புதன், 29 டிசம்பர், 2010

இந்தியாவின் மிகப்பெரிய வங்கி மோச‌டி

புதுடில்லி: மிகப் பெரிய அளவிலான ஒரு வங்கி மோசடி ஒன்று அரியானா மாநிலம் குர்கானில் நடந்துள்ளது. அங்குள்ள சிட்டி வங்கியில் பணியாற்றும் ஊழியர் ஒருவர், பல்வேறு வங்கிக் கணக்குகளிலிருந்து ரூ. 400 கோடியை தனது பெயருக்கு மாற்றி பெரும் மோசடியில் ஈடுபட்டுள்ளார். மொத்தம் 20 கணக்குகளிலிருந்து பணத்தை எடுத்து அவர் இந்த மோசடியைச் செய்துள்ளார். இதுதொடர்பாக சிட்டி வங்கி சார்பில் போலீஸில் புகார் தரப்பட்டுள்ளது. போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இதுகுறித்து சிட்டி வங்கி செய்தித் தொடர்பாளர் வெளியி்ட்டுள்ள அறிக்கையில், குர்கான் கிளையில் சில கணக்குகளில் முறைகேடாக பணம் எடுக்கப்பட்டிருப்பது குறித்து புகார் வந்ததும் நாங்கள் விசாரணையைத் தொடங்கினோம். அதில்தான் இந்த நிதி மோசடி குறித்த விவரம் தெரிய வந்தது. சிவராஜ் பாட்டீல் என்ற ஊழியர்தான் இதைச் செய்ததாக கண்டுபிடித்துள்ளோம். பல்வேறு வாடிக்கையாளர்களை அணுகி கவர்ச்சிகரமான திட்டங்கள் இருப்பதாக கூறி முதலீடு செய்ய வைத்து அந்தப் பணத்தையெல்லாம் இவர் சுருட்டியுள்ளார். அநத்ப் பணத்தை எடுத்து வேறு சில கணக்குகளுக்கு மாற்றி மோசடி செய்துள்ளார். இப்படியாக 20 வாடிக்கையாளர்களிடமிருந்து ரூ. 400 கோடி வரை சுருட்டியுள்ளதை கண்டுபிடித்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார். சிட்டி வங்கியின் அறிவிப்புகள் என்று கூறி மோசடியான திட்ட அறிவிப்புகளை இவரே அச்சிட்டு அதை வாடிக்கையாளர்களிடம் காண்பித்து முதலீடு செய்யத் தூண்டியுள்ளதும் தெரிய வந்துள்ளது. மேலும் செபியின் நோட்டீஸைப் போல போலியான ஒன்றையும் தயாரித்து இவர் வாடிக்கையாளர்களை ஏமாற்றிப் பணம் கறந்துள்ளார். தற்போது இந்த வழக்கை குர்கான் போலீசார் விசாரித்து வருகின்றனர். 420, 467, 468 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

0 கருத்துகள்: