம் படித்தவனெல்லாம் பெரிய டாட்டா, பிர்லா போன்றும், லட்சுமி மிட்டல் அல்லது முகேஷ் அம்பானி போன்றும் பெரிய,பெரிய தொழில் அதிபர்களாகி இந்தியாவின் தலையெழுத்தையா மாற்றப் போகிறார்கள்??? என்று பலர் கேட்பது காதில் விழுகிறது. ஆங்கிலம் அதிகம் கற்றுக் கொள்வதால் நாம் அவர்களைப் போல் ஆகா விட்டாலும், குறைந்தது நம் குடும்ப வாழ்க்கைச் சக்கரமாவது சிக்குண்டு நின்றுவிடாமல் தடையின்றி தொடர்ந்து ஓடிட உதவிடும் அல்லவா?? இன்று ஆங்கில மொழி அறிவை வளர்க்க பல்வேறு வழிகளில் மற்றும் முறைகளில் எளிய பாடத்திட்டங்களின் மூலம், கம்ப்யூட்டர் மூலம், கைப் புத்தகங்களின் மூலம் பல இடங்களில் பயிற்று விக்கப் பட்டு வருகின்றன. அதில் ஏதாவது ஒரு எளிய முறையைக் கடைப் பிடித்து நாம் நம் ஆங்கில அறிவை வளர்ப்போம்.
எனவே நம் ஆங்கில கல்வி அறிவை வளர்க்கும் ஒரு பகுதியாக நமதூர் மக்களின் (உள்ளங்களின்) இணைப்புப் பாலமாய் விளங்கும் இந்த அதிரை எக்ஸ்பிரஸ் இணைய தளத்தின் மூலம் துபாயில் பணிபுரிந்து வரும் நமதூர் சகோதரர். அப்துல் ராஜிக் அவர்கள் நம் மக்களுக்கு எளிய முறையில் தமிழ் வழி ஆங்கிலக் கல்வியை இப்பகுதியில் படிப்படியே வழங்க ஆர்வமுடன் முன் வந்துள்ளார்கள். அவர்களின் ஆலோசனைப் படி அதிரை எக்ஸ்பிரஸ் அதற்கு முயற்சி எடுத்து இப்பகுதியில் சிறுக, சிறுக வழங்கினால் அது படிக்கும் நம் அனைவருக்கும் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் என நம்புகிறேன். ஆங்கில மொழி அறிவை வளர்க்க மேலே சொல்லப் பட்டக் கருத்துக்களும், உதாரணங்களும் இதைப் படிக்கும் உங்களுக்கு மட்டுமல்ல இதை எழுதிய எனக்கும் சேர்த்துத்தான் எழுதியுள்ளேன்.
எனவே தராசின் இரு தட்டுக்களைப் போல் மார்க்க மற்றும் ஆங்கில மொழி அறிவை வளர்த்து நாம் இம்மையிலும், மறுமையிலும் எல்லா வளங்களும் பெற்று செழிப்புடன் வாழ வல்ல இறைவனைப் பிராத்தித்து என் கட்டுரையை நிறைவு செய்கின்றேன்.
புதன், 18 ஆகஸ்ட், 2010
இன்றைய உலகில்(இணையத்தில் படித்தது)
7:45 PM
No comments
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக