செவ்வாய், 28 டிசம்பர், 2010

வாங்க தொழிலதிபர் ஆகலாம் !

அண்மையில் நான் இணையத்தில் உலாவிக் கொண்டிருந்தபோது, ஒரு இன்ஷ்யூரன்ஸ் ஏஜெண்ட் எப்படி தமக்கு ஏற்பட்ட பிரச்னையையே தொழில் ஐடியாவாக்கி வாழ்க்கையில் வெற்றி பெற்றார் என்ற சுவாரஸ்யமான உண்மைக் கதையைப் படிக்க நேர்ந்தது. இதோ அந்தக் கதை உங்களுக்காக...
அமெரிக்காவில் லூயிஸ் எட்சன் வாட்டர்மேன் என்பவர் ஒரு பிரபலமான இன்ஷ்யூரன்ஸ் ஏஜெண்ட். இவர் ஒரு சமயம், நியூயார்க் நகரின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரை, பாலிசி எடுக்க வைப்பதற்காகச் சந்தித்தார். அவரும் பாலிசி எடுக்க ஒப்புக் கொள்ளவே விண்ணப்பப் படிவத்தை நிரப்பி அதில் கையெழுத்தைப் பெற பேனாவுடன் அவர் முன் வைத்தார்.
அந்தக் காலத்தில் ஃபவுண்டன் பேனாக்கள்தான் உயர்வான பேனாக்களாகக் கருதப்பட்டு வந்தன. அப்படிப்பட்டதொரு பேனாவைத்தான் அவர் முன்வைத்திருந்தார் வாட்டர்மேன். அந்தப் பணக்காரர் கையெழுத்திட முயற்சித்தப்போது பேனா மக்கர் செய்தது.  அவர் அதனை உதறிவிட்டு மீண்டும் எழுத முயற்சித்தார். அப்போதும் அது எழுதாமல் போகவே, அவர் ஓங்கி உதறினார்.
பேனாவிலிருந்த மை, விண்ணப்பப் படிவத்தின் மீது சிறதி விட்டது. இதனால், அந்த பணக்காரர் கோபப்பட்டு வாட்டர்மேனை வெளியே அனுப்பி விட்டார். இந்தச் சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட வாட்டர்மேன், முதலில் சீராக எழுதக்கூடிய ஃபவுண்டைன் பேனாவைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினார். இதற்காக தன் சகோதரர் ஃபிராங் வாட்டர்மேனின் ஒர்க்க ஒர்க்ஷாப்பில் ஆராய்ச்சியில் ஈடுபட்டார். கேப்பிலாரிட்டி என்ற தத்துவத்தின் அடிப்படையில் காற்றின் உதவியுடன் மையினை சீராக வெளியேற்றும் கேப்பில்லரி ஃபீட் ஃபவுண்டைன் பேனாக்களை 1884ம் ஆண்டு உருவாக்கி அதற்கென பேட்டண்ட் உரிமையையும் பெற்றார்.
பிறகு, ""வாட்டர்மேன் பென் கம்பெனி'' என்ற நிறுவனத்தைத் தொடங்கி ஐந்து வருட உத்தரவாதத்துடன் இந்தப் பேனாக்களை விற்கத் தொடங்கினார். வர்த்தகம் சூடு பிடிக்கவே 1899ஆம் ஆண்டு கனடா நாட்டில் மாண்ட்ரியல் நகரில் ஒரு பெரிய தொழிற்சாலையை நிறுவி வர்த்தகத்தை விரிவாக்கி பெரும் பணக்காரரனார்.
இதுபோன்று, உங்களையும் கோடீஸ்வரராக்கும் தொழில்சிந்தனைகள் எப்போதும் வேண்டுமானாலும் எழலாம். காத்திருங்கள்.

0 கருத்துகள்: