ஞாயிறு, 26 டிசம்பர், 2010

விபத்தில் இறந்த பள்ளி மாணவனின் உடல் உறுப்புகள் 6 பேருக்கு தானம்

திருநெல்வேலி : விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த பள்ளி மாணவனின் உடல் உறுப்பு தானத்தால் 6 பேர் தங்கள் வாழ்க்கையை மீண்டும் பெறுகின்றனர்.


கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரத்தை சேர்ந்தவர் தங்கவேல். இவரது மகன் நாகேந்திரன்(17). சுசீந்திரம் அரசு மேல்நிலைப்பள்ளியில்பிளஸ் 1 பயின்று வந்தார். கடந்த 22ம் தேதி இரவில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது விபத்தில் சிக்கினார். சிகிச்சைக்காக நாகர்கோவில் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டுள்ளதால் இனி பிழைக்க வாய்ப்பில்லை என்ற நிலை ஏற்பட்டது. அவர் உயிர் பிழைக்க முடியாவிட்டாலும் அவரது உடல் உறுப்புகள் மூலம் உயிருக்கு போராடும் நிலையில் சிகிச்சையில் இருக்கும் சிலரை காப்பாற்றமுடியும் என பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாணவர் இதயேந்திரன் உடல் தானம் செய்தது குறித்து ஏற்கனவே அறிந்திருந்த நாகேந்திரனின் பெற்றோர் தங்கவேல், சாந்தி தமது மகனின் உடல் உறுப்புகள் தானத்திற்கு சம்மதித்தனர்.


திருநெல்வேலியில் உள்ள கிட்னி கேன் சென்டரில் நேற்று காலை நாகேந்திரனின் உடல் ஆபரேசன் செய்யப்பட்டது.கிட்னி கேர் சென்டர் டாக்டர் பாலசுப்பிரமணியன், சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரி கல்லீரல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் அஜிதாப் ஸ்ரீவத்சவா, மதுரை கிட்னி கேர் பவுண்டேசன் டாக்டர் தினகர் முன்னிலையில் உடல் உறுப்புகள் சேகரிக்கப்பட்டன.நாகேந்திரனின் ஒரு கிட்னி, நெல்லை கிட்னி கேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் உள்ள கல்லிடைகுறிச்சியை சேர்ந்த மாடசாமி என்பருக்கு பொருத்தப்படுகிறது.


இன்னொரு கிட்னி மதுரை கிட்னி கேர் பவுண்டேசனில் சிகிச்சை பெறும் ஒரு நபருக்கும், கல்லீரல், இதயவால்வு ஆகியன சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவோருக்கும் பொருத்தப்பட உள்ளன. இதற்காக கல்லீரல், இதயவால்வு ஆகியன பாதுகாப்பாக நேற்று மதியம் தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் சென்னை கொண்டுசெல்லப்பட்டது. கண்கள் இரண்டும் நெல்லை அரவிந்த் கண் ஆஸ்பத்திரியி ல்சிகிச்சையில் உள்ள இருவருக்கு பொருத்தப்படுகிறது.


இந்த ஆபரேசன் நடக்கும் போது நாகேந்திரனின் பெற்றோர்கள் அங்கேயே கண்ணீர் மல்ககாத்திருந்தனர். விபத்தில் சிக்கி உயிர்பிழைக்க முடியாத சூழலில் எங்கள் மகனின் உடல் உறுப்புகள் மூலம் சிலர் வாழ்க்கை பெறுவதால் திருப்தியடைகிறோம் என்றார்கள்.

0 கருத்துகள்: