திங்கள், 27 டிசம்பர், 2010

விண்டோஸ் 7 சிஸ்டம் வெற்றி தொடருமா ?

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தொடர்ந்து ஏறத்தாழ 90% கம்ப்யூட்டர்களைக் கொண்டுள்ளது. இதன் பங்கினைக் கைக்கொள்ள வேறு எந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினாலும் இயலவில்லை. குறிப்பாக, விண்டோஸ் 7 மைக்ரோசாப்ட் இடத்தை நன்கு உறுதியாக்கிவிட்டது. ஆனால், இந்நிலையில் கூகுள் நிறுவனத்தின் குரோம் ஆப்பரேட்டிங் சிஸ்டம், அடிப்படை இயக்கத்தில் வேறு முறையைப் பின்பற்றினாலும், மைக்ரோசாப்ட் இயக்கத்திற்குச் சரியான போட்டியை வரும் ஆண்டில் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் 7 அறிமுகப்படுத்தப்பட்ட முதல் ஆண்டில், மிகப் பிரமாதமாக மக்களை அடைந்தது. 24 கோடி பதிவுகள் விற்பனையாயின. மைக்ரோ சாப்ட் நிறுவனம் வெளியிட்ட ஆப்ப ரேட்டிங் சிஸ்டங்கள் விற்பனையில் மிக வேகமாக விற்பனை செய்யப்பட்ட சிஸ்டம் இதுவென இடம் பெற்றது. ஒரு நிலையில் விநாடிக்கு 7 பதிவுகள் விற்பனையாயின. கூகுள் நிறுவனத்தின் குரோம் ஆப்ப ரேட்டிங் சிஸ்டம் சில வாரங்களுக்கு முன் சோதனை முயற்சியாக, நெட்புக் கம்ப்யூட்டர்களுடன் வெளியிடப் பட்டது. அடிப்படையில் இது விண் டோஸ் மற்றும் மேக் சிஸ்டங்களிலிருந்து வேறுபட்டது. இணைய செயல்பாட்டினை அடிப்படையாகக் கொண்டது. கூகுள் டாக்ஸ் போன்ற இணைய அப்ளிகேஷன் புரோகிராம்களை இயக்கும் வகையில் அமைக்கப்பட்டது. குரோம் ஓ.எஸ். உள்ள நெட்புக் இயக்கப்பட்டவுடன், அது இணையத்துடன் இணைக்கப் படும். நெட்புக் கம்ப்யூட்டரில் எந்த அப்ளிகேஷன் புரோகிராமும் பதியத் தேவை இல்லை. கூகுள் அல்லது வேறு நிறுவனங்கள் கிளவ்ட் கம்ப்யூட்டிங் முறையில் தரும் அப்ளிகேஷன் புரோகிராம்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டியதுதான். இந்த போட்டியின் முடிவு வரும் 2011ல் தெரிந்துவிடும். சில வல்லுநர்கள், குரோம் ஓ.எஸ். நெட்புக் கம்ப்யூட்டர்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தாது என்றே கருத்து தெரிவிக்கின்றனர். 2014 வரை பெர்சனல் கம்ப்யூட்டர் பயன்பாடும் வளர்ச்சியும் இருக்கும் என்று எதிர்பார்க்கின்றனர். பெர்சனல் கம்ப்யூட்டர்களின் எண் ணிக்கை 29.9 கோடி என்ற நிலையிலிருந்து 59 கோடியாக உயரும் என்று கணித்துள்ளனர். பெர்சனல் கம்ப் யூட்டர் பயன்பாட்டில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் 91% பங்கெடுத்துள்ளது என்றும், இது 2014ல் 1% மட்டுமே குறைய வாய்ப்பு உள்ளதாகத் தெரிவித்துள்ளனர். மேக் சிஸ்டம் 1% உயர்ந்து 5% பங்கினைக் கொள்ளலாம். லினக்ஸ் அதே 4% ல் இருக்கும்.
குரோம் ஆப்பரேட்டிங் சிஸ்டம், ஏற்கனவே ஒரு வகைக்குக் கம்ப்யூட்டர் பயன்பாட்டிற்குப் பழக்கப்பட்ட மக்களை மாறச் செய்வதில் வெற்றி அடைய முடியாது என்று பலரும் கருதுகின்றனர். இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்க, அந்த கம்ப்யூட்டர் எப்போதும் இணைய இணைப்பில் இருக்க வேண்டும். மேலும், உருவாக்கப்படும் பைல்கள் கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க்கில் பதியப்பட மாட்டாது. மாறாக, கிளவ்ட் கம்ப்யூட்டிங் அடிப்படையில் இணைய சர்வர்களில் பதியப்படும். இந்த மாற்றத்தினை மக்கள் ஏற்றுக் கொள்வது சிரமம் என்று கருத்து பரவலாக உள்ளது. இன்னொரு வகையிலும் விண்டோஸ் தன் நிலையைக் காப்பாற்றிக் கொள்ளப்போராட வேன்டியதிருக்கும். அடுத்த போட்டியாளர் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வடிவத்தில் இல்லாமல், சாதன வடிவத்தில் இருக்கும். பெர்சனல் கம்ப்யூட்டர் இடத்தைக் கைப்பற்றும் வகையில் டேப்ளட் பிசிக்கள் பயன்பாடு பெருகும். 2014 ஆம் ஆண்டில் நிச்சயமாய் 10% பெர்சனல் கம்ப்யூட்டர்கள் டேப்ளட் பிசியால் தங்கள் இடத்தை இழக்கும். ஆனால் மைக்ரோசாப்ட் இது குறித்து கவலை தெரிவிக்கவில்லை. மக்கள் டேப்ளட் பிசிக்களை, இப்போது பயன்படுத்தும் பெர்சனல் கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப் கம்ப்யூட்டர்களுடன் கூடுதலாகப் பயன்படுத்துவார்கள் என்று கருத்து தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் டேப்ளட் பிசி சந்தையிலும் தன் பங்கினைக் கொள்ள முயற்சிகளை எடுத்து வருகிறது. இருப்பினும், டேப்ளட் பிசி சந்தை, பெர்சனல் கம்ப்யூட்டர் சந்தையுடன் ஒப்பிடுகையில் மிக மிகச் சிறியது என்றும் கருத்து தெரிவித்துள்ளது. வரும் ஆண்டு தான் இதற்குப் பதில் கூற வேண்டும்.

0 கருத்துகள்: