ஞாயிறு, 26 டிசம்பர், 2010

சுனாமி அரக்கனின் கருப்பு ஞாயிறு இன்று

சுனாமி அரக்கன் கோரத்தாண்டவமாடி இன்றுடன் 6 ஆண்டுகள் நிறைவடைகிறது. ஆனாலும் தாக்குதலினால் ஏற்பட்ட ரணம் இன்னும் மக்கள் மனதில் இருந்து ஆறவில்லை. கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி பூமிக்கடியில் 30 கி.மீ., தொலைவில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் கடலில் மிகப்பெரிய சுனாமி பேரலை ஏற்பட்டது. இயற்கையை யாராலும் வெல்ல முடியாது என்பதை நிரூபிக்கும் வகையில் கடற்கரையோரம் வசித்த மீனவர்கள் நீச்சல் தெரிந்தும் பேரலைக்குமுன் ஈடுகொடுக்க முடியவில்லை. அதுவரை சுனாமி என்கிற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாமலேயே வாழ்ந்த மக்கள் அதன் தாக்குதலைக் கண்டு பிரமித்தனர். இந்தோனேஷியா நாட்டில் உள்ள சுமத்திரா தீவில் ஏற்பட்ட இந்த நில நடுக்கத்தின் தாக்கம் கடலோர நாடுகளான தாய்லாந்து, இந்தோனேஷியா, இந்தியா உட்பட 11 நாடுகளை புரட்டிப் போட்டது.கடல் அலை 100 மீட்டர் உயரத்திற்கு எழும்பியது. தமிழகத்தை பொறுத்தவரை மூன்று பேரலை மட்டுமே தாக்கியது. இந்த மூன்று ராட்சத அலைக்கே 7,000 பேர் பலியாகினர். தமிழகத்தில் சென்னை, கடலூர், நாகப்பட்டினம், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக உயர்பலிகள் ஏற்பட்டன.கடலூர் மாவட்டத்தில் மட்டும் 610 பேர் பலியாகினர். பல ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர். தாய், தந்தையர், உற்றார் உறவினரை இழந்து 43 சிறுவர்கள் நிர்கதியாய் நின்றனர். அந்த பிஞ்சு உள்ளங்கள் கடலூர் சேவை இல்லத்தில் சேர்க்கப்பட்டு அரசு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது.

சுனாமிக்குப்பின் வாழ்வாதாரம்: சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ புகழ்பெற்ற நடிகர் உட்பட அகில உலக அளவிலான 200க்கும் மேற்பட்ட சேவை அமைப்புக்கள் இம் மாவட்டத்தில் அலுவலகங்களை அமைத்து வாழ்வாதர நிலையை ஏற்படுத்தின. விவசாயம், சுயதொழில், வியாபாரம் செய்து பிழைப்பு நடத்த சேவை அமைப்புகள் பண உதவி, பொருளுதவிகளை செய்தன.கடலோர கிராமங்களில் வசிப்பவர்களுக்கு தொண்டு நிறுவனங்கள் மூலம் இரண்டு கட்டமாக 5,115 கான்கிரீட் வீடுகளும், அரசு மூலம் ஆர்.ஜி. ஆர்.பி., ஈ.டி.ஆர்.பி., திட்டத்தின் மூலம் 3,603 கான்கிரீட் வீடுகளும் மொத்தம் 8,718 வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன.மீண்டும் சுனாமி பேரலை தாக்குதலில் இருந்து தப்பிக்க கடலோர கிராமங்களில் அலை தடுப்பதற்காக பனைமர தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் சுனாமி பேரலை முன்கூட்டியே கண்டறியும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதால் பேரலையில் இருந்து மக்கள் முன்கூட்டியே அறிந்து தப்பி செல்ல வாய்ப்புள்ளது.

கிடைப்பானா "தெல்கா' : ஊட்டியிலிருந்து சுற்றுலா வந்த தம்பதிகள் சபியுல்லா, பர்வீன் மற்றும் இவர்களது குழந்தைகள் தன்வீர் (7), தெல்கா (3) மற்றும் எட்டு மாத கைக்குழந்தை பிலால் ஆகியோரும் சிக்கினர். ஆழிப்பேரலையில் தன்வீர் மட்டும் பெரியார் கலைக்கல்லூரி விடுதியில் தூக்கி வீசப்பட்டு தப்பினான். காரில் தூங்கிய தெல்கா காருடன் எஸ்.பி., முகாம் அலுவலகம் அருகே அடித்துச் செல்லப்பட்டான்.அப்போது மீட்பு பணியில் இருந்த எஸ்.பி., பன்னீர்செல்வம் காரில் அழுது கொண்டிருந்த தெல்காவை தூக்கி அருகில் இருந்த ஒருவரிடம் கொடுத்து விட்டு மீண்டும் மீட்பு பணியில் ஈடுபட்டார்.காப்பாற்றப்பட்ட தொல்கா யாரிடம், எங்கு இருக்கிறான் என இன்று வரை தெரியவில்லை. எப்படியும் கிடைத்து விடுவான் என்ற நம்பிக்கையில் இன்னமும் பணத்தை தண்ணீராய் செலவழித்துக் கொண்டிருக்கின்றனர் தெல்காவின் உறவினர்கள்.

0 கருத்துகள்: