வாழத் தெரியாதவன் வாழுகிற நாட்டில்
ஆளத் தெரியாதவன் ஆளுவான்.
இன்று இந்தியா இப்படித்தான் இருக்கிறது. சொந்த அறிவுள்ள என் அன்பு சொந்தங்களே.... வணக்கம். உங்களில் ஒருவனாய் உங்களுக்காய் பேசுகிறேன். இந்த தேசம் கடந்து வந்தப் பாதையை எண்ணிப் பார்க்கிறேன். 60 ஆண்டுகால சுதந்திர வரலாற்றில் பெரும்பான்மையாய் ஆட்சிப் பீடத்தில் இருந்து வந்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க ஒரு அமைப்பாக காங்கிரஸ் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில், ஆரம்ப காலம் தொட்டே உட்கட்சிப் பூசலுக்கு குறைவிலாத கூட்டம்தான் இங்கே குவிந்திருக்கிறது. திறமையான மனிதர்களைப் பெற்றிருந்தும் திறம்பட செயல்படாமல் போனதேன்....? புரியவில்லை. காங்கிரஸ் ஒரு அதிகார வர்க்கப் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வந்துள்ளது. இன்றும் நடக்கிறது. நேருவுக்குப் பின் சிறந்த சீர்திருத்தவாதிகளை அந்த கட்சி ஏனோ இழந்து விட்டது.
இன்று என்ன நிலையில் நம்மை இந்த கட்சி வைத்திருக்கிறது என்பதற்கு காங்கிரசின் கையாலாகத்தனங்கள் சாட்சியாய் நிற்கின்றன. ஒரு கட்சி என்பது ஆட்சிக்கு வருவதையும், ஆட்சியை தக்க வைத்துக்கொள்வதையும் மட்டுமே நோக்கமாக கொண்டு செயல்படுமேயானால் அந்த கட்சியிடம் தேசியம் சார்ந்த விசயங்களை எதிர்ப்பார்க்க முடியாது. இந்தியாவில் எல்லா கட்சிகளுமே இந்த நிலையில்தான் உள்ளன.
சுதந்திரம் பெற்றதாய் சொல்லிக் கொண்டு இன்னமும் இங்கே மன்னராட்சியைதான் காங்கிரஸ் கடைப் பிடிக்கிறது.
வழிவழியாய் வழித்தோன்றல்கள் மட்டுமே தலைமை ஏற்க வேண்டிய அவசியம் சனநாயகத்தில் எங்கே இருக்கிறது..? நேரு, இந்திரா, ராஜீவ், சோனியா, நாளை ராகுல், அல்லது பிரியங்கா, ..... இப்படி நீளும் பட்டியலில் சுதந்திரம் எங்கே இருக்கிறது.
இதைப் பின்பற்றி... மாநிலங்களிலும்..... முதல்வருக்குப் பின் மகன் முதல்வர். தொடரும் பரம்பரை பதவிகளில் சனநாயகம் எங்கே பிழைத்திருக்கிறது...? ஏன் அடிமட்டத் தொண்டனுக்கு, நீண்ட அரசியல் பின்னணி உடையவர்களுக்கு, குறிப்பாய் இளைஞர்களுக்கு பதவிகள் தரப் படுவதில்லை. நடக்க தெம்பில்லாதவர்களுக்கு கூட பதவி மோகம் விடவில்லை.
தேசியப் பதவிகள் என்பது ( பிரதமர், முதல்வர்,) ஏதோ இந்திர சபை பதவி என நினைத்து தன் தனிப்பட்ட சுகங்களை அனுபவித்துக்கொள்ள ( ரம்பை, ஊர்வசி, திலோத்தமை களோடு ) என நினைக்க கூடாது.
இந்தப் பதவிகள் அந்த தேசத்தின், மாநிலத்தின் தலை எழுத்தையே மாற்றி அமைக்கும் வல்லமை கொண்டவை என்பது சனநாயகத்தில் புரியப் படாத புதிராக இருக்க வேண்டிய அவசியம் என்ன...?
ஒரு கட்சி என்று வருகிற போது, அங்கே தலைவன் என்று ஒருவர் வருகிற போது, மற்றவர்கள் தலைமை ஏற்கிற வாய்ப்புகள் மறுக்கப் படுகிறது. அதோடு இந்த பிரதமர் பதவிக்கும், முதல்வர் பதவிக்கும் மக்களே நேரடியாக தேர்ந்தெடுக்கும் வாக்குரிமையை தரவேண்டும். அப்போதுதான் உண்மையான சனநாயகம் தழைக்கும்.
இங்கே செயித்தவர்கள் சேர்ந்து கொண்டு அதிகப் பணம் கிடைக்கும் கட்சிக்கு தங்கள் ஆதரவு தருவதில் எப்படி சனநாயகம் இருக்க முடியும்..?
எல்லா அமைப்புகளும் இங்கே இருக்கின்றன... எப்படி..? அரசியலுக்கு அடிமையாய். சாமானியனை தண்டிக்கும் அளவுக்கு கூட அரசியல் வாதிகள், அதிகார வர்க்கத்தினர் தண்டிக்கப் படுவதில்லை. பலப்பல காரணங்களால், பலப்பல பெயர்களால் அவர்கள் தப்பிக் கொண்டே இருக்கிறார்கள். மொத்தமாய் ஒரு பெரியத் திருட்டுக் கும்பல் வசம் இந்த தேசம் சிக்கி சீரழிகிறது. இந்த தேசத்தின் அவலங்களுக்கும், தீர்க்கப் படாத பிரச்சனைகளுக்கும், மிக நீண்ட காலம் ஆட்சியில் இருந்த கட்சியாக "காங்கிரஸ்" பொறுப்பேற்க வேண்டியதாகிறது.
இப்போது பாருங்கள்...., இதுவரை கண்டிராத அளவுக்கு மிகப் பெரும் ஊழல்கள் நடந்தேறுகின்றன. ஊழல் காங்கிரசுக்கு புதிதில்லைதான் என்றாலும், தேசத்திற்கு இது மிகப் பெரிய கெடுதல், மிகப் பெரிய அச்சுறுத்தல், நம்முடைய உண்மையான பலம் என்னவென்பதை பரிசோதிக்க வேண்டிய காலக்கட்டத்தில் இருக்கிறோம்.
நம்முடைய அமைச்சர்கள், அதிகாரிகள் தங்களின் மிகப் பெரும் அறிவையும், ஆற்றலையும் எப்படி கொள்ளை அடிக்கலாம் என்பதிலேயே செலவிடுவதால்.... இந்த தேசத்தின் பாதுகாப்பு குறித்து கவலைக் கொள்ள வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது.
இப்போது இந்த ஒரு ஆண்டில் மட்டும் இரண்டு இலட்சத்து பத்தாயிரம் கோடிக்கு ( 210000,00,00,000 )
இதுவரை ஊழல்கள் வெளிப்பட்டிருக்கின்றன. நேற்று ஐந்தாயிரம் ( 5000,00,00,000 ) கோடிக்கு தென்னக ரயில்வேயில் ஊழல் கண்டுப் பிடிக்கப் பட்டிருக்கிறது. இப்போதெல்லாம் கோடிகளில் அல்ல ஊழல். கோடி கோடிகளில் தான் கொள்ளை.
இதை தடுக்க இங்கே எந்த சட்டமும், திட்டமும், பொது அமைப்பும் இல்லையா...? அப்படியென்றால் வெற்றுக் காகிதங்களில் தொங்கும் இந்த சல்லடை சட்டம் நமக்கு எதற்காக..? நம்முடைய சமூக அமைப்பு எதற்காக...?
அரசியலில் இருந்து விட்டால் என்ன செய்தாலும் அது குற்றமாகப் பார்க்கப் படாதது ஏன்...? தவறுகளுக்கும், தப்புகளுக்கும் நம்முடைய மக்கள் பழகிப் போய், இதுதான் எதார்த்தம், இதுதான் நடைமுறை என்கிற அளவுக்கு இரத்தத்தில் தவறுகள் நம்மில் மிகுந்து கிடக்கின்றன. இலஞ்சம் என்பது உரிமையாக பேசப் படுகிற அவலங்கள் இங்கேதான் நடந்தேறுகிறது.
தேநீர் வாங்கித் தரவில்லை என்கிற காரணத்தால் கோபம் கொண்ட காவல்துறை உயரதிகாரி ஏட்டுகளை பதவியிலிருந்து தற்காலிகமாய் நீக்கும் அளவுக்கு இலஞ்சம் நம்மில் ஊடறுத்து நிற்கிறது. ஒரு உள்துறை அமைச்சர் பேசுகிறார்... காங்கிரஸ் மட்டுமே இன்னும் பத்தாண்டுகளுக்கு ஆட்சியைப் பிடிக்க முடியும். எப்படி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்கிற தாரக மந்திரம் காங்கிரசுக்குத்தான் மிக நன்றாக தெரியும் என்று பேசி இருக்கிறார். அவருடைய பேச்சிலேயே காங்கிரசின் மானம் அவிழ்ந்து கிடப்பதை பாருங்கள்.
இங்கே சாதாரண மனித வாழ்க்கைக்கு தேவையான "வெங்காயம்" ஆப்பிளுக்கு மேலே போய் விலை விற்கிறது. இதையெலாம் இங்கு கவனிக்க ஒருத்தர் கூடவா இல்லை. உணவுத்துறை அமைச்சர் பேசுகிறார். இன்னும் மூன்று வாரம் போனால் வெங்காயம் விலை குறைய வாய்ப்பிருக்கிறது, மக்கள் காத்திருக்க வேண்டும் என்று... இப்படி பேச என்ன துணிச்சல் இருக்க வேண்டும்..? இதற்குத்தானே மக்கள் உனக்கு ஓட்டு போட்டார்கள். உனக்கு அமைச்சர் பதவி வேறு...? மரத்தடி சோதிடன் சொல்லும் பதில் சொல்ல எதற்கு உணவுத்துறை உனக்கு..?
இந்த ஐந்தாண்டுகளில் நடந்த கொடுமைகளைப் பாருங்கள். இந்தியா இதுவரைக் கண்டிராத பணவீக்கம். அதன் காரணமாய் தொடர்ந்து பொருட்களின் விலை ஏற்றம்...?! அத்தியாவசிய பொருட்களை ஆன்லைன் வர்த்தகத்தில் திறந்து விட்டு நம்முடைய வாழ்வியல் ஆதாரங்களை எவனோ உறிஞ்சிக்கொண்டிருக்கிறான். நாம் சூம்பிப் போய் நிற்கிறோம். இதையெல்லாம் செய்துவிட்டு கட்டுப்படுத்த முடியாமல் கையைப் பிசையும் கையாலாகாத காங்கிரஸ் ஆட்சியில் மகத்துவங்கள் பாருங்கள்.
உலகப் பொருளாதார மயமாக்கல் என்பது இங்கே தவறான அணுகுமுறையாய் போய்விட்டது. தவறான கொள்கைகளில் நம்மை மீள முடியாத் துயரத்தில் இந்த ஆட்சி கொண்டு போய் நிறுத்தி இருக்கிறது. இந்திய குடிமகன்களின் நலனை விட வெளி நாட்டானின் முதலீடு முக்கியமாய் போய் விட்டது. அப்படிப் பார்த்தால் நமது அண்டை நாடான சீனாவின் பொருட்களை உள்ளே விடவேண்டியதுதானே..., அதில் ஏன் முட்டுக் கட்டைப் போட வேண்டும்...? ஏனென்றால் இந்திய தொழில் முதலைகளான ரத்தன் டாடா, டி.வி.எஸ், அசோக் லேலாண்ட் போன்றவர்களின் வழி காட்டுதலில் ஒரு கட்சி தன் கொள்கைகளை வகுக்கிறது. பணக்காரர்களுக்கான ஆட்சியாக காங்கிரஸ் தன்னை மிக அதிக வெளிப்படையாக காட்டிக் கொண்டிருக்கிறது.
இவர்களின் வாகனங்கள் இங்கே அரை இலட்சத்துக்கு விற்கப் படுகிறது. சீனா தன் வாகனங்களை வெறும் இருபதாயிரங்களுக்கு தர சம்மதித்தது. இது யாருக்கு இழப்பு....? பணம் போட்ட முதலைகளுக்கு தானே..? எங்கே தன் வியாபாரம் படுத்து விடுமோ என பயந்து முன் கூட்டியே தடுத்து விட்டன இந்த முதலைகள். இப்படி இந்த தேசத்தை குதறி கொண்டிருக்கும் அரசியலுக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்கப் பட வேண்டும்.
நம்முடைய தேர்தல் முறை மாற்றி அமைக்கப் பட வேண்டும். நம்முடைய நடைமுறைக்கு ஏற்றார் போல் சட்டம் மொத்தமும் மாற்றி எழுதப்பட வேண்டும். அதுவரை நம்முடைய நாடு காங்கிரசின் அடிமை. காங்கிரசு பண முதலைகளுக்கும், வெளி நாட்டானுக்கும் அடிமை. முதுகெலும்பில்லாத கிருமி.
"இந்தியா என்பது காங்கிரசு அல்ல. காங்கிரசு என்பது இந்தியா அல்ல".
புதன், 29 டிசம்பர், 2010
அடிமை இந்தியா 2010
3:46 PM
No comments
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக