திங்கள், 27 டிசம்பர், 2010

ஆப்பரா 11 வெளியானது

இறுதிச் சோதனைப் பதிப்பு வெளியாகிச் சில காலமே ஆன நிலையில் தன் ஆப்பரா பதிப்பு 11 ஐ ஆப்பரா சாப்ட்வேர் நிறுவனம் மக்கள் பயன்பாட்டிற்கு வெளியிட்டுள்ளது. சோதனைப் பதிப்பு வரத்தொடங்கிய இரண்டு மாதத்திற்குள் இறுதிப் பதிப்பு வெளியானது ஒரு சாதனைதான். மொஸில்லா தன் பயர்பாக்ஸ் பதிப்பு 4ன் வெளியீட்டுப் பதிப்பைக் கொண்டு வர இன்னும் தயங்கிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. பிரவுசர் சந்தையில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர், பயர்பாக்ஸ், குரோம் மற்றும் சபாரி மட்டுமே முன்னணியில் இயங்கிக் கொண்டிருக்கும் நிலையில், பல்வேறு புதிய அம்சங்களுடன், ஆப்பரா 11 இறங்கி, இந்த பிரவுசர் யுத்தத்தில் புதிய கோணத்தைக் காட்டியுள்ளது.
ஆப்பரா சாப்ட்வேர் நிறுவனத்திற்கு ஆப்பரா பதிப்பு 11 ஒரு புதிய மைல்கல்லாகும். ஏற்கனவே இருந்த பிரவுசரில் பல புதிய வசதிகள் தரப்பட்டிருந்தன. இந்த புதிய பதிப்பில் இன்னும் பல கூடுதல் அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அவற்றை இங்கு காணலாம்.
எக்ஸ்டன்ஷன் எளிது: இதில் புதியதாகத் தரப்பட்டுள்ள வசதியைப் பயன்படுத்தி, எச்.டி.எம்.எல்., சி.எஸ்.எஸ். மற்றும் ஜாவா ஸ்கிரிப்ட் ஆகியவற்றின் அடிப்படையில் புதிய எக்ஸ்டென்ஷன்களை எளிதாக இந்த பிரவுசருக்கென உருவாக்கலாம். இவை குரோம் பிரவுசரில் உள்ளதைப் போல, அமைதியாக, பின்னணியில் இயங்குபவை. சில மட்டுமே யூசர் இன்டர்பேஸ் மூலம் பட்டன் மூலம் காட்டப்படுபவை. ஏற்கனவே இந்த பிரவுசருக்கென 200க்கும் மேற்பட்ட எக்ஸ்டன்ஷன்கள் கிடைக்கின்றன. புதிய வசதி மூலம், இன்னும் நிறைய எக்ஸ்டன்ஷன்களை எதிர்பார்க்கலாம். ஏற்கனவே உள்ளவற்றில், விளம்பரங்களைத் தடை செய்திடும் வசதி மற்றும் யு-ட்யூப் வீடியோ டவுண்லோடர் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
டேப்களை அடுக்குதல்: தொடர்ந்து இணையத்தைப் பயன்படுத்தி வருபவர்களுக்கு, டேப் வசதி தொல்லை தருவதாகவே உள்ளது. ஏனென்றால், அதிக எண்ணிக்கையில் தளங்களைத் திறந்து வைத்து இயக்குகையில், அவற்றைக் காட்டும் டேப்கள் குறுகிச் சிறியதாகி, மறைந்து நம் இணைய தளத்தேடலை சிரமப்படுத்துகின்றன. இந்தப் பிரச்னையை டேப் ஸ்டேக்கிங் (Tab Stacking) என்னும் புதிய வசதி மூலம் ஆப்பரா தீர்த்து வைக்கிறது. இதன் மூலம் தளங்களுக்கான டேப்களை நம் விருப்பப்படி இழுத்து வந்து குழுவாக அமைத்து வைக்கலாம்.
மவுஸ் அசைவில் புதிய செயல்பாடுகள்: ஆப்பரா பிரவுசர் மவுஸ் அசைவுகளின் அடிப்படையில் பல செயல்பாடுகளை மேற்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது பலருக்குத் தெரியாது. இதன் மூலம் புதிய டேப்பில் தளங்களைத் திறக்கலாம்; மீண்டும் ரீ லோட் செய்திடலாம்; நிறுத்தலாம்; டேப்களை மூடலாம். இந்த வசதிகள் குறித்து அறிந்து நாம் செயல்படத் தொடங்கிவிட்டால், இந்த பழக்கத்திற்கு அடிமை ஆகிவிடுவோம். இதனை அறிய ஆப்பரா செட் செய்திடும் கான்பிகர் பகுதியில் மவுஸ் ஜெஸ்ச்சர் என்ற பிரிவினைக் காணவும்.
பாதுகாப்பான அட்ரஸ் பார்: நம்மைச் சிக்க வைத்திடும் இணையதளங்களின் முகவரிகளை எளிதாக அறிந்து கொள்ளும் வகையில், அட்ரஸ் பாரில், இணைய தளங்களின் முதன்மைப் பெயரை ஹைலைட் செய்து ஆப்பரா அமைக்கிறது. இது ஹைலைட் செய்யப்படுவதால், ஓரிரு எழுத்து வித்தியாசத்தில் உண்மைத் தளங்களைப் போலக் காட்டப்படும் தளங்களை நாம் எளிதில் அறிந்து விலகி விடலாம். அது மட்டுமின்றி, நாம் செல்லும் இணைய தளங்களின் பாதுகாப்பு குறித்தும் நமக்கு தகவல் காட்டப்படுகிறது. தேவைப்படுகையில் ப்ளக் இன்: இந்த புதிய பதிப்பில், நமக்குத் தேவைப்படும்போது மட்டும் ப்ளக் இன் புரோகிராம்களை இணைக்கும் வசதி தரப்பட்டுள்ளது. இதனால், பிளாஷ் மற்றும் சில்வர் லைட் போன்றவற்றை நமக்குத் தேவைப்படும்போது மற்றும் இறக்கி இணைத்துக் கொள்ளலாம்.
மற்ற வசதிகள்: அட்ரஸ் பாரில் பின் செய்யப்பட்ட டேப்கள், சிறியதாக இடது பக்கம் ஒதுக்கப்படுகின்றன. கூகுள் தற்போது குறிப்பாய்க் காட்டும் (Google Suggest) தளங்களுக்கான சப்போர்ட் இணைக்கப்பட்டுள்ளது. விண்டோஸ், யூனிக்ஸ் மற்றும் மேக் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுக்கென தனித்தனியான பிரவுசர்களை http://www.opera.com%20/என்ற முகவரியிலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்தப் புதிய பதிப்பு11 வெளியான முதல் நாளிலேயே 67 லட்சம் பேர் இதனை டவுண்லோட் செய்துள்ளதாக, ஆப்பரா அறிவித்துள்ளது. முந்தைய பதிப்பு 10 வெளியான போது 17 லட்சம் பேர் ஒரு நாளில் தரவிறக்கம் செய்தனர். ஏற்கனவே ஆப்பரா பதிப்பினை 5 கோடி பேர் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. புதிதாக தரவிறக்கம் செய்தவர்களில், 53% பேர் ஏற்கனவே பயர்பாக்ஸ் பிரவுசரையும், 43% பேர் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரையும் பயன்படுத்தி வந்தவர்கள் என்பதுவும் ஒரு செய்தியாகும்.

0 கருத்துகள்: