சற்றுப் பெரிய ஒர்க்புக் ஒன்றை எக்ஸெல் தொகுப்பில் உருவாக்கி இருப்போம். ஒர்க் ஷீட்டில் செயல்படுகையில், மேலும் கீழும் சென்று வர அல்லது இடது வலதாக செல்களுக்குச் செல்ல, ஸ்குரோல் பாரினைப் பயன்படுத்துகிறோம். இதில் பலருக்கு எரிச்சலூட்டும் நேரங்கள் அமையும். ஒரு வரிசைக்கென ஸ்குரோல் பாரைக் கிளிக் செய்தால் அது ஒரு திரையையே மாற்றிக் காட்டும். பின் பொறுமையாக கீ போர்டு மூலம் நகர்ந்து செல்ல முயற்சிப்போம். இந்த எரிச்சல் அடையாமல், இனிதாக நகர்ந்து செல்ல என்ன வழி என்று பார்ப்போம். இந்த குறிப்புகள் நெட்டு வரிசை மற்றும் கீழாக உள்ள படுக்கை வரிசை ஸ்குரோல்பார்கள் இரண்டிற்கும் பொருந்தும். ஸ்குரோல் பாரின் இறுதியில் உள்ள சிறிய அம்புக் குறியின் மீது சரியாகக் கிளிக் செய்தால் ஒரு வரிசை மேலாக அல்லது கீழாக, நீங்கள் எந்த அம்புக் குறியில் கிளிக் செய்கிறீர்களோ, அதனைப் பொறுத்து ஒர்க் ஷீட் நகரும். திரைக்கேற்ற வகையில் முந்தைய திரை அல்லது அடுத்த திரைக்குச் செல்ல வேண்டும் என்றால் ஸ்குரோல் பாரின் அம்புக் குறி இல்லாமல், அதனை அடுத்து உள்ள இடத்தில் கிளிக் செய்திடுங்கள். இப்போதும், நீங்கள் எந்த ஸ்குரோல் பாரில் எந்த இடத்தில் கிளிக் செய்கிறீர்கள் என்பதனைப் பொறுத்து திரை மாறும். நெட்டு வரிசைக்கான ஸ்குரோல் பாரில் ஸ்குரோல் பாக்ஸிற்குக் கீழாகக் கிளிக் செய்தால் விண்டோ கீழாகச் செல்லும். படுக்கை வரிசைக்கான ஸ்குரோல் பாரில் ஸ்குரோல் பாக்ஸிற்கு வலது புறமாகக் கிளிக் செய்தால் அது வலது புறமாகச் செல்லும். மிகப் பெரிய அளவில் உங்களுக்கு நகர்த்தல் தேவைப்பட்டால் ஸ்குரோல் பாரின் மீது மவுஸின் கர்சரை வைத்துப் பிடித்து அப்படியே நகர்த்துவதுதான் எளிதான ஒன்று.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக