புதன், 8 டிசம்பர், 2010

வீட்டோ அதிகாரம் பெற்று இந்தியா உலக வல்லரசாகுமா?

 

 

வீட்டோ அதிகாரம் பெற்று இந்தியா உலக வல்லரசாகுமா?

300 மில்லியன் மக்கள் பொருளாதார உச்சத்தில் இருக்க 800 மில்லியன் மக்களைப் பாதாளத்தில் வைத்துக்கொண்டு வல்லரசுக் கனவு காணும் இந்தியா தன் இலக்கைத் தொடுமா?
அமெரிக்கா, ஐரோப்பா கண்டங்களில் உள்ள நாடுகளில் பொருளாதார மந்தம் தலைதூக்கி பெரிய விளைவைக் கொடுக்கும் இன்றைய காலகட்டத்தில் உலகின் முக்கிய நாடுகளான சீனா, இந்தியா, பிரேஸில், தென்னாபிரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள் பொருளாதார வளர்ச்சியடைந்து வருவதை எம் கண் மூலம் பார்க்க முடிகின்றது. சீனாவின் பொருளாதார வளர்ச்சி மின்னல் வேகத்தில் போவது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியின் ஊடாக ஒரு வல்லரசு ஸ்தானத்திற்கு அது வருமா என்பதைப் பார்ப்பதுதான் இக்கட்டுரையின் நோக்கமாகும்.
இந்தியா, சீனா இரு நாடுகளும் மக்கள் தொகையில் போட்டி போட்டு இறுதியில் இந்தியா, சீனாவின் சனத்தொகையைத் தாண்டியது. இதேபோன்று இராணுவப் பலத்திலும் சீனாவைத் தாண்டுமா என அவதானித்தால் அது தற்போதைக்கு முடியாத காரியமாக இந்தியாவிற்கு உள்ளது. அணுவாயுத நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து , பிரான்ஸ் , சீனா, இஸ்ரேல் , இந்தியா, பாகிஸ்தான், வடகொரியா சிலவேளை ஈரான் போன்ற அனைத்து நாடுகளும் உலகத்தின் வல்லரசு நாடுகள் எனக் கூறமுடியாது. இங்கே தெற்காசியாவில் உள்ள சீனா, இந்தியா, பாகிஸ்தான் நாடுகளில் ஒரு குறிப்பிட்ட வீத அணுவாயுதத்தை வைத்திருந்தாலும் இவற்றை அடிப்படையாக வைத்து இந்தியா ஒரு இராணுவ வல்லரசு என்று கூற முடியாது.
300 மில்லியன் செல்வந்தர்கள்
இந்தியாவின் திறந்த பொருளாதாரக் கொள்கை இந்தியாவின் தற்போதைய வளர்ச்சிக்குக் காரணமாக அமைந்தாலும் தற்போதைய வளர்ச்சி அனைத்து மக்களையும் சென்றடையவில்லை என்பதே உண்மை.
இந்தியாவின் சனத்தொகையில் 1100 மில்லியன் மக்களில் 300 மில்லியன் மக்கள் சராசரி ஐரோப்பிய மக்களின் வாழ்க்கைத் தரத்தைக் கொண்டுள்ளார்கள் எனவும் இதில் பெரும்பாலானோர் மிகவும் வசதியாக வாழ்வதையும் அவதானிக்க முடிகின்றது. இந்த 300 மில்லியன் மக்கள் இந்தியாவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ளார்கள் என்பதைக் கருத்தில் கொண்டு இந்த மக்கள் அமெரிக்காவின் சந்தையின் தரத்துக்கு ஈடுகொடுப்பவர்களாய் உள்ளார்கள். உதாரணமாக ஒன்றைக் கூறினால் மருத்துவத்துறை, விவசாயத்துறை, கணினித்துறை, வரை, கோல் சென்டர் மூலம் தமது புதிய கண்டுபிடிப்புகள் , நோய்களின் அறிகுறிகள், ஸ்கானிங் ஆய்வுகள், ஆலோசனைகளை நேரடியாக இந்தியாவில் இருந்து ஏனைய உலக நாடுகளுக்கு வழங்குவதில் இந்தியர்கள் முன்னிலையில் உள்ளார்கள்.
அமெரிக்காவின் வைத்தியசாலையில் உள்ள ஒரு நோயாளியின் ஸ்கானிங் எடுத்த கையுடன் இந்தியாவிற்கு அனுப்பப்படுகின்றது. இந்தியாவில் கோல் மையங்களில் அமைந்திருக்கும் வைத்தியர்கள் இந்த ஸ்கானிங், படத்தைப் பார்த்து நேரடியாகவே சம்பந்தப்பட்டவரின் விடயங்களை அறிவிக்கின்றனர். இதன் பின்னர் அமெரிக்க வைத்தியசாலை இவர்களுக்குரிய சம்பளத்தை இந்தியாவிற்கு அனுப்பி வைக்கின்றனர். இந்தியாவில் கல்வி கற்ற ஆறு இலட்சம் வைத்தியர்கள் உலக நாடுகளில் பணிபுரிவதும் இன்னும் பல தரப்பட்ட துறைகளில் கல்வி பயின்ற பல இலட்சக்கணக்கான மக்கள் உலக நாடுகளில் தொழில் புரிவதையும் காண முடிகின்றது. என்னடா இது அமெரிக்காவில் வைத்தியர்கள் இல்லையா, ஸ்கானிங்கைப் பார்த்துச் சொல்லமாட்டார்களா என்ற கேள்விகூட வரலாம். தற்போதைய உலகப் பொருளாதார மையத்தில் சந்தையும் விலையும் பொருளை எங்கே வாங்குவது என்று முடிவு செய்யப்படுகின்றது.
அமெரிக்காவிலும் இந்தியாவிலும் ஒரே விதமான சலுகை இருந்தாலும் விலை அல்லது ஊதியம் என்று வரும் பட்சத்தில் இந்திய வைத்தியர்களின் ஊதியம் அமெரிக்க வைத்தியர்களின் ஊதியத்தைவிடப் பல மடங்கு குறைவாகவே இருப்பதனால் அமெரிக்க வைத்தியசாலைகள் இந்திய வைத்தியர்களை தமது ஆய்வுகள், வைத்தியத்திற்குப் பாவிப்பது இங்கு இயல்பான விடயமே.
மேலே கூறப்பட்ட உதாரணம் மாதிரி பல துறைகளில் கல்வி கற்றவர்கள் தமது அறிவை பண்டமாற்றம் வேறு செய்பவர்களாகவும் இருக்கின்றார்கள். இதன்மூலம் இந்தியாவிற்குள் செல்வந்தம் வரத்தொடங்கியுள்ளது. இந்த செல்வந்தத்தின் பிரதிபலிப்பை இந்தியாவின் பல மாநிலங்களிலும் தற்போது பார்க்கக்கூடியதாகவுள்ளது. அமெரிக்காவில் கோலிவூட்டில் வசிப்பவர்களின் வீடுகள், வாகனங்கள் போன்று பல் மடங்கு வசதிகளுடன் இந்தியாவிலும் வரத்தொடங்கியுள்ளது. இப்படியான ஆடம்பரமான வீடுகள் முன்பு இருந்தாலும் தற்போது பல இடங்களில் புதிது புதிதாகக் காணிகள் வீடுகளாக மாறுவதும் ஓய்வு நேரத்தைக் கழிக்கும் இருப்பிடங்கள், ஆங்காங்கே நீச்சல் குளங்கள் உருவாவதையும் பார்க்க முடிகின்றது. இந்தச் செல்வந்தர்களின் அன்றாட வாங்கும் திறமை இந்தியாவில் அதிகரித்துக்கொண்டே போகின்றது.
இன்னுமொரு உதாரணத்தைப் பார்ப்போமாயின், இந்தியாவின் பியர் கம்பனியான கிங் பிச்சர் நிறுவனத்தின் அதிபர் மிகக் குறுகிய காலத்தில் இந்தியாவில் ஒரு பெரிய செல்வந்தராகவும் உலகத்தில் மதிக்கப்படுபவராகவும் விளங்குகிறார். ஆரம்பத்தில் பியர் தொழிற்சாலையில் ஆரம்பித்து தற்போது கட்டிடங்கள் விற்றல், கிங் பிச்சர் என்ற விமானசேவை போன்றவற்றை நடத்தும் அளவுக்கு மிகவும் உயர்ந்துள்ளார். இந்த நிறுவனத்தின் கிங் பிச்சர் பியர் இந்தியாவில் மட்டுமன்றி உலக நாடுகளிலும் விற்பனையில் முன்னிலையிலும் உள்ளது. எனவே, இந்த 300 மில்லியன் மக்கள் இந்தியாவின் அரசியல் , பொருளாதார , சமூகத்திலும் பெரிய மாற்றங்களைக் கொண்டு வருவார்கள், வந்துள்ளனர்.
சினிமா, தொலைக்காட்சி, கணினி,
கைத்தொலைபேசி
தொலைக்காட்சி நிறுவனங்களை நடத்தும் பல நிறுவனங்கள் இன்று அரசியல் கட்சிகளுக்குப் பக்கபலமாய் நிற்பதோடு மட்டுமல்லாமல் சில கட்சிகள் கூட ஊடகத்துறையை தமது கையின் கீழ் கொண்டு வந்துள்ளது மட்டுமன்றி, தமது எதிர்கால அரசியல் நலன்களுக்காகவும் பாவிக்கின்றனர். இந்தத் துறையில் கூட பல நிறுவனங்கள் என்றும் இல்லாத அளவுக்கு செல்வந்தத்தைச் சேர்த்துள்ளார்கள்.
800 மில்லியன் மக்களின் எதிர்காலம்
300 மில்லியன் மக்கள் இப்படி ஓகோ என வாழ்ந்து கொண்டு இருக்கும் இதே இந்தியாவில் 800 மில்லியன் மக்கள் வறுமைக்கோட்டின் கீழ் தமது சீவியத்தை நாளாந்தம் நடத்திக் கொண்டுள்ளனர். இது என்ன 800 மில்லியன் மக்களா கஷ்டப்படுகிறார்கள் என வியப்பாகக்கூட இருக்கலாம் . ஆனால், இதுதான் இன்றைய இந்தியா என ஒரு வார்த்தையில் கூற முடியாது.
மத்திய அரசு, மாநில அரசு, தேர்தல், அரசாங்கம், அதிகாரம் எனவரும் பொழுது இந்த 800 மில்லியன் மக்களின் முடிவுகளிலும் பெரும்பாலும் அரசியல்வாதிகள் தங்கி இருப்பதால், இவர்களை இலகுவில் தூக்கி எறிய முடியாத நிலைகூட இங்கு உண்டு. எனவே, தற்போதைய அரசாங்கம் பல்லாயிரக்கணக்கான கிராமங்களில் விவசாய உற்பத்திக்கு அதிக நிதிகளை ஒதுக்கி இருந்தாலும் சரி, சத்துணவுத் திட்டத்தை நிறைவேற்றி இருந்தாலும் சரி, 800 மில்லியன் மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்வதாக இங்கு இல்லை. எனவே, இந்தியாவில் தற்போதும் வருங்காலங்களிலும் செல்வந்தர்களுக்கும் வறியவர்களுக்கும் இடையில் இன்னும் பெரிய இடைவெளி உருவாகுவதோடு நிற்காமல் இது முன்னைய தென்னாபிரிக்கா அப்பாட்ரைற் போன்று உருவாகினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இது ஒரு கடுமையான வார்த்தையாக இருந்தாலும் இப்படி நடக்காது என உறுதியாக முடியாது. அரசியல்வாதிகள் இலவசமாகத் தொலைக்காட்சி வழங்கி, தங்களின் கருத்துகளை மிக இலகுவாகப் பாமர மக்கள் மத்தியில் எடுத்துச் செல்கின்றனர். இது தற்போது அரசியல்வாதிகளுக்கு சிறந்த விடயமாக இருந்தாலும் தொலைக்காட்சி வேலை செய்யாதபோது பாமர மக்கள் விழித்துக்கொள்வார்களா என்பதும் இங்கு சந்தேகமே.
இந்தியாவிற்குள் வரும் செல்வத்தை சரியான முறையில் அனைத்து மக்களும் நுகரும் தன்மையை அதிகாரத்தில் உள்ளவர்கள் வழங்காவிடின் இந்த வறுமைப் போக்குத் தொடர்ந்து நீடிக்கும். அதிகாரத்தில் உள்ளவர்கள் என்பது அரசாங்கத்தின் அதிகாரத்தில் இருப்பவர்கள் நாட்டைக் கொண்டு நடத்துவதற்கான வரிப்பணத்தைச் செல்வந்தர்களிடமிருந்து பெறுதல் என்பதே இதன் அர்த்தமாகும்.
அமெரிக்கா ஐரோப்பிய நாடுகள்
என்றும் இல்லாத அளவுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் போட்டி போட்டுக் கொண்டு இந்தியாவுடன் பொருளாதார ஒப்பந்தங்கள் செய்வதையும் இராணுவப் பயிற்சிகள் செய்வதையும் இந்தக் கால கட்டங்களில் அவதானிக்க முடியும். கடைசியாக இந்தியாவிற்கு வந்துபோன இங்கிலாந்துப் பிரதமர் டேவிட் கமரோன் கூட பல திட்டங்களுடன் இந்தியாவிற்கு வந்தும் பெரிய அளவிலான ஒப்பந்தங்களை இவரால் செய்ய முடியவில்லை. இந்தியாவின் தொலைபேசி, கணினி, பாதைகள் அமைத்தல் சம்பந்தமான விடயங்களில் தமக்கும் இந்தியாவில் சந்தைப்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்படவேண்டும் என டேவிட் கமரோன் வலியுறுத்தியதோடு நிற்காமல் இரண்டு இலட்சத்துக்கு மேற்பட்ட இந்தியர்கள், பிரித்தானியாவில் பெரிய துறைகளில் பணிபுரிகின்றனர் எனவும் குறிப்பிட்டார். ஆனால், இந்தியாவோ உடனடியாக இது சம்பந்தமான விடயங்களுக்குப் பச்சைக்கொடி இன்னும் காட்டவில்லை.
இந்தியா கடந்த சில வருடங்களாக தமது ஏற்றுமதியில் பெரும் வளர்ச்சியை கண்டாலும், ஏனைய நாட்டு இறக்குமதிப் பொருட்கள், ஏனைய நாடுகள் இந்தியாவில் சந்தைப்படுத்தல் போன்றவை மிக ஆமை வேகத்தில் அல்லது அனுமதி மறுக்கப்படுவதையும் ஏனைய நாடுகள் இங்கு சுட்டிக்காட்டுகின்றன. ஆனால், இதே ஒத்த நிபந்தனைகள், மறுப்புகள், ஐரோப்பிய சந்தைகளிலும் இருப்பதால் இதை ஒரு சந்தை சம்பந்தமான போட்டி விடயமாக நோக்குவதே இங்கு முக்கியமானதாகும்.
ஐ.நா.வில் வீட்டோ அதிகாரம்
எமது நாடு என்றும் இல்லாத அளவுக்குப் பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளது. பொருளாதார ரீதியில் உலகத்தின் பல இடங்களில் எம்மால் போட்டி போட முடிகின்றது. நாம் பயங்கரவாதத்திற்கு எதிரானவர்கள். போரில் வல்லமை படைத்த நாடு. எனவே, எமக்கு ஐ.நா.வில் வீட்டோ அதிகாரம் தர வேண்டும் என்பதே இந்தியாவின் வேண்டுகோளாகும்.
இதேபோன்று, பொருளாதாரத்தில் வளர்ந்து வரும் பிரேசில், தென்னாபிரிக்கா நாடுகளும் தமக்கும் வீற்றோ அதிகாரம் தர வேண்டும் எனக் கேட்டுள்ளனர்.
இந்தியா இதற்கும் ஒரு படி மேல் சென்று இராஜதந்திர மட்டத்தில் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளின் அனுசரணையை நாடியுள்ளனர். தற்போதைய வீற்றோ அதிகாரத்தில் உள்ள நாடுகளை மாற்றவேண்டும் எனவும், இல்லாவிடில் வீட்டோ அதிகார நாடுகளின் எண்ணிக்கையைக் கூட்டவேண்டும் எனவும் இந்தியா கேட்டுள்ளது. ஆனால், தற்போது வீட்டோ அதிகாரத்தை வைத்திருக்கும் நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், இங்கிலாந்து, சீனா போன்ற நாடுகள் இந்த விடயம் சம்பந்தமாகத் தொடர்ந்தும் மௌனம் சாதித்து வருகின்றனர். எனவே, ஐ.நா.வில் இங்கிலாந்து அதிகார விடயத்தில் இதுவரை இந்தியாவிற்கு வெற்றிகிடைக்கவில்லை என்றாலும், இந்தியா இந்த விடயத்தில் தமது இராஜதந்திரக் கதவுகளைத் தொடர்ந்தும் திறந்தே வைத்துள்ளது.
300 மில்லியன் இந்தியர்களின் பொருளாதார வளர்ச்சி இந்திய நாட்டுக்கு ஒரு புதிய தெம்பைக் கொடுப்பதோடு நிற்காமல் இந்தியாவைத் தேடி ஏனைய உலக நாடுகள் போட்டி போடுவதைப் பார்க்கும் பொழுது இந்திய மக்களின் கல்வி, திறமைக்கு அப்பால் மலிவாக இந்தியாவில் எல்லாவற்றையும் பெற்றுக்கொள்ளலாம் என்பதையும் இது இன்றைய திறந்த பொருளாதார முறையில், பல நாடுகளுக்கு மத்தியில் நடக்கும் ஒரு சந்தை சம்பந்தமானது என்றும் கூறலாம்.
300 மில்லியன் மக்களின் வளர்ச்சி அனல் வேகத்தில் போவதால் இதே நாட்டில் உள்ள 800 மில்லியன் மக்களின் வாழ்க்கை ஏதோ விதத்தில் மறைக்கப்படுவதற்கும் வாய்ப்பு உண்டு. எனவே, இதை அடிப்படையாக வைத்து இந்தியாவை தற்போதைய நிலையில் ஒரு பொருளாதார ரீதியில் ஒரு வல்லரசு என்று கூறுவதில் தப்பொன்றும் இல்லை. ஆனால், சமூக அரசியல் பாதுகாப்பு என்று வரும்பொழுது இந்தியா ஒரு வல்லரசு எனத் தற்பொழுது கூற முடியாது. ஆனால், இந்த அத்தஸ்தைப் பெறுவதற்கு இந்தியா தொடர்ந்தும் முயற்சிசெய்யும் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: