திங்கள், 27 டிசம்பர், 2010

ராமநாதபுரம் அருகே கோர சம்பவம் ; படகில் தீவுக்கு சுற்றிப்பார்க்க சென்ற 20 பேர் மூழ்கினர்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் முள்ளித்தீவு அருகே நாட்டுப்படகில் தீவு பகுதிகளை சுற்றிப்பார்க்க சென்ற குடும்ப உறவினர்கள் 20 க்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கினர். 13 பேர் உடல்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளன. இறந்தவர்கள் 20 பேர் வரை இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

ராமநாதபுரம் அருகே உள்ள பெரியப்பட்டணத்தை சேர்ந்த குத்தூஸ் ஆலின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் இன்று அதிகாலையில் 2 நாட்டுப்படகு மூலம் அப்பாத்தீவு மற்றும் மாலைத்தீவுக்கு சென்று சுற்றிப்பார்க்க புறப்பட்டனர். இந்த படகில் உயிர்காக்க உதவும் லைப் ஜாக்கெட் எதுவும் இல்லை. மன்னார் வளைகுடா , முள்ளித்தீவு அருகே சென்ற போது ஒரு படகு மூழ்கும் அபாயம் ஏற்பட்டது. இதனையடுத்து நீரில் குதித்தவர்கள் அருகில் வந்த படகில் தொற்றியுள்னர்.

இதனையடுத்து இரண்டு படகுகளும் தண்ணீரில் தள்ளாடி மூழ்க துவங்கியது. ஒரு படகு முற்றிலுமாக மூழ்கி விட்டது. தகவல் அறிந்த உறவினர்கள் மற்றொரு படகு மூலம் கடல் நோக்கி புறப்பட்டனர். கடலோர காவல்படையினர் மற்றும் விமான படையினர் அங்கு விரைந்தனர். விமான படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்றும் உச்சிப்புளியில் இருந்து சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. மீட்பு பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

படகில் 40 பேர் வரை சென்றிருக்கலாம் என அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இது வரை 13 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. பலியானவர்களில் பெண்கள், குழந்தைகள் அதிகம் அடங்குவர். இன்னும் பலரது நிலைமை குறித்து முழு விவரம் அறியப்படவில்லை. கடலில் மூழ்கியவர்களை தேடும் பணி தொடர்ந்து வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தை பொறுத்தவரையில் வெளிநாடுகளில் இருக்கும் உறவினர்கள் டிசம்பர் மாதம் சொந்த ஊருக்கு வருவது வழக்கம். இவ்வாறு ஆஸ்திரேலியா , துபாய், உள்ளிட்ட நாடுகளில் இருந்து பெரியப்பட்டணத்திற்கு வந்தவர்கள் அப்பாத்தீவுக்கு கிளம்பியுள்ளனர். குறிப்பாக இது போன்ற தீவுக்கு செல்ல முறையான அனுமதி வாங்க வேண்டும். ஆனால் படகில் சென்றவர்கள் எவ்வித அனுமதியும் பெறவில்லை என்று தெரியவருகிறது.

0 கருத்துகள்: