திங்கள், 27 டிசம்பர், 2010

அரசியல்வாதிகளை கொலைசெய்யும் மந்திர வழிகள்



   ந்திரங்களால் நன்மை தான் விளையும் எனும்போது அதை வைத்து தீமையும் நடக்கிறதே அது எப்படி சாத்தியம்?  ஒரே மந்திரம் நன்மை, தீமை இரண்டையும் செய்யுமா அல்லது இரண்டுக்கும் வேறுவேறு மந்திரங்கள் உண்டா? என்று பலர் என்னிடம் கேட்கிறார்கள் கேட்காதவர்களும் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள்


சத்தம் என்பது ஒன்று தான்.  அதை இலக்கணப்படி நெறி படுத்தும் போது சங்கீதமாகிறது.  கட்டுபாட்டை மீறும் போது சந்தைகடை சத்தமாகிறது.  மந்திரங்களும் அப்படி தான்.  வரையறைக்குள் திட்டமிட்டு செயல்படுத்தினால் நன்மைகளை தரும்.  திட்டமிடாத செயலுக்கு கொண்டு வந்தால் எதிர்விளைவுகளைத் தான் தரும். 






    உதாரணமாக காயத்ரி மந்திரத்தை எடுத்து கொள்வோம்.  அதை உச்சாடனம் செய்வதற்கு சில நியமங்கள் உண்டு.  அந்த நியமனப்படி செய்யும் போது தான் அறிவு தெளிவை அது தரும்.  மனம் போன போக்கில் அதை உச்சரித்தால் அறிவும் தெளியாது.  மனமும் மகிழாது.


  காயத்ரி மந்திரம் போன்றவைகளை தவறுதலாக உச்சரித்தால் நன்மை மட்டும் தான் ஏற்படாது.  அதனால் விளைய கூடிய தீமைகள் என்று எதுவும் இல்லை.  ஆனால் வேறு சில மந்திரங்கள் இருக்கின்றன.  அவைகளை சிறிது தவறாக உச்சரித்தாலே அப்படி செய்பவனுக்கு பல விபரீதங்கள் ஏற்படும்.


 கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் என்ற வரிசையில் சண்டி ஹோமம் என்பதை கேள்விபட்டிருப்பீர்கள்.  இதற்கு உச்சரிக்க கூடிய மந்திரங்கள் மிக கடினமானவைகள், தீவிர மன ஈடுபாட்டோடு மட்டுமே செய்யக் கூடிய புனிதம் மிக்கவைகள் இந்த மந்திரங்களை கவன தடுமாற்றத்தாலோ ஞாபக மறதியாலோ தவறுதலாக உச்சரித்து விட்டோம் என்றால் குறிப்பிட்ட வேத சாஸ்திரியை பதம் பார்த்து விடும். 


     இதனாலே பல வேத பண்டிதர்கள் சண்டி ஹோமம் செய்ய ஒத்து கொள்ள மாட்டார்கள்.  அப்படியே ஒத்து கொண்டு வருகிற சிலர் வெறுமனே ஸ்ரீ சூத்தகம், துர்கா சூத்தகம், மேதா சூத்தகம் போன்ற சூத்தகங்களை சொல்லி ஹோமத்தை முடித்து கொள்வார்கள்.  பலருக்கு ஹோமங்களை பற்றிய விவரங்கள் முழுமையாக தெரியாது என்பதினால் இப்படிப்பட்ட பண்டிதர்களின் வண்டி கனஜோராக ஓடிக்கொண்டிருக்கிறது.  ஆனால் உண்மையில் சண்டி ஹோமம் முறைபடி செய்யபவர்கள் மிக குறைவு.  இதற்கு காரணம் மந்திரத்தின் வலுவே ஆகும்.  கேட்ட வரத்தை தரும் இந்த மந்திரம் தவறாக சொன்னால் கெட்ட வரத்தை கூட அல்ல சொன்னவனையே இல்லாமல் செய்துவிடும்.


  இது தவிர தீமைகளை நிகழ்த்துவதற்கென்றே பல மந்திரங்கள் உள்ளன.  இவைகள் அதர்வண வேதத்தில் நிறைய இருக்கிறது.  இருட்டும் வெளிச்சமும் கலந்தது தான் உலகம் என்பது போல் அயன வெளியில் நல்லதும் கெட்டதுமாக பல மந்திர அதிர்வுகள் சஞ்சரித்த வண்ணமே உள்ளன.  உள்ளொளி பெற்ற வேதகால ரிஷிகள் அவைகளை கிரகித்து தரவாரியாக தொகுத்து வைத்துள்ளனர்.  அத்தகைய மந்திரங்களால் ஊரை கொளுத்தலாம், நீர் நிலைகளை விஷமாக்கலாம் பயிர் பச்சகளை காய்ந்து போக செய்யலாம், மனிதர்களை கொத்து கொத்தாக சாகடிக்கலாம்.


  அமைதியான வாழ்க்கைக்கு வழி தேட வேண்டிய ரிஷிகள் அறிவு சக்தியை நாடியது ஏன் என்று கேட்கலாம்.  இந்த உலகத்தின் இயக்கமே நன்மைக்கும் தீமைக்கும் நடக்கும் போராட்டம் தான்.  தீமைகளை ஒழித்து கட்ட நன்மை ஆயுதம் ஏந்தியாக வேண்டும்.  தக்க நேரத்தில் ஆயுதம் ஏந்த மறுத்தால் மடிந்து மண்ணோடு மண்ணாக மக்கி போக வேண்டிய நிலைவரும்.  அந்த நிலையிலிருந்து தன்னை தற்காத்து கொள்வதற்கு தான் நன்மைக்கு ஆயுதம் வேண்டும்.  அத்தகைய ஆயுதம் தான் அதர்வண வேத மந்திரங்கள், அரக்கனை வெட்டி பிளக்க உருவாக்கப்பட்ட கோடாரி அரக்கன் கையிலேயே கிடைத்துவிட்டது போல பல சமயங்களில் இந்த மந்திரங்கள் தீயவர்களின் கையில் அகப்பட்டு கொண்டு திண்டாடுகிறது.


 மந்திர மாயங்களை உண்மையில்லை வெற்று மூட நம்பிக்கைகள் அவைகள் என சொல்பவர்கள் முக்கியமான ஒரு கேள்வியை கேட்கிறார்கள்.  சூன்யம் வைத்து ஒரு மனிதனை சாகடிக்க முடியும் என்றால் அரசியல் தலைவர்களை கொலை செய்வதற்கு சிரமப்பட்டு பல திட்டங்களை ஏன் வகுக்க வேண்டும். பேசாமல் ஒரு மந்திரவாதியிடம் பணத்தை கொடுத்து கச்சிதமாக வேலையை முடித்து விடாலாமே? என்பது அந்த கேள்வியாகும்.  இந்த கேள்வி கேட்கப்பட்ட விதம் வேண்டுமென்றால் விதண்டாவாதமாக இருக்கலாமே தவிர கேள்வியே விதண்டாவாதமல்ல.  மிகவும் சரியான தரமான கேள்வியென்றே சொல்லலாம்.  இதற்கு பதில் சொல்ல வேண்டிய கடமை நிச்சயம் நமக்கு உண்டு.


  பொதுவாக நிறைய மனிதர்கள் எனக்கு சூன்யம் வைத்துவிட்டார்கள். அவனை தீய மந்திரங்களை பிரயோகம் செய்து கொன்று விட்டார்கள் என்று பேசுவதை காணலாம்.  ஆனால் அப்படி செத்தவர்களில், பலர், பாதிக்கப்பட்டவர்களில் பலர் உண்மையில் தீய மந்திரங்களால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பே கிடையாது.  காரணம் நாம் நினைப்பது போல யார் மேலே வேண்டுமென்றாலும் மந்திர பிரயோகம் செய்து விட முடியாது.  அப்படி யார் பாதிப்படைவார்கள் என்பதற்கு மந்திர சாஸ்திரத்தில் தனி விதியே இருக்கிறது.


  ஜாதகப்படி சூரியன் உச்சமாகவோ, ஆட்சியாகவோ இருந்து பிறந்த நபர்களையோ, சிம்ம ராசியில் பிறந்தவர்களையோ எந்த தீய மந்திரமும், தீய சக்திகளும் தொட்டு கூட பார்க்க முடியாது.  இது மட்டுமல்ல புர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாம் இடத்துக்கு உரிய கிரகம் நல்ல நிலையில் இருந்தாலும் மந்திரங்களால் பாதிப்படைய முடியாது.  மேலும் வலது கையில் சூரிய வளைவு ரேகை இருப்பவர்களை எத்தகைய மந்திரமும் தீண்டாது.


  தனி மனிதர்களை பாதிப்படைய செய்வதற்கு இத்தனை நெறிமுறைகளை சொல்கிறீர்களே நீங்கள் மந்திரங்களால் ஊரை கொளுத்தலாம், கொத்து கொத்தாக சாகடிக்கலாம் என்றும் சொல்லியுள்ளீர்கள்.  பல தனி மனிதர்களால் ஆனது தானே தேசம்.  பொதுப்படையான பாதிப்பு என்றாலும் அது தனிப்பட்ட மனிதர்களை சார்ந்து தானே நிகழ்கிறது.  எனவே இந்த கூற்று முன்னுக்கு பின் முரணாக தெரிகிறதே என்று சிலர் நினைக்கலாம்.  அது தவறல்ல.  ஆனால் தேசங்களை மந்திரங்களால் சீரழிக்கலாம் எனும் போது அதற்கென்று தனி விதிகள் உள்ளன.


  உதாரணமாக ராமநாத உடையாருக்கு ஜாதகப்படி நூறு வயது, ஆயுள் கண்டம் எதுவுமில்லை என்று வைத்து கொள்வோம்.  அவர் தமது அறுபதாவது வயதில் ஒரு விமான விபத்தில் செத்து போகிறார் என்று வைத்து கொள்ளுங்கள் அல்லது சுனாமி, நிலநடுக்கம், குண்டு வீச்சு இப்படி ஏதோ ஒரு பேரழிவில் இறந்து போகிறார் என்று வைத்து கொள்வோம் அப்போது இவருக்கு கணிக்கப்பட்ட ஜாதகம் பொய்யா? என்று நமக்கு தோன்றும்.  நிச்சயம் அப்படியிருக்க வாய்ப்பு இல்லை.  


  ஒரு பேருந்தில் நாம் பயணம் செய்கிறோம்.  நமது உயிர், உடமை எல்லாவற்றிக்கான முழு பொறுப்பு பேருந்து ஓட்டுநரை தர்மப்படி சார்ந்து விடுகிறது.  அந்த பேருந்தில் பயணம் செய்யும் அத்தனை பயணிகளின் விதியும் ஓட்டுநரின் விதியை சார்ந்தே அமைகிறது.  அப்படி தான் பல விபத்துக்களில் பல உயிர்கள் ஒரே நேரத்தில் போகிறது.  ஒரு பேருந்து ஓட்டுநரின் விதி எப்படி அனைவரின் விதியையும் கட்டுபடுத்துகிறதோ அப்படியே ஒரு நாட்டு மக்களுடைய பொதுவிதி நாட்டு தலைவன் நிலைக்கு மாறுகிறது.  தீய மந்திரங்களால் பாதிப்படைய முடியாத ஒரு தலைவன் நாட்டை ஆளும் போது மந்திர யுத்தங்கள் சாத்தியம் இல்லை.  அவன் வேறுமாதிரி அமைந்துவிட்டால் அது சாத்தியமாகிவிடும் அதன் அடிப்படையில் தான் அன்றும் இன்றும் மந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.


 மேலும் மந்திரங்கள் தங்களது செயல்பாட்டிற்கு அக காரணிகளான நோய்களையும் புற காரணிகளான ஆயுதம்  மற்றும் மனிதனையும் பயன்படுத்தி கொள்கிறது.  ஒரு அரசியல் தலைவரை வீழ்த்துவதற்கு மந்திரங்களை பயன்படுத்தும் போது அது அவரை கொலை செய்வதற்கு திட்டமிட்டு இருக்கும் மற்றொரு கும்பலின் செயலை ஊக்கப்படுத்தி தன் பணியை முடித்து கொள்கிறது.  அல்லது இயற்கையாக நோய்களை உண்டாக்கி காரியங்களை சாதித்து கொள்கிறது. 


  இப்படிப்பட்ட அரசியல் கொலைகள் யுத்தங்கள் இன்றும் நடைபெறுகிறது.  இதை ஆழமாக புரிந்து கொண்டால் தீய மந்திரங்களின் பாதிப்பை தெளிவாக அறிந்து கொள்ளலாம்.  எல்லாவற்றையுமே இல்லை, கிடையாது, முடியாது என்று மறுத்து பழகப்பட்ட பகுத்தறிவுவாதிகள் இக்கருத்துக்களை புரிந்து கொள்வது சற்று கடினம் என்பதினால் நிச்சயம் மறுப்பார்கள் கேலி செய்வார்கள்.  ஆனால் அதைப்பற்றி நமக்கு அக்கறையில்லை.  அதே நேரம் தகவலை மக்களிடம் சொல்ல வேண்டிய கடமையை நாம் செய்தாக வேண்டும்.  நம்புகிறவன் நம்புகிறான்.  நம்பாதவன் போகிறான்.  நாம் நம் வேலையை கவனிப்போம்.
(இக் கட்டுரை இணையத்தில் படித்தது )

0 கருத்துகள்: