வியாழன், 30 டிசம்பர், 2010

பவர்பாய்ண்ட் ஆப்ஜக்ட் இயக்கம் பற்றி......

 

கருத்தரங்கங்கள் மட்டுமின்றி, சாதாரணமாக வகுப்பறை களிலும் மாணவர்களாலும் ஆசிரியர்களாலும் பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. நம் கருத்துக்களைத் தெரிவிக்க, இது மிகவும் உதவியாக இருப்பதால், இதன் அனைத்து தொழில் நுட்ப உத்திகளையும் தெரிந்து கொள்வது அவசியம்.

பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் ஒன்றில்,கிராபிக்ஸ் பயன்படுத்துவதையும், அதில் ஆப்ஜெக்ட்களை எப்படிக் கையாளுவது என்றும் இங்கு பார்க்கலாம்.  எப்போதும் ஆப்ஜெக்ட் ஒன்றைச் சரியான இடத்தில் அமைப்பது முக்கியமாகும். இல்லை எனில், அதனை வைத்திருக்கும் இடம் சரியாகக் காட்சி அளிக்காமல், நம் திறனைக் கேலிக் கூத்தாக்கும். 

1.ஆப்ஜெக்ட் அமைக்க கிரிட் பயன்பாடு:  இங்கு கிரிட் என்பது நம் கண்களுக்குக் காட்டப்படாமல் கிடைக்கும் கோடுகளாகும்.  இந்த கோடுகளுக்கு அருகே எந்த ஆப்ஜெக்டை அல்லது படத்தை  வைத்தாலும், கோடுகள் அருகே அவை  இழுக்கப்படும். ஏதோ அந்தக் கோடுகளுக்கு என்று தனி ஈர்ப்பு விசை இருப்பது போல செயல்படும்.  இதனால் தான் பிரசன்டேஷன் சாப்ட்வேர் தொகுப்பில் ஒரு ஆப்ஜெக்டை இழுக்கும் போது அது நம் வசத்திற்கு வராமல்  திரையின் குறுக்கே கண்ட இடத்திற்குச் செல்லும்.  இந்நிலையில் சீர் செய்திட என்ன செய்யலாம் என்று பார்ப்போம்.

முதலில் கிரிட் கோடுகளை நாம் காணும் வகையில் கொண்டு வரலாம்.  Show/Hide Grid  தட்டி கோடுகளைக் கொண்டு வரவும். இது ஸ்டாண்டர்ட்  ( Standard )  டூல் பாரில் உள்ளது.  அல்லது ஷிப்ட் அழுத்தி எப் 9 ( Shift + F9 )    பட்டனைத் தட்டவும். தற்காலிகமாக கிரிட்-ஐப் பற்றி கவலைப்படாமல் இருக்க வேண்டும் என எண்ணினால் Alt பட்டனை அழுத்திக் கொள்ளலாம். இதனால் ஆப்ஜெக்ட்களை நீங்கள் எளிதாக இழுக்கலாமேயொழிய அவை சரியான கோடுகளில் அமரும் என்று எதிர்பார்க்க முடியாது.


2.கைட் லைன்களின் ( Guidelines )  பயன்:  படம் அல்லது ஆப்ஜெக்ட் ஒன்றினை, படுக்கை வாக்கில் அல்லது நெட்டு வாக்கில் அமைக்க விரும்பினால், திரையில் கோடுகளை உருவாக்க வேண்டும்.  இதற்கு  Alt + F9  கீகளை அழுத்தவும். இப்போது நெட்டாகவும் படுக்கையாகவும் கோடுகள் தென்படும். உங்களுடைய ஆப்ஜெக்டுகள் இதனுடன் இணைந்து கொள்ளும். இந்த கோடுகளின் உதவியுடன் சரியான இடத்திற்கு ஆப்ஜெக்டுகளை இழுத்து வைத்திடுங்கள். பின் நீங்கள் எப்போது Alt + F9  அழுத்தினாலும் கோடுகள் மறைந்துவிடும்.  இந்த கைட் லைன்கள் இரு பக்கமும் ஒன்று தான் கிடைக்கும். தரப்படும் ஒரு கோடு நீங்கள் செயல்படப்  போதவில்லை எனில், கண்ட்ரோல் ( Ctrl )  அழுத்தி எந்த கோட்டை இழுத்தாலும் அது இரண்டாக மாறும். ஏதேனும் கைட் லைன் தேவை இல்லை என்றால் அதனை எப்படி நீக்குவது? மவுஸின் கர்சரை அதன் மீது வைத்து அழுத்தி அப்படியே இழுத்து பிரேமிற்கு வெளியே   விட்டுவிடவும். 

நீங்கள் கைட் லைனை இழுக்கையில் ஒன்றை கவனிக்கலாம்.  மவுஸ் பாய்ண்டரில் சிறிய எண்கள் இணைக்கப்பட்டு தெரியும். இது எதைக் குறிக்கிறது தெரியுமா? நீங்கள் இடம் அமைக்கப் போராடும் ஆப்ஜெக்ட் ஸ்லைடின் மையப் பகுதியிலிருந்து எத்தனை அங்குலம் தள்ளி இருக்கிறது என்பதை இந்த எண் குறிக்கிறது.  இந்த எண்கள் பூஜ்யத்திலிருந்து தொடங்குகின்றன.  நீங்கள் எவ்வளவு அங்குலம் இழுக்கிறீர்கள் என்பதைத் துல்லிதமாக அறிய வேண்டும்  என்றால்  இழுக்கும்போது ஷிப்ட்  ( Shift )  கீயை அழுத்தவும். எடுத்துக்காட்டாக  ஆப்ஜெக்ட் ஒன்றின் அடிப்பாகத்தில் அரை அங்குலத்திற்குக் கீழாக கைட் லைன் ஒன்றை அமைக்க நீங்கள் விரும்பினால் படுக்கை வசக் கோடு ஒன்றை ஷிப்ட் கீயை அழுத்தியவாறே கீழாக இழுக்கவும். மவுஸ் பாயிண்ட்டரில் உள்ள எண் 0.50 ஆக இருக்கையில் விட்டுவிட்டால் அரை அங்குலம் கீழாகக் கோடு அமைக்கப்படும்.

3.கிரிட் கட்டம் மற்றும் வழிகாட்டும் கோடுகள் அமைக்கும் வழி: Ctrl + G  கீகளை அழுத்தினால் கிடைக்கும் Grid and Guides  திரையில் இவற்றை எப்போதும் கிடைக்கும் படியும் கிடைக்காத படியும் அமைக்கலாம். அதாவது நீங்கள் Alt R  அழுத்திக் கிடைக்கும் விளைவினை இந்த கீகளை அழுத்தி மேற்கொள்ளலாம். இந்த டயலாக் பாக்ஸில் இந்த கோடுகள் எந்த அளவில் அமைக்கப்பட வேண்டும் என்பதனையும் நீங்கள் வரையறை செய்திடலாம்.

4.விருப்பப்படி மிகவும் சரியாக:  ஆப்ஜெக்ட் ஒன்றை மிகத் துல்லிதமான அளவில், அதாவது அங்குலம் ஒன்றின் பத்தில் ஒரு பங்கு  அல்லது நூறில் ஒரு பங்கு அளவில் கூட, நீங்கள் அமைத்திடலாம். எந்த பக்கம் செல்ல வேண்டுமோ  அதற்கான  அம்புக்குறி கீயினை கொஞ்சம் கொஞ்சமாக அழுத்தினால் ஆப்ஜெக்ட் அங்குலத்தில் பத்தில் ஒரு பங்காக அமைக்கும் வகையில் மெல்ல மெல்ல நகரும். ஆப்ஜெக்டை ஓர் அங்குலத்தில் 100ல் ஒரு பங்கு நகர்த்திட கண்ட்ரோல் கீ  ( Ctrl )   அழுத்தி சம்பந்தப்பட்ட அம்புக்குறி கீயினை அழுத்தவும்.

5.இருபக்கமும் வேகமாக ஆப்ஜெக்ட் நகர்த்த:  ஆப்ஜெக்டை படுக்கை வசமாகவும் அல்லது நெட்டு வாக்கிலும் வேகமாக இழுக்க ஷிப்ட்( Shift )  கீயை அழுத்தியவாறே ஆப்ஜெக்டை இழுக்கவும். ஆனால் ஷிப்ட் கீயை அழுத்தியவாறே நெட்டு வாக்கில் ஆப்ஜெக்டை இழுக்கும் போது அதனை நெட்டுவாக்கில் மட்டுமே இழுக்க முடியும். படுக்கை வாக்கில் இழுக்க முடியாது. இதே போல மறுபக்கத்திலும் செய்ய முடியாது.

6.நகல் பெற: ஆப்ஜெக்ட் ஒன்றை நகர்த்துகிறீர்கள். அதனை இருந்த இடத்தில் வைத்துக் கொண்டே, இன்னொரு ஆப்ஜெக்ட் வேண்டும் எனில், அதன் நகல் ஒன்று உங்களுக்கு உதவலாம் அல்லவா! அப்படியானால் Ctrl  கீயை அழுத்தியவாறே இழுக்கவும். இப்போது ஆப்ஜெக்டின் இன்னொரு நகல் கிடைக்கும். இந்த நகல் படுக்கை வாக்கிலும் நெட்டு வாக்கிலும் சரியாக அமைக்கப்பட வேண்டுமென்றால் Shift  மற்றும்  Ctrl  கீகளைச் சேர்த்து அழுத்தி இழுக்கவும்.

0 கருத்துகள்: