திங்கள், 27 டிசம்பர், 2010

மந்திரங்கள் பல கோடி ரூபாயை தருமா...?

   லகில் மனிதனாக பிறந்த ஒவ்வொருவனுக்கும் எதாவது ஒரு வகையில் பிரச்சனை என்பது உண்டு.  சிக்கல்கள் இல்லாத மனித வாழ்க்கையே கிடையாது.  ஏழையாக இருப்பவன் பணக்காரனாக ஆகிவிட்டால் துன்பம் வராது என்று நினைக்கிறார்.  பணக்காரனுக்கோ தொழிலால் துன்பம், மனைவி மக்களால் துன்பம் எங்கே நாம் ஏமாற்றப்பட்டு நடுத்தெருவுக்கு வந்து விடுவமோ என்ற அச்சம் இப்படி ஏகப்பட்ட சிக்கல்கள் தொடர்வண்டி போல உண்டு.


     பொதுவாக எல்லாவிதமான பிரச்சனைகளுக்கும் அடிப்படை காரணம் மனகுழப்பம் தான்.  அதுவும் மனிதன் மனம் இருக்கிறதே அதைவிட கொடிய பிசாசு எதுவும் இல்லை என்று சொல்லலாம்.  ஒரு சின்ன வெற்றி வந்து விட்டாலும் குதிரை குட்டி போல் குதிக்கும்.  ஆசை வந்துவிட்டால் போதும் நாய் மாதிரி ஓடும்.  தோற்றுவிட்டாலோ சீக்கு வந்த கோழி மாதிரி தலையை தொங்க போட்டு விடும். 


   இப்படிப்பட்ட மனதை நிலை நிறுத்துவது என்பது மகா கடினமான காரியம்.  அதனால் தான் கண்ணபெருமானே பகவத் கீதையில் மனதை அடக்குவது கடினம் என்று சொல்கிறார்.  இப்படி கடினமான ஒரு காரியத்தை அனைத்து மனிதனும் ஜெப தவம் செய்து சாதிக்க முடியாது.  அதற்கு நேரமும் இல்லை, பொறுமையும் இல்லை.


  மனதை முழுமையாக அடக்க வேண்டும் என்று நினைப்பது கன்னிமாரா நூல் நிலையத்தில் உள்ள எல்லா புத்தகங்களையும் ஒரே நாளில் படித்து விட வேண்டும் என்பதற்கு ஒப்பானதாகும்.  அறிவை வளர்த்து கொள்ள எல்லா புத்தகங்களையும் படிக்க வேண்டிய அவசியம் இல்லை.  உருப்பட நினைப்பவனுக்கு ஒரு புத்தகம் போதும் என்பது போல மனதை செம்மைபடுத்த விரும்புபவனுக்கு ஒரு சிறிய மந்திரம் போதும்.  அந்த மந்திரமே அவனுக்கு தைரியத்தையும் மன நிறைவையும் எத்தகைய சோதனை வந்தாலும் எதிர்நீச்சல் போடலாம் என்ற மன துணிச்சலையும் கொடுத்து விடும்.


  ஒரு சாதாரண வார்த்தை ஒரு மனிதனுக்கு எப்படி இத்தனையும் தரும் என சிலர் கேட்கலாம்.  நான் முன்பே சொன்னேன்.  மந்திரம் என்பது வார்த்தைகள் அல்ல அது அண்ட வெளியிலுள்ள தெய்வீக சத்தம்.  அந்த சத்தம் தான் நமக்குள்ளும் நிறைந்து கிடக்கிறது.  நாம் மனதால் சொல்லும் மந்திர அதிர்வு நமக்குள் மறைந்து கிடக்கும் சக்தியை உசுப்பி விட்டு செயல்பட வைக்கிறது.  அவ்வளவு தான் விஷயம்.  மனத்தெளிவு வந்துவிட்டால் போதாதா?  வாழ்க்கையில் எல்லா விஷயத்தையுமே சுலபமாக சமாளித்து விடலாம்.


  அதே போல மனிதங்களுக்கு சின்ன சின்ன ஆசைகள் உண்டு.  சைக்கிளில் போகிறவன் காரில் போக வேண்டும் என்று விரும்பினால் அதை பேராசை என்று சொல்ல முடியாவிட்டாலும் அப்படி தான் தோன்றும்.  ஆனால் அவனுக்கே மோட்டார் சைக்கிள் வேண்டுமென்று தோன்றினால் அதை அதிக ஆசை என்று யாரும் சொல்ல முடியாது.


   பாண்டிசேரி வானொலி நிலையத்திற்கு தனி அலைவரிசை, திருநெல்வேலி வானொலி நிலையத்திற்கு தனி அலைவரிசை என்று இருப்பது போல மந்திரங்களிலும் லௌகீக தேடல்களை அதாவது சிற்றின்பங்களை நிறைவேற்றி கொள்ள தனியாகவும், பராமார்த்திக தேடலை அதாவது பேரின்ப நிலையை பெறுவதற்கு தனியாகவும் மந்திரங்கள் உள்ளன.  அவைகளை முறைப்படி பயன்படுத்தினால் நமது தேவைகள் என்னவோ அது நிச்சயம் கிடைக்கும்.


   இதற்கு உதாரணமாக நான் வெளிமனிதர்களை காட்டுவதை விட என்னையே சொன்னால் நன்றாகயிருக்கும் என்கிறேன்.  1987-வரை எனது வாழ்க்கை வியாபாரம், அரசியல் என்று தானிருந்தது.  பெரிய குறிகோள்கள் என்று எனக்கு எதுவும் கிடையாது.  சாதிக்க வேண்டியது எதுவும் இல்லாத போது மனித வாழ்க்கையில் எதுவும் கஷ்டமாக தெரியாது.  1987-க்கு பிறகு என் தனிப்பட்ட வாழ்க்கையில் வீசிய மிகபெரும் சூறாவளி என் தன்னம்பிக்கை, தைரியம், அகங்ஹாரம் வாழ வேண்டுமென்ற ஆசை என்று எல்லாவற்றையும் தவிடு பொடியாக்கி விட்டது. 


  அப்போது மட்டும் எனக்கு மந்திரங்களின் அறிமுகம் கிடைக்கவில்லை என்றால் நிச்சயம் நான் ஒரு பரிதாப ஜீவனாகவே முடிந்து போயிருப்பேன்.  ஆனால் மந்திரங்கள் எனக்கு மறுவாழ்வு தந்தது, நான் கற்ற மந்திரத்தால் என்னை நம்பியவர்களையும் வாழவைக்க முடிகிறது.


   என்னை விட்டுவிட்டு மற்றவர்களை உதாரணம் காட்டு என்று என்னிடம் கேட்டால் ஏராளமானவர்களை அடையாளம் காட்ட முடியும்.  ஆனாலும் ஒன்று இரண்டு பேர்களை சுட்டி காட்டினால் நன்றாக இருக்குமென்று நினைக்கிறேன்.  ஒரு திரைப்பட நடிகர் 96-களில் தமிழ் திரையுலகில் முன்னனி நட்சத்திரம் அவர்.  ரஜினிகாந்த ஒருகோடி ரூபாய் சம்பளம் வாங்குவதற்கு முன்னாலே அதைவிட அதிகமாக சம்பளம் வாங்கியவர். 


  ஒரு நடிகர் மட்டுமல்ல, நல்ல கதையாசியர், சிறந்த இயக்குநர் வியாபார நுணுக்கம் தெரிந்த தயாரிப்பாளர் இப்படி எல்லா விதத்திலும் கொடி கட்டி பறந்த அவர் தனது சொந்த தம்பியாலும், கட்டிய மனைவியாலும் ஏமாற்றப்பட்டு ஏறக்குறைய நடுதெருவுக்கு வந்துவிட்டார்.  இந்த வேளையில் அவர் என்னைப் பற்றி கேள்விப்பட்டு என்னிடம் வந்தார்.  ஒரு பெரிய நடிகர் திடிரென என் முன்னால் வந்து நின்றது எனக்கு வியப்பாகத்தான் இருந்தது.  ஆனால் அவர் கதையை கேட்ட பிறகு வியப்பு மாறி துக்கமே மேலிட்டது.


   அவரிடம் சில மந்திரங்களை கொடுத்து ஜெபித்து வர சொன்னேன்.  அவர் ஜயா இந்த மனநிலையில் என்னால் நம்பிக்கைவுடன் இதை செய்ய இயலாது.  மனதை ஒரு நிலைப்படுத்துவது இப்போதைக்கு என்னால் ஆகாது.  எனக்காக நீங்களே செய்ய முடியுமா?  என்று கேட்டார்.  செய்யலாம் அப்படி செய்வதற்கு சில புறப்பொருள்கள் வேண்டும்.  அதை வாங்குவதற்கு அவரிடம் பணமில்லை.  அதை அவரிடம் கேட்பதற்கும் எனக்கு மனமில்லை. 


  ஆனாலும் நிலைமையை சொல்லியே ஆகவேண்டும் அல்லவா?  விவரத்தை விளக்கினேன் அவரும் பாவம் கோடி கோடியாக சம்பாதித்த அவர் கஷ்டப்பட்டு யாரிடமோ கடன் வாங்கி 5000 ரூபாய் என்னிடம் கொண்டு வந்து கொடுத்தார்.  வாங்குவதற்கு கஷ்டமாகத் தான் இருந்தது.  ஆனாலும் வேறு வழியில்லை.  அவருக்காக நான் பூஜையை ஆரம்பித்து சரியாக 25-வது நாளில் ஒரு படத்தில் கௌரவ வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி பத்து இலட்ச ரூபாய் சம்பளம் பெற்றார்.  அவருக்காக நான் பூஜையை முடிக்கும் தருவாயில் புதிய மூன்று படங்களுக்கு ஒப்பந்தமும் ஆகிவிட்டார்.  இப்போது தமிழ் படங்களில் நடிப்பதை குறைத்து கொண்டு தெலுங்கு படங்களை தயாரிக்க ஆரம்பித்து விட்டார்.


   இன்னொருவர் திருப்பூர் பனியன் கம்பெனி ஒன்றில் மேலாளராக பணி புரிந்தவர்.  தொழில் சிக்கல் காரணமாக முதலாளி கம்பெனியை இழுத்து மூடிவிட்டார்.  இவருக்கு வேலை போய்விட்டது.  நல்ல தொழில் அனுபவம் இருந்தும் ஏனோ இவருக்கு நெடுநாட்களாக வேலை கிடைக்கவில்லை.  குடும்பத்தில் வயதான தாயார், மனைவி, மூன்று குழந்தைகள் இவர் ஒருவரின் சம்பாதியத்தை மட்டுமே நம்பி இருந்தனர்.


   விலைவாசி விற்கும் நிலையில் ஆறு ஜீவன்கள் தினசரி வாழ்க்கையை ஓட்டுவது எத்தனை சிரமம்.  படிக்கட்டுகள் பல ஏறி பரிதவிக்கும் நிலைக்கு அவர் வந்துவிட்டார்.  அந்த நேரத்தில் தற்கொலை செய்து கொள்வது சரி என்று அவருக்கு தோன்றி இருக்கிறது.  அதுவும் தனியாக இல்லை.  குடும்பத்தினரோடு.


   கடைசியாக கையிலிருந்த காசுக்கு விஷம் வாங்கி கொண்டு வீட்டை நோக்கி நடந்திருக்கிறார்.  அந்த நேரத்தில் எதிரே வந்த நண்பர் உன் கஷ்டங்கள் தீர இன்னாரை பார்த்தால் வழி கிடைக்குமென்று என் விலாசத்தையும், தொலைபேசி நம்பரையும் அவரிடம் கொடுத்திருக்கிறார்.  அக்கறையில்லாமல் அதை சட்டை பையில் வாங்கி வைத்த அவர் தனது தற்கொலை திட்டத்தை மனைவியிடம் விளக்கி ஒப்புதலும் வாங்கியிருக்கிறார்.  எதர்ச்சையாக இவர் சட்டை பையில் இருந்த என் முகவரியை பார்த்த அவர் மனைவி கடைசி வழியாக இவரிடம் பேசி விட்டாவது நாம் சாகலாமே என்று கூறியிருக்கிறார்.


  அவர்கள் இருவரும் என்னை தொலைபேசியில் அழைக்கும் போது இரவு பன்னிரண்டு மணி நான் அப்போது அவர்களிடம் சொன்ன பதில் சாவது தான் உங்கள் முடிவு என்றால் அதை நான் தடுக்க விரும்பவில்லை.  ஆனால் முயற்சி என்ற சிகரத்தில் கடைசி வரை ஏறாமல் நுனியின் அருகில் இருந்து கொண்டு நான் தோற்றுவிட்டேன் என்று சொல்பவன் நிச்சயம் முட்டாள்.  நீங்களும் அப்படி முட்டாளாகவே இருக்கிறீர்கள்.  என் வார்த்தையின் மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் உங்களின் குழந்தைகளின் நலத்தை முன்னிட்டு சாகும் தேதியை மூன்று நாள் தள்ளி போடுங்கள்.  அதற்குள் வழி பிறக்கும்.  நம்பிக்கையோடு இருங்கள் என்றேன்.



   அப்படி கூறினேனே தவிர என் மனம் அவர்களுக்காக இரக்கப்பட்டது.  அளவு கடந்த வேதனையை அனுபவித்தது.  திக்கற்ற அந்த குடும்பம் எதாவது ஒரு வழியில் கரைசேர அவர்களுக்காக பிராத்தனை செய்தேன்.  பிரத்தேகமாக சில மந்திர உச்சாடங்களையும் செய்தேன்.  அதிசயத்திலும் அதிசயம் இரண்டாவது நாளே அவர்களிடமிருந்து போன் வந்தது.


  ஐயா நீங்கள் சொன்னப்படி எங்கள் இரண்டாவது நாள் பொறுமைக்கு ஆண்டவன் பரிசு கொடுத்து விட்டான்.  எனக்கு மாதம் இரண்டாயிர ரூபாய் சம்பளத்திற்கு ஒரு சிறிய வேலை கிடைத்துயிருக்கிறது.  இதை வைத்து நீந்தி எப்படியும் கரையேறி விடுவேன் என்று சந்தோஷமும், அழுகையும் கலந்து படப்படபோடு பேசினார்.  நான் கடவுளுக்கு நன்றி சொன்னேன்.


  ஒரு குடும்பத்தை காப்பாற்றும் மந்திரத்தை நான் கற்று கொள்ள எனக்கு அனுகிரகம் செய்த குருவின் திருவடிகளுக்கு வந்தனம் சொன்னேன்.  இப்படி எத்தனையோ அனுபவங்களை சொல்லி கொண்டே சொல்லலாம்.  மந்திரங்கள் நிச்சயம் எல்லா தரப்பு மக்களுக்கும் நன்மை தரக்கூடியது என்பதை என்னால் இன்னும் பல ஆதாரங்களை காட்டி நிருபிக்க முடியும்.


இணையத்தில் படித்தது  எழுதியவர் யோகி ராமனந்தா குரு.

0 கருத்துகள்: